ஞாயிறு, 8 ஜனவரி, 2012

இதயமில்லாத.... வர்களா டாக்டர்கள்? -ஹெச்.ஷேக் மைதீன்-

அரசு டாக்டர் ஒருவர், நோயாளியின் உறவினர்களால் கொல்லப்பட்டதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடக்கிறது. குழப்பங்களைத் தவிர்க்க, அரசு டாக்டர்களுக்கான விதிமுறைகளை, அரசு கடுமையாக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை சரியா?தூத்துக்குடி அரசு டாக்டர் சேதுலட்சுமி கொலையைக் கண்டித்து, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் ஒற்றுமையோடு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டாக்டர் சேதுலட்சுமி எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பும், மயக்க மருந்தியலுக்கான டிப்ளமோ படிப்பும் முடித்துள்ளார். அவரை பொறுத்தவரை, மயக்க மருந்தியல் டாக்டராகவும், பொது வியாதிகளுக்கான முதற்கட்ட சிகிச்சை தரும் மருத்துவராகவும் மட்டுமே சிகிச்சை தர முடியும்.ஆனால், விதிகளை மீறி, கர்ப்பிணிகளுக்கு, ஒரு மகப்பேறு (கைனகாலஜிஸ்ட்) டாக்டர் பார்க்க வேண்டிய சிகிச்சையை பார்த்திருக்கிறார். மேலும், இறந்த சிசுவை வயிற்றிலிருந்து எடுப்பதற்கு, தானே அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த இடத்தில், மயக்க மருந்தியல் நிபுணரான டாக்டர் சேதுலட்சுமி, ஒரு அறுவை சிகிச்சை (சர்ஜன்) நிபுணராக மாறியிருக்கிறார். இதுவும் மருத்துவ விதிமீறல் என்பது குற்றச்சாட்டு.இதுமட்டுமின்றி, "தன்னிடமே பல முறை, வழக்கமான பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணிக்கு, அறுவை சிகிச்சை செய்ய, பணம் கொண்டு வரும் வரை காத்திருந்தார்' என்பது, கர்ப்பிணி குடும்பத்தாரின் குற்றச்சாட்டு. இந்த இடத்தில், உயிருக்கு முன், பணம் பிரதானமாக இருந்துள்ளது.


கிளினிக் நடத்தலாமா?அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த, அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், தனியாக கிளினிக் நடத்த மாட்டோம், தனியார் மருத்துவமனையில் பணிபுரிய மாட்டோம் என்று, அரசிடம் உறுதி கொடுத்தால், கூடுதல் ஊதியம் தரப்படுகிறது. இதில், குறிப்பிட்ட துறை நிபுணர்களாக இருக்கும் பலர், இந்த உறுதி கொடுக்காமல், தனியாக கிளினிக் நடத்துகின்றனர்.அதேநேரம், பெரும்பாலான டாக்டர்கள், காலையில் மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு, பெயரளவில் நோயாளிகளைக் கவனித்து விட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விடும் நிலை உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில், கடந்த ஆண்டு இப்படி சென்றவர்களுக்கு, மருத்துவமனை முதல்வர் கிடுக்கிப்பிடி போட்டதால், அவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவமும் நடந்தது.

இதுதான் உதாரணம்:அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் சரியாக வருகிறார்களா, வரவில்லையா என்பதற்கு உதாரணமாக, கடந்த வாரம், "தினமலர்' நாளிதழில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டாக்டர்களின் வருகைப் பதிவேட்டில் குளறுபடி இருப்பதாகவும், டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆதாரத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தடயவியல் பிரிவு டாக்டர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், கடந்த வாரம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், அரசு பொது மருத்துவமனையில் நடத்திய ஆய்வில், வருகைப் பதிவேட்டில் பல டாக்டர்களின் கையெழுத்து இல்லாததை கண்டுபிடித்து, தாமத வருகைப் பதிவு வைக்க உத்தரவிட்டார். இப்படி, அரசு டாக்டர்களின் குளறுபடிகளுக்கு, காலங்காலமாக பல உதாரணங்கள் உள்ளன.

கொலையும் போராட்டமும்...:இந்த நிலையில் தான், டாக்டரின் கொலையை கண்டித்து, மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்துள்ளனர். டாக்டரின் கொலையும், கர்ப்பிணி இறந்ததும் மன்னிக்க முடியாதது என்றாலும், ஒரு உயிர் கொல்லப்பட்டதற்கு, மருத்துவமனைகளில் இவர்களை நம்பி சிகிச்சை பெறும் பல லட்சம் உயிர்களை பணயம் வைத்து, வேலை நிறுத்தம் செய்வது நியாயமா? ஒரு கொலைக்கு, பல உயிர்களை பழிவாங்கத் துடிக்கலாமா என்பது, ஸ்டிரைக் செய்த டாக்டர்களுக்கும், டாக்டர்களாக படிப்போருக்கும் மட்டுமே வெளிச்சம்.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களில் பெரும்பாலானோர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள். மக்களால், மக்கள் வரிப் பணத்தால் கட்டப்பட்ட அரசுக் கல்லூரியில், தனியார் மருத்துவக் கல்லூரியை விட குறைந்த கட்டணத்தில் படித்து விட்டு, தாங்கள் எந்த மக்களுக்கு சொந்தமான கல்லூரியில் படித்தனரோ, அந்த மக்களுக்கே சிகிச்சை தருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:நோயாளிகளின் பாதுகாப்பு தான் டாக்டர்களின் பாதுகாப்பு. அரசு டாக்டர்களுக்கும், பொது சுகாதாரத் துறைக்கும் அரசு சரியான விதிகளை வகுத்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசிற்கு இணையாக, அரசு டாக்டர்களுக்கு சம்பளம் தந்தால், அவர்கள் தனியாக கிளினிக் நடத்தவோ, பணி புரியவோ செல்ல மாட்டார்கள்.அதேபோல், விதிகளையும் கடுமையாக்க வேண்டும். நோயாளிகளுக்கு நுகர்வோர் சட்டப்படியும், டாக்டர்களுக்கு டாக்டர்கள் பாதுகாப்பு சட்டப்படியும், நிவாரணம் கிடைக்க வேண்டும். தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை.இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்."அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரியக் கூடாது' என்ற சட்டம், அரசு டாக்டர்களுக்கும் வர வேண்டுமென்பது, நடுநிலையாளர் கோரிக்கை. அரசும், டாக்டர்களும் மனிதாபிமான எண்ணத்துடன், தாங்கள் வாழும் சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், விதிகளை கடுமையாக அமல்படுத்தவும், பின்பற்றவும் தயாரானால் மட்டுமே, நோயாளிகளுக்கும் பாதுகாப்பு, டாக்டர்களுக்கும் பாதுகாப்பு. இல்லையென்றால், "இதயமில்லாதவர்களா டாக்டர்கள்' என்ற மக்களின் மன நிலையை மாற்ற முடியாது.

பொது பிரச்னைக்கு வராதது ஏன்?ஒரு டாக்டர் கொலையுண்டதற்கு, டாக்டர்கள் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ளது நியாயமானது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி, அரசு மருத்துவமனைகளை டாக்டர்கள் ஸ்தம்பிக்கச் செய்து விட்டனர்.இதேபோல், @கால்கட்டாவில், ஏ.எம்.ஆர்.ஐ., தனியார் மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டு, 90 உயிர்கள் பலியானது. இதற்கு, ஒட்டுமொத்த டாக்டர்கள் இணைந்து, ஒற்றுமையுடன் ஒரு கண்ணீர் அஞ்சலி கூட செலுத்தவில்லையே. தமிழகத்தின் வாழ்வாதாரமான உணவு உற்பத்தியை பாதிக்கும் வகையிலான, முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு, டாக்டர்கள் ஒற்றுமையுடன் சங்கத்தின் துணையுடன் போராடவில்லையே."தானே' புயல் பாதித்த பகுதிகளில், மக்களின் உதவிக்கு, அரசுடன் தனியார் தொண்டு அமைப்புகள் களமிறங்கியுள்ள நிலையில், டாக்டர்கள் சங்கங்கள் என்ன நிவாரணம் தந்தார்கள் என்பது, அவர்களுக்கே வெளிச்சம்.இப்படி பொது மக்களின் பிரச்னைகளுக்கு ஒதுங்கி விட்டு, தங்கள் தொழில் சார்ந்தவர்களுக்கு மட்டும் வருவது, சமூக நல்லெண்ணமா என்பதை டாக்டர்களே விளக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக