திங்கள், 23 ஜனவரி, 2012

சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!


மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’ எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.
இது தவிர அஃப்ராஸ், பின்லாதின், சௌதி கேட்டரிங் போன்ற நிறுவனங்களும் சிற்சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றன.
சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். அதாவது லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் பஹா எல்தின் ஹரிரி உருவாக்கிய இந்நிறுவனத்தில்சௌதியின் முன்னாள் மன்னர் அப்துல் அஜீஸின் குடும்பமும் முக்கியமான பங்குதாரராக கருதப்படுகிறது. இது சௌதியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனமே கேகேஐஏ வில் பெரிய ஒப்பந்ததாரராக நீடித்து வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவரும் கேகேஐஏ சௌதி ஓஜரில் பெரும்பாலானோர் வங்கதேசத்தினர் (பங்களா தேஷ்). இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் குறைந்த அளவில் வேலை செய்து வருகிறார்கள். விமானநிலையம், ஊழியர்களுக்கான விடுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இதில் விமான நிலைய பராமரிப்பு பணிகளை ஓராளவு செய்து வந்தாலும், விடுதியின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கும் போதிலும் சௌதி ஓஜர் விமான நிலையத்தின் மீப்பெரும் ஒப்பந்த நிறுவனமாக தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு அது ஆளும் கும்பலைச் சார்ந்த நிறுவனம் என்பதைத் தவிர வேறொன்றும் காரணமில்லை.
இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு நாடுகளிலோ இரண்டு வகை தொழிலாளர்கள் இருப்பார்கள், நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள். ஆனால் சௌதியைப் பொருத்தவரை அனைவருமே ஒப்பந்தத் தொழிலளர்கள் தாம். நிரந்தரத் தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சங்கமாக கூடும் உரிமையையோ, தங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் நடைமுறையையோ சௌதியில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, வேறு சலுகைகளோ நிறுவனத்தின், உயரதிகாரிகளின் விருப்பத்தைப் பொருத்தது. உரிமையாக யாரும் கோர முடியாது. இதனால் கேள்வி முறையின்றி நிர்வாகத்திற்கு அடிபணிபவர்களும், கருங்காலிகளுமே இதுபோன்ற சலுகைகளையும் பதவி உயர்வையும் பெறுவது சௌதியில் சாதாரணம்.

இந்த அடிப்படையில் கடைநிலை ஊழியர்களிலிருந்தே கருங்காலிகளைத் தேர்ந்தெடுத்து ஃபோர்மேன்களாகவும், சூபர்வைசர்களாகவும் இன்னும் சில கங்காணி பதவிகளில் அமரவைத்து (சில ஆண்டுகளுக்கு முன் கடைநிலை ஊழியராக வந்த ஒருவர்தான் இன்று மருத்துவ அதிகாரி. ஊழியர்களை பரிசோதித்து இவர் அங்கீகரித்தால் மட்டுமே உடல்நலக் குறைவுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியும்) உபரிநேர வேலைச் சுரண்டல், விடுதிகளில் அடிப்படை உரிமைகளைக் கூட செய்து தராமல் தொழிலாளர்களை ஏய்த்து வருகிறார்கள். இன்று சௌதி ஓஜர் நிறுவனம் இந்த கங்காணிகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்திருக்கிறது.
தற்போது இந்நிறுவனம் முனைய(டெர்மினல்) துப்புறவு பணியாளர்களை மட்டும் லிபனெட் எனும் நிறுவனத்திற்கு உள் ஒப்பந்தம் மூலம் மாற்றியிருக்கிறது. தொழிலாளர்களிடம் முறைப்படி அறிவிக்கவோ, தொழிலாளர்களுக்கான புதிய ஒப்பந்தங்களோ எதுவுமின்றி, சௌதி ஓஜரில் பணிபுரிந்தவர்கள் அப்படியே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தினசரி வேலை செய்யும் ஊழியர்கள் நேற்று சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக செய்தவர்கள் இன்று புதிய நிறுவனத்திற்காக செய்கிறார்கள். ஐநூறு ரியால் அடிப்படை சம்பளத்தில் வேலை செய்தவர்கள் புதிய நிறுவனத்தில் நூறு ரியால் மட்டும் அதிகம் தருவதாக வாய் மொழியாக கூறியிருக்கிறார்கள்.
பகரமாக எட்டுமணி நேரத்திற்கு பதிலாக 12 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். அது உபரி நேர வேலையாகவும் கணக்கிடப்படாது. அதாவது நான்கு மணி நேரம் அதிகமாக வேலை வாங்கிவிட்டு 100 ரியால் மட்டும் அதிகமாக கொடுக்கப் போகிறார்கள். இந்த 12 மணி நேரத்தில் தேனீர் குடிப்பதற்குக் கூட இடைவெளி எடுக்கக் கூடாது, உணவு இடைவேளை (வேலை நேரமாக கணக்கிடப்படுவதில்லை என்ற போதிலும்) ஒரு மணிநேரத்திலிருந்து அரை மணியாக குறைப்பு, அதுவும் அறைக்குச் சென்று சாப்பிடாமல் வேலை செய்யும் இடத்திற்கே கொண்டு வந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் அசுத்தம் ஏதும் கண்டுபிடிக்கப் பட்டால் தொடர்புடைய பணியாளரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் அறைக்கு அனுப்பிவிட்டு அன்றைய தினத்தை பணிக்கு வராத நாளாக கணக்கிடுவது உள்ளிட்ட பல அடக்குமுறை விதிகளை ஏற்படுத்தி தொழிலாளர்களை வதைக்கிறது.
மட்டுமல்லாது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பில் ஊர் சென்று வரலாம் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றியிருக்கிறது. அதுவும் ஒருவழி விமான பயணச்சீட்டு மட்டுமே லிபனெட் கொடுக்கும் இன்னொரு வழி பயணச்சீட்டை ஊழியர் தன்னுடைய சொந்த செலவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கிரமாக அறிவித்து வருகிறது. இவைகளை எதிர்த்து முணுமுணுத்த ஒரு தொழிலாளியை தனியறைக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள்.
மறுபுறம் சௌதி ஓஜர் நிறுவனமோ புதிய நிறுவனத்தின் அடக்குமுறை பிடிக்காமல் ”நாங்கள் சௌதி ஓஜரிலேயே இருக்கிறோம் வேறு பகுதிகளில் வேலை கொடுங்கள்” என்று வருபவர்களை எந்த வாய்ப்புக்கும் இடமில்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பி வைக்கிறது. மட்டுமல்லாமல் படிப்படியாக எல்லா பகுதிகளையும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. புதிய நிறுவனத்தின் அடக்குமுறை தாங்காமல் திரும்பி வருபவர்களுக்கு சாப்பாட்டு டோக்கன்களை கூட கொடுக்காமல் பட்டினி போடுகிறது. சௌதி ஓஜரிலேயே வேலை தாருங்கள் என்று திரும்பி வந்தவர்களை இருபது நாட்களுக்கும் மேலாக வேலை கொடுக்காமல் வைத்திருந்து கடந்த வாரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பிவிட்டது. அதிகாரிகளுக்கு வேண்டிய சிலரை மட்டும் தண்டனை மாறுதலாக ஜித்தாவுக்கு அனுப்பிவைத்திருக்கிறது.
இந்த அநீதிகளுக்கு எதிராக ஆங்காங்கே கிளம்பிய முணுமுணுப்புகள் திரளத் தொடங்கிய வேளையில், நாட்டுக்கு திருப்பி அனுப்பிய நிகழ்வு தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே தொழிலாளர்களிடையே ஏற்படுத்தப்பட்ட போராட்ட உணர்வு சிதறடிக்கப் பட்டிருக்கிறது, மட்டுமல்லாது போராட்ட முயற்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. கொஞ்சம் வைராக்கியம் காட்டிய தொழிலாளர்களும் நாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிகழ்வின் பிறகு தங்கள் விதியை நொந்தபடி வேலைக்கு திரும்பி விட்டார்கள்.
உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள். ஆனால், மறுபக்கம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக வேலை செய்துவரும் வயதான ஒரு தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே கூறுகிறார், “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”
இது நம்பிக்கையா? இயலாமையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் குடும்பத்தைக் காணாது கடல் கடந்து வேலை செய்தாலும் வளமையை பெறமுடியாமல் தடுப்பது, வர்க்க உணர்வு கொள்ளாமல் இருப்பதும், துன்பங்களின் கண்ணீரை கடவுளின் மாயக்கையை எடுத்து துடைத்துக் கொள்ள நினைப்பதும் தான் என்பது அவருக்கு தெரியவில்லை. மத வேறுபாடுகளோ, நாட்டின் எல்லைக் கோடுகளோ சுரண்டுபவர்களிடம் எந்த பேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் சுரண்டும் வர்க்கமாய் ஒன்றிணைந்து நிற்கிறார்கள். ஆனால் ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் முதுகில் உரைத்த பின்பும் பிரார்த்தனையோடு முடித்துக் கொள்வதா? முயற்சிகள் தொடர்கின்றன. பலனளிக்குமா? காத்திருப்போம்.
___________________________________________________________________
-    வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக