செவ்வாய், 31 ஜனவரி, 2012

நிவாரணப் பணிகள்..தேமுதிக சரமாரி புகார்..ஜெ பதிலடி!



Jayalalitha and Panruti Ramachandran
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தானே புயல் நிவாரணிப் பணிகள் தொடர்பாக தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சரமாரியாக குற்றம் சாட்டிப் பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதிலடி கொடுத்து விளக்கம் அளித்தார்.
இது நாள் வரை அதிமுகவும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெருத்த லாபமடைந்த தேமுதிகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இந்த கூட்டணி டமாலாகி விட்டது.இதையடுத்து இந்த சட்டசபைத் தொடரில் தேமுதிக எப்படிச் செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தின்போது எதிர்பார்த்தது போலவே அரசைக் குறை கூறி தனது எதிர்க்கட்சி்ப் பொறுப்பை ஆரம்பித்தது தேமுதிக.

தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தானே புயல் நிவாரணப் பணிகள் குறித்து குற்றம் சாட்டிப் பேசினார். அவர் பேசுகையில், புயல் தாக்கி 2, 3 நாட்கள் கழித்துத்தான் நிவாரணப் பணிகளையே ஆரம்பித்தனர் அதிகாரிகள்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் பெரும் தாமதம் ஏற்பட்டது. முழுமையாக எந்தப் பணியும் இதுவரை நடைபெறவில்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதிலும் தாமதம்தான் என்றார்.

இதையடுத்து டக்கென எழுந்த முதல்வர் ஜெயலலிதா பண்ருட்டியாரின் பேச்சில் குறுக்கிட்டு விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையி்ல், புயல் நிவாரணப் பணிகளில் எந்தவிதமான தாமதமும், சுணக்கமும் ஏற்படவில்லை.புயல் தாக்கிய 24 மணி நேரத்திற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணிகளை இந்த அரசு செய்தது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 2, 3 நாட்கள் ஆனது என்ற உறுப்பினரின் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்.

சேதமடைந்து விழுந்த மின் கம்பங்கள், மரங்கள் விரைவாக அகற்றப்பட்டன. மொத்தம் 35,000 மின் கம்பங்கள் விழுந்தன. வரலாறு காணாதவகையில், ஏற்பட்டு விட்ட இந்த பெருத்த சேதத்தை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தமிழக அரசுக்கு கை கொடுக்கவில்லை. உதவிக் கரம் நீட்டவில்லை. இதனால் தமிழக அரசே அனைத்துப் பணிகளையும் செய்ய நேரிட்டது.

மின் வாரியத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள், மின் கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

மரங்கள் அகற்றப்பட்டன, குடிநீர் விநியோகம் சரி செய்யப்பட்டது, மின் விநியோகமும் மின்னல் வேகத்தில் சீரமைக்கப்பட்டது. சேதமடைந்த குடிசைகள், ஓட்டு வீடுகளுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினோம்

தானே புயல் நி்வாரணப் பணிகள் குறித்து 4ம் தேதி சபையில் தாக்கல் செய்யப்படவுள்ள விரிவான பதிலில் உறுப்பினர் அதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக