சனி, 28 ஜனவரி, 2012

Chennai ஐ.டி., பூங்கா, வளாகங்கள் காலி..பயன்படுத்துவோர் இல்லை

சென்னையில் ஐ.டி., பூங்கா, அலுவலக வளாகங்களை பிற வர்த்தகப் பயன்பாட்டுக்கு மாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, அவற்றை இடித்து குடியிருப்புகள் கட்ட, கட்டுமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முதல்கட்டமாக சென்னை அடையாறில், 19 மாடி ஐ.டி., பூங்காவை இடிக்கும் பணி, அண்மையில் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஐ.டி., பூங்கா மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க, நிலம் ஒதுக்குவது, கட்டடம் கட்டுவது ஆகியவற்றில், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால், ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த நிலையில், புதிய ஐ.டி., நிறுவனங்களின் வருகையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, ஏரா ளமான ஐ.டி., பூங்கா, வளாகங்கள் பயன்படுத்துவோர் இன்றி, காலியாகக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காற்று வாங்கும் கட்டடங்கள்: இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.டி., வளாக உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: இப்போதைய நிலையில் சென்னையில் மட்டும், ஆறு லட்சம் சதுர அடி வரையிலான ஐ.டி., வளாக இடங்கள் காலியாக உள்ளன. இந்த கட்டடங்களை பிற வர்த்தக அலுவலகப் பயன்பாடுகளுக்கு மாற்ற வேண்டுமானால், கூடுதல் எப்.எஸ். ஐ.,க்கு ஈடான தொகையை சதுர அடி அடிப்படையில், சி.எம். டி.ஏ.,வுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு கூடுதல் செலவு செய்து மாற்றினாலும், வர்த்தகப் பயன்பாட்டில் குறைவான வருவாயே கிடைக்கும். எனவே, கட்டடங்களை இடித்து குடியிருப்புகளை கட்டும் திட்டங்களில், ஐ.டி., பூங்கா நில உரிமையாளர்கள் ஆர்வம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
19 மாடி ஐ.டி., பூங்கா: சென்னை அடையாறு எல்.பி., சாலையில், 20 கோடி ரூபாய் மதிப்பில், 19 தளங்கள் கொண்ட ஐ.டி., பூங்கா கட்ட, சுரேந்திரா நிறுவனம் திட்டமிட்டது. 2006ல் சி.எம்.டி.ஏ., ஒப்புதல் கிடைத்து,
மொத்தம், 26 ஆயிரத்து, 262 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இந்த ஐ.டி., பூங்கா கட்டும் பணிகள், 2008ல் முடிக்கப்பட்டன. வெளிப்புற பணிகள் எதுவும் இன்றி, அடிப்படை கட்டுமானப் பணியான தூண்கள், தளங்கள் வரை முடிந்து, ஐ.டி., பூங்காவாக பதிவு செய்யப்பட்ட இக்கட்டடத்தை, கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக, எந்த ஐ.டி., நிறுவனமும் பயன்படுத்த முன்வரவில்லை.
கட்டடம் இடிப்பு: இது தொடர்பாக, சுரேந்திரா நிறுவனத்தினர் கூறியதாவது: இக்கட்டடத்தை அப்படியே வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. வர்த்தகத் தேவைக்கு பயன்படுத்துவதானால், கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. அது வே, குடியிருப்பாக மாற்றினால், ஒரு சதுர அடி, 10 முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டு, கட்டடத்தை முழுவதுமாக இடித்து, புதிதாக அடுக்கு மாடி அபார்ட்மென்டை கட்டுவது என, நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, சென்னையைச் சேர்ந்த ரமணீயம் நிறுவனத்துடன் 
 ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இடிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். வேறு வழி இல்லை? இக்கட்டடங்களை இடிப்பது குறித்து, தொழில் முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் சதானந்த் கூறியதாவது: ஐ.டி., கட்டடங்களை குடியிருப்பாக மாற்றுவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. குறிப்பாக, இக்கட்டடங்களில் ஒரு தளமானது, 3.5 மீட்டர் உயரத்திலும், தூண்களுக்கான இடைவெளி, 25 அடி வரையும் இருக்கும். ஆனால், குடியிருப்பு கட்டடங்களுக்கு அதிகபட்சம், 3 மீட்டர் உயரமும், தூண்களுக்கான இடைவெளி, 10 அடி இருந்தால் போதும். இது தவிர, குடியிருப்புகளில் ஒவ்வொரு தளத்திலும், குறைந்தபட்சம் ஐந்து முதல் 10 வீடுகள் அமையும். அப்படி அமையும் நிலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு அல்லது மூன்று கழிவறைகள், சமையலறை கழிவு நீர் வெளியேற என, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது, ஏற்கனவே கட்டப்பட்ட ஐ.டி., கட்டடங்களில் சாத்தியமல்ல. எனவே, முழுவதையும் இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு சதானந்த் கூறினார்.
- வி.கிருஷ்ணமூர்த்தி - இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக