செவ்வாய், 10 ஜனவரி, 2012

பீகாரில் 2 மணிநேரத்தில் 61 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்: 3 பேர் கைது

அராரியா: பீகார் மாநிலத்தில் வெறும் இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் மிகக்கொடூரமாக குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டதில் உள்ளது கபார்போரா கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத ஏழை மக்கள் ஆவர்.
கடந்த சனிக்கிழமை அந்த கிராமத்திற்கு 3 இளைஞர்கள் வந்தனர். தாங்கள் ஒரு என்ஜிஓவைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடத்த வந்துள்ளதாகவும் தெரிவி்ததனர்.
மேலும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு மருந்து மாத்திரைகளும், ரூ.600 ரொக்கமும் கொடுக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.

இதை கேட்ட அந்த படிப்பறிவில்லாத பெண்கள் ஆபரேஷனுக்கு சம்மதித்தனர். அவர்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் கதற, கதற ஆபரேஷன் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுகோஸ் கூட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மீதமானது என்று கிராமத்தினர் தெரிவித்தனர். இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஆபரேஷன் செய்து கொண்ட பெண்களில் பலரது நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அராரியா மாவட்ட எஸ்பி ஷிவ்தீப் லாண்டே கூறியதாவது,

ஆபரேஷன் செய்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளோம். அந்த கிராம மக்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அந்த பெண்களுக்கு ரூ.600க்கும் குறைவான பணமும், காலாவதியான மருந்துகளும் கொடுத்துள்ளனர் என்றார்.

இதையடுத்து புருனியா முகவரியில் பதிவு செய்யப்பட்ட ஜெய் அம்பே நலச் சங்கம் என்னும் என்ஜிஓ அலுவலகத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி தபால் தலைகள் மற்றும் போலி மருத்துவ சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த என்ஜிஓ அமைப்பின் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பாட்னாவில் பதுங்கியிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக