ஞாயிறு, 8 ஜனவரி, 2012

எவ்வித ஆதாரமும் இல்லாமல் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் தந்தவர் மீது நடவடிக்கை


சென்னை: எவ்வித ஆதாரமும் இல்லாமல் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் தந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீஸ் டிஜிபியிடம் திமுக சட்டத்துறை சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மதியம் 12 மணிக்கு டிஜிபியிடம் மனு கொடுக்கச் சென்றார். டிஜிபி இல்லாததால் அவர் சார்பில் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மனுவை பெற்றுக் கொண்டார்.
அப்போது, சட்டத்துறை இணைச் செயலாளர் கிரிராஜன், தாமரைச்செல்வன் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
கோரிக்கை மனுவில் ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் 79 பேருக்கு எதிராக என்.எஸ்.ஆறுமுகம் என்பவர், கடந்த 1ம் தேதி தந்த பொய்யான புகாரை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் பெற்றுள்ள விதம் குறித்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்துள்ளதுடன், மாநில காவல் துறை எப்படி இத்தகைய ஆதாரமற்ற புகார்களை ஊக்குவிக்கிறது என்பது இந்த மனு மூலமாக டிஜிபி பரிசீலனைக்கும், மேல் நடவடிக்கைக்கும் திமுக வக்கீல்கள் அணி சமர்ப்பிக்கிறது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் விடுத்துள்ள வழிகாட்டும் நெறி முறைகளின்படி, சொத்துக்கள் தொடர்பான புகார்கள் மீது காவல் துறை அல்லது சட்டப்பூர்வமான அமைப்பு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்த மனு எந்த நிர்வாகமும் சட்டப்பூர்வமாக கடமையை ஆற்றுவதில் குறுக்கீடுவதற்காக அல்ல.
திமுகவினர் மீது பழிவாங்கவும், அச்சுறுத்தவும் அதிமுக அரசு 28.7.2011 தேதி அரசாணை எண்: எம்.எஸ்.423 கொண்டு வந்தது. ஆனால், திமுகவினரைக் குறி வைத்து கொண்டு வரப்பட்ட அரசாணை தற்போது ஒவ்வொரு குடிமகனையும், பொது மக்களையும் குதறி வருகிறது. சொத்துரிமை அரசியல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 12&5&2011க்கு பிறகு இத்தகைய அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் சட்டப்பூர்வமான உரிமைகள் அனைத்தும் கிரிமினல் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. 2006 முதல் 2011 வரை சொத்துகளை பெற்றவர் சட்ட விரோதமானவராகவும், சட்டத்துக்கு எதிரானவராகவும் காணப்படுவதும், அவர் திமுக உறுப்பினராக இருந்தால் அவரை அரசு கிரிமினல் குற்றவாளி போல நடத்துவதும், விநோதமாக உள்ளது.
திருவள்ளூர் நில அபகரிப்பு பிரிவு தொடர்பாக உயர் நீதிமன்றமே ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சிறந்த எடுத்துக்காட்டாகும். அப்பாவி பொது மக்களை காவல் துறை அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற நில அபகரிப்பு பிரிவுகளை கலைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
மேற்கூறப்பட்ட புகாரை கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்களை கடைபிடிக் கும் சரியான சிந்தனையும், அறிவும் கொண்ட எந்த அதிகாரியும் பெற்றிருக்க மாட்டார்.
ஆயினும், அது காவல் துறை ஆணையரால் பெறப்பட்டுள்ளது. தோற்றத்திலேயே அந்த புகார் அதுவும் 81 பேருக்கு எதிரானது பொருளற்றது என்று தெரிகிறது.
இத்தகைய பொருளற்ற புகார்களை பெறுதல், புகார்கள் மற்றும் எரிச்சலூட்டும் புகார் பற்றி காவல் நிலையங்களில் மலிவான விளம்பரம் செய்வது, எங்களது தலைவர் மற்றும் பொருளாளரின் நற்பெயருக்கு ஊறு விளைப்பது பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.
இந்த புகார் பொய்யானது; ஆதாரமற்றது என்று தெரிந்திருந்தும், காவல் துறை அதிகாரிகள் மேற்கூறிய புகாரை பெற்றிருக்கக் கூடாது. இருப்பினும், அவ்வப்போது உச்ச நீதிமன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறி என்.எஸ்.ஆறுமுகம் அளித்த புகாரைப் பெற்றதுடன், எங்களது தலைவர் மற்றும் பொருளாளரின் நற்பெயரைக் கெடுப்பதற்காக பத்திரிகைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பொருளற்ற புகார்களை எந்திரகதியில் மாநில காவல்துறை பெறும் முறை எங்களுக்கு துயரை அளிக்கிறது. தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவரது துறையை திருவள்ளூர் வழக்குக்கு பிறகு ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் அடங்கிய சட்டப் பிரிவுகளையும், மாநிலத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு, சட்டக்குழு ஒன்றையும் அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஆரம்பத்திலேயே பொருளற்ற புகார்கள் அல்லது சிவில் தன்மையிலான புகார்கள் ஆகியவற்றை வழி காட்ட, நிலம் சம்பந்தப்பட்ட புகாரை பெறுமுன் புகார்தாரரை மாவட்ட அளவில் அமைக்கப்படும் சட்டப்பிரிவு மற்றும் அதன் மேல்முறையீட்டு அமைப்பான மாநில சட்டப்பிரிவு ஆகியவற்றிலிருந்து அனுமதி பெற்று வருமாறு, காவல் நிலையங்கள் கேட்டுக் கொள்ளலாம். இத்தகைய புகார்களை பெறுவதால் புகார் தாரருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இழைக்கப்படும் தேவையற்ற அச்சுறுத்தலை தவிர்க்கலாம்.
எனவே, இந்த மனுவை பரிசீலித்து பொய்யான, பொருளற்ற புகார்களை கொடுத்து காவல் துறையை பயன்படுத்தி, திருப்தியற்ற மோசமான நபர்கள், அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்துவதிலிருந்து காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற புகார்களை எதிர்காலத்தில் கொடுக்காமல் இருக்க, இத்தகைய புகார்களை எதிராக நடவடிக்கை எடுத்து தண்டிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலே ஆலோசனை கூறப்பட்டுள்ளபடி மாவட்ட, மாநில சட்டங்களில் சட்டப் பிரிவுகளை அமைக்கவும், காவல் துறையில் பெறப்படுவதற்கு முன்பு, புகார்களை அப்பிரிவுகள் முழுமையாக சரிபார்த்து சான்றழிக்க முறையான ஏற்பாட்டையும், வழிமுறைகளையும் வகுக்கவும் கேட்டுக் கொள்கிறோம். தவறினால், பொது மக்கள் நலனில் தேவையான நிவாரணத்துக்காக நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுக நிர்பந்திக்கப்படுவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக