செவ்வாய், 31 ஜனவரி, 2012

பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த IAS அதிகாரி மனைவி தலைமறைவு



பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் "மும்பை ஹீரோஸ்' "கர்நாடகா புல்டோசர்ஸ்' இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இதைக் காண்பதற்காக தன் மகளுடன், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பங்கஜ்குமார் பாண்டேயின் மனைவி அம்புஜா பாண்டே ஸ்டேடியத்துக்கு வந்தார். கேட் எண் ஒன்றில், உள்ளே நுழைய முயன்ற அம்புஜாவை, கப்பன் பார்க் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக் தடுத்து, டிக்கெட் கேட்டார்.
அம்புஜா, தன்னிடம் இருந்த ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இரண்டு பேருக்கு ஒரு டிக்கெட் கொடுப்பது ஏன்? என்று அஞ்சுமாலா கேட்டு, யாருக்கோ போன் செய்தார். பின்னர், அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார்.
தன்னை இவ்வளவு நேரம், கேட்டில் காக்க வைத்ததால், கோபமடைந்த அம்புஜா, இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார்.
இதில், அஞ்சுமாலாவின் மூக்கு, வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக, அவர் பவுரிங் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்றுக் கொண்டு, தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவத்தை "சிசிடிவி' கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த கூடுதல் போலீஸ் கமிஷனர் சுனில்குமார், சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன், அம்புஜா அங்கிருந்து சென்று விட்டார். நடந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவிடம் கேட்டறிந்த சுனில் குமாரும், மற்ற உயர் போலீஸ் அதிகாரிகளும் புகார் கொடுக்க முயன்றதைத் தடுத்து, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால், நேற்று காலையில் மீடியாக்கள், பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனால், போலீசார், அம்புஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர். இதன்படி, கப்பன் பார்க் போலீசில், அம்புஜா மீது 353வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்து, அவரை தேடி அவரது வீட்டுக்குச் சென்றனர்.
கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் உட்ஸ் அபார்ட்மென்டில் வசித்து வரும் அம்புஜா வீடு பூட்டியிருந்தது. போலீசார், பங்கஜ் குமார் பாண்டேவை தொடர்பு கொள்ள முயன்றும், முடியாமல் போனது. தொடர்ந்து போலீசார், அம்புஜாவை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக