திங்கள், 23 ஜனவரி, 2012

கையில ரிமோட் வேற கிடையாது...நண்பனாக இல்லாத நண்பன்


இன்றைய கல்வி அமைப்பு வெற்றுக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது. புரிந்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயர் கல்வி மையங்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க ஊக்குவிப்பதில்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையே திறமை என்று சொல்கிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதில்லை. இவையெல்லாம் மிகவும் தவறு என்ற செய்தியை மிகவும் வேடிக்கையான முறையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.
த்ரீ இடியட்ஸ் என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளையும் ஆம்ப்ளிஃபையர்களையும் தகர்த்த படத்தின் அப்பட்டமான நகல்தான் நண்பன். சொந்தமாக எடுக்கப்படும் சமூக அக்கறை இல்லாத படங்களுக்கு மத்தியில் நகல் என்றாலும் நல்ல செய்தியைச் சொல்கிறது என்பதால் இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.
மூலப் படைப்பாளிகளுக்கு பெயரளவிலான அங்கீகாரத்தை வெளிப்படையாகத் தந்திருக்கிறார்கள். இந்தியப் படம் என்பதால் வேறு வழியில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் நல்லது செஞ்சா பாராட்டத்தானே வேண்டும். பாராட்டிவிடுவோம்.
நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மூன்று நண்பர்கள். அவர்களில் கதாநாயகன் எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவன். ஒரு ஸ்கூல்ல படிக்கணும்னா ஃபீஸோ அனுமதியோ தேவையில்லை. யூனிஃபார்ம் இருந்தா போதும். நீ பாட்டுக்கு எதாவது கிளாஸ்ல உட்கார்ந்து படி. யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க. அப்படியே கண்டுபிடிச்சிட்டா, வேறோரு ஸ்கூல்ல வேறொரு கிளாஸ்ல உட்கார்ந்து படிச்சிக்கோ என்பது போன்ற அரிய ஐடியாக்களை அவிழ்த்துவிடுபவன். அவ்வப்போது கல்வி அமைப்பைக் கேள்வி கேட்பவன். அவனுடைய அதி புத்திசாலித்தனத்தால் ஆசிரியர்கள் அவனை வகுப்புகளில் இருந்து வெளியே அனுப்பினாலும், ஊருக்கு உபதேசிப்பதை நீ முதலில் பின்பற்று என்ற உயரிய தத்துவத்தின்படி, திறந்திருக்கும் ஏதாவது ஒரு வகுப்பில் நுழைந்து அங்கு கற்றுத் தரப்படும் ஏதோ ஒரு பாடத்தைப் படித்துக்கொள்கிறான். எல்லாமே பாடம்தானே. வழக்கம் போல், யாரும் எதிர்பார்க்காதவகையில் நான்கு வருடப் படிப்பின் முடிவில் அவனே முதலிடம் பெறுகிறான்.
அதோடு நண்பர்கள் வேறு வேறு திசையில் போய்விடுகிறார்கள். அந்தக் கல்லூரியில் இவர்களுக்குப் போட்டியாக ஒரு மாணவனும் இருந்திருக்கிறான். ஆசிரியர்களுக்கும் கல்வி அமைப்புக்கும் படு விசுவாசமான அவன், பத்து வருடங்கள் கழித்து யார் வெற்றிகரமாக இருக்கப்போகிறார்கள் பார்ப்போம் என்று இந்த மூன்று நண்பர்களிடம் ஒரு சவால் விட்டிருப்பான். அதன்படியே அமெரிக்காவில் மிகப் பெரிய வேலை, அரண்மனை போன்ற வீடு, ‘அழகான’ மனைவி, அதி வேகமான கார் என வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அவன் பழைய நண்பர்களை பத்து வருடங்கள் கழித்து வரவழைத்து எள்ளிநகையாடுகிறான். மூன்று நண்பர்களில் இரண்டு பேரைத்தான் பார்க்க முடிந்திருக்கும் முன்றாவது நபரான கதாநாயகனை கல்லுரி வாழ்க்கைக்குப் பிறகு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாரும் அவனைத் தேடிப் புறப்படுவதாகத்தான் படம் ஆரம்பிக்கும். கல்லூரி நினைவுகள் பிளாஷ் பேக் காட்சிகளாக விரியும். கடைசியில் கதாநாயகனைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள். அவனோ யாரும் எதிர்பார்க்காத உச்சியை எட்டியிருப்பான். அமெரிக்க அல்டாப்பு நண்பன் தன் தோல்வியை ஒப்புக்கொள்வான். அப்படியாக, சம்பிரதாயமான கல்வியைவிட மாற்றுக் கல்வியே சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியவரும்.
கதாநாயகன் வித்தியாசமாகச் சிந்தித்து அரங்கேற்றும் விஷயங்கள் இருக்கின்றனவே… திரையரங்கில் விளக்கை அணைக்கும்போது கூடவே மூளையையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டுப் பார்த்தால் படு பிரமாதமாகவே தோன்றும். அது நம் பார்வையாளர்களுக்கு கை வந்த கலை என்பதால், தமிழக பாக்ஸ் ஆபீஸ்களையும் இந்தப் படம் தகர்க்கவே செய்யும்.
மூன்று நண்பர்களில் ஒருவன் புகைப்படக் கலைஞராக வரவேண்டும் என்ற ஆசையை பல வருடங்களாக மனதுக்குள் புதைத்துக்கொண்டு பொறியியல் படித்துவருகிறான். ஒரு இனிய நன்னாளில், கதாநாயகனின் உபதேசத்தைக் கேட்டு அப்பாவிடம் போய் பேசுகிறான். எனக்குப் பிடிச்ச வேலையைச் செஞ்சா நான் சந்தோஷமா இருப்பேன் அப்பா என்கிறான். அவரும் எனக்கு இதுவரை தெரியாமப்போச்சே என்று சொல்லி மகனுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். பையன் மாபெரும் புகைப்படக் கலைஞராக ஆகியேவிடுகிறான்.
இன்னொரு நண்பன் மிகவும் பயந்தாங்கொள்ளியாக, மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான். அவனுக்கும் நாயகன் உற்சாகம் ஊட்டுகிறான். நேர்முகத் தேர்வில் நேர்மையாக தைரியமாகப் பேசி வெற்றி பெற்றுவிடுகிறான். அதற்கு முன்னால் ஒரு அபாரமான காட்சி வருகிறது. பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் அவனுடைய அப்பாவுக்கு உயிர் போகும் அளவுக்கு நோய் முற்றிவிடவே நாயகனுக்குத் தகவல் தெரியவருகிறது. விரைந்து நண்பனின் வீட்டுக்குப் போகிறான். கூடவே வந்த நாயகி அரை மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்த்தால்தான் காப்பாற்ற முடியும் என்று சொல்கிறாள். ஆம்புலன்ஸுக்குக் காத்திருக்க நேரமில்லை. எனவே, ஸ்கூட்டரில் பின்பக்கத்தில் உட்காரவைத்து நாயகன் அவரை அழைத்துச் செல்கிறான்.
இந்தக் காட்சியைப் பார்த்த என் மனைவி, ஸ்கூட்டரில் வைத்துச் செல்ல முடியும் என்றால், ஒரு டாக்ஸியிலோ ஆட்டோவிலோ கூட கொண்டு செல்லலாமே… அதுகூடவா கிடைக்கவில்லை என்று கேட்டாள். ஆட்டோ, டாக்ஸி என்றால் மருத்துவமனை வாசல்வரைதான் கொண்டு செல்ல முடியும். ஸ்கூட்டர் என்றால் ஆப்பரேஷன் தியேட்டர் வரை கொண்டு செல்ல முடியும் என்று சொன்னேன். என் மனைவி தலையில் அடித்துக்கொண்டு, உனக்கு ஏன் சினிமால இன்னும் சான்ஸ் கிடைக்கலைன்னு இப்பத்தான் புரியுது. இப்படி கேணத்தனமா எல்லாம் யோசிச்சா உன் கூட யார் வொர்க் பண்ண வருவாங்க என்று திட்டினாள். ஆனால், அடுத்த காட்சியில் நான் சொன்னபடியே நாயகன் நோயாளியை ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் வரவேற்பறை, காரிடார் என் வரிசையாகக் கடந்து நேராக ஆப்பரேஷன் தியயேட்டருக்குக் கொண்டு சென்ற காட்சி வந்தது. தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளந்தது. என் மனைவியும் கண்களில் நீர் கசிய அந்தக் காட்சியில் மெய் மறந்து ஒன்றிப் போய்விட்டாள். என் கண்களும் குளமாகின (என் விதியை நினைத்து).
படத்தில் மாணவர்கள் பொசுக் பொசுக்கென்று தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதில் இயக்குநரின் சாதி சார்ந்த சமத்துவ உணர்வு வெளிப்படுவதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். முதலில் இடைநிலை சாதியைச் சேர்ந்த கல்லூரி முதல்வரின் மகன், அப்பாவின் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறான். அடுத்ததாக, கடைநிலை சாதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை நடத்துபவரின் மகன் தற்கொலை செய்துகொள்கிறான். கதாநாயகனின் உயர் சாதி நண்பன்கூட தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். ஆனால், அவன் உயிர் பிழைத்துவிடுகிறான். அவன் உயர் சாதியைச் சேர்ந்தவன் என்பதால் அவனை மட்டும் இயக்குநர் கொல்லவில்லை என்று அரசியல் வாதங்கள் அனல் பறக்க இதில் இடம் இருக்கிறது. என்றாலும், கதாநாயகனின் நண்பன் என்பதால் அவன் உயிர்பிழைத்துவிடுகிறான் என்பதுதான் என்னளவிலான புரிதல்.
நாலு பேருக்கு நல்ல செய்தி சொல்றதுன்னா எதுவுமே தப்பு இல்லை என்ற உயரிய லட்சியத்துடன் இயக்குநர் களமிறங்கியிருப்பது படத்தைப் பார்க்கும்போது நன்கு புலப்படுகிறது. சில சாம்பிள்கள் சொல்கிறேன்.
நீங்கள் ஒரு பெரும் கோடீஸ்வரர். ஆனால் உங்கள் அப்பா உங்களைப் படிக்கவைக்கவில்லை. முகத்துக்கு முன்னால் மதிக்கும் ஊரார் முதுகுக்குப் பின்னால் உங்களைக் கை நாட்டு என்று கேலி செய்கிறார்கள். உங்கள் மகனுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று நினைகிறீர்கள். உங்கள் மகனைப் பள்ளியில் சேர்க்கிறீர்கள். ஆனால், உங்களுடைய சின்னஞ்சிறு மகனுக்கு படிப்பு வராமல் போய்விடுகிறது. என்ன செய்வீர்கள்? ஒன்று உங்கள் பையனை அதைவிடச் சிறந்த பள்ளியில் படிக்க வைப்பீர்கள். அல்லது மிகச் சிறந்த ஆசிரியர்களை வீட்டுக்கு வந்து பாடம் சொல்லித்தரச் சொல்வீர்கள். இல்லையா? நண்பன் படத்தில் வரும் கோடீஸ்வரர் என்ன செய்கிறார் தெரியுமா? மகனே நீ படிக்கவே வேண்டாம். உன் பெயரில் வேறொருவன் படிக்கட்டும். அவன் படித்து இன்ஜினியர் பட்டம் பெறட்டும். அந்தப் பட்டத்தை நம் வீட்டில் நடு ஹாலில் மாட்டி வைத்து அழகு பார்ப்போம். ஊர் உலகம் உன்னை கொண்டாடும். நானும் சந்தோஷப்படுவேன் என்று சொல்கிறார்.
பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு மாணவரும் இரவு பகல் பாராமல் விழுந்து விழுந்து படித்து நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். மிக நேர்மையான, முன்னணி கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்கு நான்கு லட்சம் பேர் விண்ணப்பம் செய்தால் 200 பேருக்கு மட்டுமே மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும். அப்போது அந்த 200 பேரின் வெற்றியை என்னவென்று அழைப்பீர்கள்? ஓட்டப் பந்தயத்தில் அதி வேகமாக ஓடி வெற்றி பெற்றவர்கள் என்று சொல்வீர்களா? குயில் தன் முட்டையை காக்கையின் கூட்டில் போட்டுவிட்டு காக்கையின் முட்டையை கீழே தள்ளிக் கொல்வதுபோல் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்வீர்களா?  இந்தப் படத்தில் அப்படித்தான் சொல்லப்படுகிறது. போதாத குறையாக அந்த கல்லூரி முதல்வர் இதை விளக்கமாகக் காட்டுவதற்காக குயில் முட்டைகளுடன் கல்லூரிக்குள் நுழைகிறார்!
என்னதான் தூய/உரைநடைத் தமிழ் இன்றைய இளைய தலைமுறைக்குப் புரிவதில்லை என்று வைத்துக்கொண்டாலும் கற்பழிப்பு என்ற வார்த்தைக்கும் கற்பித்தல் என்ற வார்த்தைக்குமான வித்தியாசம் 20 வயது இன்ஜினியரிங் மாணவனுக்குத் தெரியாமலா இருக்கும்? என்னதான் வெளி நாட்டிலேயே அதிக நாட்களை அந்த மாணவன் கழித்திருந்தாலும் விசுவாசத்துக்கும் குசுவாசத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கும்? படத்தின் உச்சபட்ச நகைச்சுவைக் காட்சி இதை மையமாக வைத்துத்தான் எழுதப்பட்டிருக்கிறது.
விருமாண்டி என்ற டிபிக்கல் தென் தமிழ் நாட்டுப் பெயர் கொண்ட கல்லூரி முதல்வர் தன் மகளின் திருமணத்தை வட இந்திய பாணியில் மல்லிகைச் சரம் முகத்தை மூடும்படியான தலைப்பாகையை மணமகனுக்கு அணிவித்து நடத்துவாரா? மாப்பிள்ளை வட இந்தியராக இருந்தாலும் பெண் வீட்டாரின் வழக்கப்படிதானே திருமணம் நடக்கும்? ஓ… மூலப்படமான ஹிந்தியில் அப்படிக் காட்டப்பட்டதால் இங்கும் அப்படியே ஈயடிச்சான் காப்பியா? ஷங்கர் சார்… மூலப்படைப்பு மீதான உங்களோட விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது.
கதாநாயகின் அக்காவுக்கு பிரசவ நேரத்தில் பெரும் நெருக்கடி வருகிறது. தாய் எவ்வளவு முக்கியும் குழந்தை வெளியேவரவில்லை. சக்-ஷன் பைப் மூலம் குழந்தையின் தலையை இழுத்து வெளியே எடுக்கும் ஒரு வழி இருக்கிறது. ஆனால், தாயை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாமல் பேய் மழை பெய்கிறது. இந்த நிலையில் கதாநாயகன் அதிரடியாக யோசித்து ஒரு விஷயம் செய்கிறான். அதாவது, வேக்குவம் க்ளீனரின் அழுத்தத்தைக் குறைத்து அதைப் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்கிறான். வேக்குவம் க்ளீனரில் இருந்து வெளியாகும் காற்றின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். படத்தில் காட்டப்படுவதுபோல் 0.5-க்கு அதைக் குறைப்பது சாத்தியமே இல்லை. கதாநாயகன் கண்டுபிடித்த இன்வர்ட்டர் இயந்திரமானது மின்சாரத்தின் அளவைத்தான் கட்டுப்படுத்தும். வேக்குவம் க்ளீனரில் இருந்து வெளியாகும் அழுத்தத்தை அல்ல. சரி… வேக்குவம் க்ளீனருக்கான மின்சாரத்தின் அளவைக் குறைத்தால் அதில் இருந்து வெளியாகும் காற்றின் அழுத்தமும் குறையும் அல்லவா என்று ஒரு கேள்வி உங்களுக்கு வரக்கூடும். ஆனால், விஷயம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சார அளவு குறைந்தால் வேக்குவம் க்ளீனர் வேலை செய்யாது. வேக்குவம் க்ளீனரின் குறைந்தபட்ச அழுத்தம் என்பது நிச்சயம் 0.5 ஐ விட பல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். எனவே, மின்சாரத்தை இன்வர்ட்டர் மூலம் குறைத்து வேக்குவம் க்ளீனரின் அழுத்தத்தைக் குறைப்பது சாத்தியமே இல்லை. அதுவும்போக, கிருமிகள் நிறைந்த ஏர்ஹார்ன் டியூபைப் பயன்படுத்தி பிரசவம் பார்க்கிறார். குத்துங்க எசமான் குத்துங்க. உங்களுக்கு இல்லாதா?
எஜமானரின் மகனுடைய பெயரில் படிப்பை முடிக்கும் கதாநாயகன் அவருக்குக் கொடுத்த வாக்கின்படி யாரிடமும் சொல்லாமல் கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறான். வேறு எங்கும் இல்லை நண்பர்களே… தனுஷ்கோடிக்குத்தான். அங்கிருந்தபடி ஒரு மாற்றுக் கல்விக்கூடத்தை நடத்திவருகிறான். 400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுகிறான். உலகப் புகழ் பெற்றவனாகவும் ஆகிவிடுகிறான். ஆனால், அவனுடைய நண்பர்கள், காதலி ஆகியோருக்கு மட்டும் அவன் எங்கிருக்கிறான் என்பது தெரியாதாம். இத்தனைக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியதே அந்த கதாநாயகன்தான்.
கல்லூரியில் சேரும்போது மாண்வர்களின் நிரந்தர முகவரி என்ற ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். நாயகியின் அப்பாதான் கல்லூரி முதல்வர். கதாநாயகனின் வீட்டு முகவரி என்பது அவருக்கு எளிதில் தெரிந்துகொள்ள முடிந்த ஒன்றுதான். ஆனால், பாவம் எல்லாரும் பத்து வருடங்களாக அந்த முகவரியைத் தெரிந்துகொள்ள முடியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார்களாம்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பத்து வருடங்கள் கழித்து ஊட்டியில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்குபோய் வழியில் போகும் யாரோ ஒருவரிடம் கேட்கிறார்கள். அவர் தெளிவாக கதாநாயகன் வீட்டுக்கு வழி சொல்லி அனுப்புகிறார். அந்த அளவுக்கு பெரும் செல்வந்தராம் நாயகனின் அப்பா. ஆனால், பாவம் எவ்வளவோ தேடியும் நண்பர்களுக்கு அதுவரை கிடைக்கவே இல்லையாம். இத்தனைக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரும் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். கதாநாயகன் மட்டும் தன்னுடைய வீட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்லவே இல்லையாம்.
அப்பறம் நாயகியை நாயகன் தன் பக்கம் திருப்பும் முதல் காட்சி இருக்கிறதே… படு டமாஷானது. நாயகிக்கு ஒரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்திருக்கிறார்களாம். அவன் பணத்திலேயே குறியாக இருப்பவனாம். அதை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார் தெரியுமா… ஷூ, கடிகாரம் என எதைப் பற்றிச் சொல்லும்போதும் அதன் விலையைச் சொல்லியே சுட்டிக்காட்டுவாராம். இதில் வெறுக்க என்ன இருக்கிறது? பணத்தாசை பிடித்ததால் மனிதாபிமானமோ அன்போ இல்லாமல் இருக்கிறான் என்று காட்டினால்தானே அவன் மீது வெறுப்பு வரும். அதற்கான ஒரு காட்சியை யோசிக்கக்கூடத் தெரியவில்லையா? அந்தக் கதாபாத்திரத்தின் அப்பாவுக்கு லேசாக நெஞ்சு வலி வருகிறது. எல்லாவும் மருத்துவரை அழைக்கிறார்கள். அவனோ உயில் எழுத வக்கீலை வரச் சொல்கிறான் என்று காட்டலாம். வேறொரு விபத்து நடக்கிறது. அடிபட்டவரைக் கவனிக்காமல் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா என்று குறியாக இருக்கிறான் என்றூ காட்டலாம். இப்படிச் செய்தால்தானே அந்தக் கதாபாத்திரத்தின் பண வெறி புரியவரும். நாயகி அவனை வெறுத்துவிட்டு நாயகன் பக்கம் திரும்புவாள். இதில் வேடிக்கை என்னவென்றால், தன்னைக் காதலித்த நாயகன் யாரிடமும் சொல்லாமல் போய்விட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு, அவன் வேண்டாம் என்று சொன்ன அதே மாப்பிள்ளையைத்தான் நாயகி கல்யாணம் செய்துகொள்ளவும் போகிறாளாம்.
க்ருப் ஃபோட்டோவை இறுதி பரீட்சைக்குப் பிறகு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லது அகர வரிசையில் மாணவர்களை வரிசையாக உட்காரவைத்து எடுப்பது வழக்கம். படத்தில் மதிப்பெண் அடிப்படையில் உட்காரவைத்து எடுக்கிறார்கள். ஆனால், கேம்பஸ் இண்டர்வ்யூ அதற்குப் பிறகு நடப்பதாகக் காட்டப்படுகிறது. உண்மையில் கேம்பஸ் இண்டர்வ்யூ என்பது பரீட்சைகள் நடப்பதற்கு முன்பாகவே நடந்துவிடும். அப்படியானால் அந்த க்ரூப் ஃபோட்டோ எப்போது எடுக்கப்பட்டது. வருடா வருடம் எடுப்பார்களா?
இந்தப் படத்தில் நாயகன் அதி புத்திசாலித்தனத்துடன் வேறு பல சாகசங்களும் செய்கிறான். ராகிங் செய்யும் சீனியருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கிறான். முதல் வருட மாணவர்களை வரிசையாக ஜட்டியுடன் நிற்க வைத்து சீனியர் செல்லமாக அடித்து விளையாடுகிறான். நாயகனையும் பேண்டை அவிழ்க்கச் சொல்லும்போது, அவன் சட்டென்று தன் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டுவிடுகிறான். பத்து எண்ணுவதற்குள் கதவைத் திறக்கவில்லையென்றால் உன் அறை வாசலில் மூத்ர அபிஷேகம் செய்துவிடுவேன் என்று சீனியர் மிரட்டுகிறான். வெளியில் நின்று கொண்டு சீனியர் ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பிக்கிறான். நாயகன் உள்ளே இருந்தபடி ஒரு தந்திரம் செய்கிறான்.
40 வாட்ஸ் பல்பின் ஒயரைக் கழட்டி பல்லால் கடித்து அதை ஒரு ஸ்பூனில் ஸ்கேல் மூலம் கட்டிவைத்து கதவிடுக்கு வழியாக வெளியே நீட்டுகிறான். அதை கவனிக்காமல் சீனியர் பத்து எண்ணி முடித்து மூத்ர அபிஷேகம் செய்ய ஆரம்பிக்கிறான். நேரடியாக ஸ்பூனில் போய் அதுபட்டதும் ஷாக் அடித்து சுருண்டு விழுகிறான். நாயகன் பயன்படுத்திய தந்திரம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால், ராகிங்கை அதோடு நிறுத்திவிடும் அளவுக்கு அது வலுவானது கிடையாது. அது என்ன நாக் அவுட் டூர்னமெண்ட்டா… ஒரு தோல்வியுடன் சீனியர்கள் ஓடிப்போய்விட. அப்படி ஒன்று நடந்தால் அதன் பிறகு சீனியர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார்கள். பிற படங்களில் நாயகன் அவர்களை தரையில் கால் படாமல் பறந்து பறந்து அடிப்பார். இதில் கொஞ்சம் வித்தியாசமான ஹீரோயிஸம். அவ்வளவுதான்.
அடுத்ததாக, கல்லூரி முதல்வரை முதல் நாள் உரையிலேயே மடக்குகிறான். புவியீர்ப்புவிசை இல்லாத விண்வெளியில் சாதா பேனாவால் எழுத முடியாது என்பதால், கோடிக்கணக்கில் செலவிட்டு செலவிட்டு விஞ்ஞானிகள் ஓர் அற்புதமான பேனாவைக் கண்டுபிடித்ததாக கல்லூரி முதல்வர் சொல்லும்போது, பேசாமல் பென்சிலைக் கொண்டுபோயிருந்தால் பிரச்னை எளிதில் தீர்ந்திருக்குமே என்று மடக்குகிறான் நாயகன். இது புத்திசாலித்தனமான, சுவாரசியமான ஒன்றுதான்… அரதப்பழசான அந்த ஜோக்கைக் கேள்விப்பட்டிருக்காதவர்களுக்கு.
நிறுத்தல் புள்ளி, அரைக் கால் புள்ளி இல்லாமல் பத்து வரிகள் வரும், மெஷின் என்பதன் கரடு முரடான வரையறையை எளிதில் புரியும்படி சுவிட்ச் போட்டால் ஓடுவது மெஷின் என்று எளிமையாகச் சொல்லித்தரும்படிச் சொல்கிறான். ஆனால், பரீட்சையை எப்படி எழுதினான் என்று படத்தில் காட்டவில்லை. இப்படி எளிய பதிலைச் சொல்லியிருந்தால் தேர்வில் வட்ட பூஜ்ஜியம்தான் கிடைத்திருக்கும். ஆனால், நாயகனோ முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்கிறான். அப்படியானால் நிச்சயம் அவன் அந்தக் கரடு முரடான வரையறையைத்தான் எழுதியிருக்க வேண்டும். ஆக, காட்சியின் சுவாரசியத்துக்காக ஒரு அணுகுமுறை… தேர்வுக்காக இன்னொரு வழிமுறை… நல்ல ஜோக். உண்மையில் இப்படி எளிய வழியில் எழுதி அவன் தேர்வில் தோற்பதாகவும் ஆனால், வாழ்வில் ஜெயிப்பதாகவும்தான் காட்டியிருக்க வேண்டும். ஆனால், என்ன செய்ய… நாயகனாயிற்றே… தேர்வே எழுதாமல் இருந்தாலும் ஜெயித்தாக வேண்டியவன் அல்லவா?
உயிருக்குப் போராடும் நண்பனின் அப்பாவை ஸ்கூட்டரின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுகிறான். வேக்குவம் க்ளீனரால் பிரசவம் பார்க்கிறான். இதையெல்லாம் முதல்லயே காசை வாங்கிட்டு, கதவையும் மூடிட்டு போதாத குறையாக லைட்டையும் அணைச்சுட்டுக் காட்டறதுனால பார்க்கப்படும் சாகசங்கள். கையில ரிமோட் வேற கிடையாது.
(ஆடுங்கடா ஆடுங்க… உங்க கொட்டத்தையெல்லாம் ஒழிக்க ஒருத்தன் வரத்தாண்டா போறான்…)
0
B.R. மகாதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக