செவ்வாய், 31 ஜனவரி, 2012

நீரா ராடியா கனிமொழி டேப்புகள் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளன: மத்திய அரசு

டெல்லி: கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுக்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு ஏஜென்சிகள் பொறுப்பில்லை என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் கார்பரேட் தரகர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நீரா ராடியாவும் உதவியதாகக் கூறப்படுகின்றது. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து அவர் தொலைபேசியில் பேசிய டேப்புகள் ஊடகங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2ஜி ஊழல் வழக்கில் அவர் சாட்சியாக மட்டும் தான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த டேப்புகள் மாற்றம் செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு ஏஜென்சிகள் பொறுப்பில்லை என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை சீல் செய்யப்பட்ட கவரில் நீதிபதி ஜி.எஸ். சிங்வி அடங்கிய பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

கார்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் சர்வீஸ் புரொவைடர்கள் உள்பட 8 முதல் 10 ஏஜென்சிகளுக்கு தொடர்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறிக்கையின் முதல் சில பக்கங்களை நீதிபதிகள் வாசித்து பார்த்தனர்.

டேப்புகளில் உள்ள பேச்சின் துவக்கமும், இறுதியும் ஒரிஜினல் டேப்புகளில் இருந்து வேறுபடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கே இந்த டேப்புகளை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக