ஞாயிறு, 8 ஜனவரி, 2012

சசிகலா நீக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வுக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் பாதிக்கும்

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வுக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் பாதிக்கும் என முக்குலத்தோர் கூறுகின்றனர்.

தமிழக அளவில், 1960களில், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்ற நிலையை, தி.மு.க., ஏற்படுத்தியது. இதற்கு மாற்றாக, அ.தி.மு.க., உருவான பின், எம்.ஜி.ஆர்., காலம் தொட்டு, முக்குலத்தோர் அதிகமுள்ள தென் மாவட்டங்கள், மதுரை, தேனி, பெரியகுளம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், அ.தி.மு.க., மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்தியது. கள்ளர், மறவர், அகமுடையாரின் ஆதரவு, அ.தி.மு.க.,வுக்குத்தான் என கருதப்பட்டது.
பிற கட்சிகளில் அவர்கள் இருந்தாலும், அ.தி.மு.க., மீது அச்சாயம் பூசப்பட்டது.சசிகலா குடும்பத்தினர் வரவு, தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் சம்பவம் போன்ற காரணங்களால், 1996ல் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது.அதற்கேற்ப, முக்குலத்தோர் அதிகம் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை, பெரியகுளம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் நடக்கும் முக்குலத்தோர் விழாக்களில் அவ்வப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் தலைகாட்டியும், விளம்பரங்கள் மூலமும் முன்னிறுத்தப்பட்டார். அ.தி.மு.க.,வால் நடராஜன் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், விழாக்களில் அவர் தலைகாட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களிடையே, அ.தி.மு.க., மீது சிறு வெறுப்பை ஏற்படுத்தியது.தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் ஆதரவு கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோர், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாலும், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் ஜாதிய பிரச்னைகள் பெரிய அளவில் இல்லாததாலும், அ.தி.மு.க., மீதான முக்குலத்தோர் சாயம் பெரும்பாலும் கரைந்தோடிவிட்டது.

இதுபற்றி, தென் மாவட்டத்தில் தேவர் அமைப்பில் முக்கிய பொறுப்பில் செயல்படும், பெயர் வெளியிட விரும்பாதவர் கூறியதாவது:

ஆரம்பத்தில் அ.தி.மு.க., என்றால், எம்.ஜி.ஆர்.,தான். அதன்பின், ஜெயலலிதா தான். சசிகலா அல்ல; சசிகலா வரவால், எங்களுக்கு ஒரு பலம் வந்ததாக நாங்கள் கருதினோம். பெரிய கட்சியில், பெரிய பொறுப்பில் உள்ளவருடன் சசிகலா, அவரது குடும்பத்தார் உள்ளதால், அவர்கள் எங்கள் பகுதிக்கு வரும்போது, அவர்களை வரவேற்பதை கவுரவமாக நினைத்தோம்.சசிகலா நீக்கப்பட்டது எங்களுக்கு சற்று வருத்தம்தான். அதற்காக, அ.தி.மு.க.,வையோ, ஜெயலலிதாவையோ நாங்கள் வெறுக்கவில்லை. சசிகலா எங்கள் உறவினர் என்றாலும், ஜெயலலிதாவுக்கு நாங்கள் விசுவாசிகள். ஜெயலலிதா பின்னால்தான் முக்குலத்தோர் சமுதாயம் நிற்கும்.சசிகலா, நடராஜன், தினகரன் மட்டுமின்றி, முன்பு கருப்பசாமிபாண்டியன், தற்போது ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் போன்றோர் முக்குலத்தோராக இருந்தாலும், மறவர், கள்ளர், அகமுடையார் என்ற சமூகத்துக்காக எதையும் அவர்கள் செய்யவில்லை. சசிகலா, நடராஜன், தினகரன் போன்றோர் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொண்டனர். எங்கள் சமூக பலத்தை, தங்களுக்கான பாதுகாப்பாக கருதினர். கருப்பசாமி பாண்டியன், நயினார் நாகேந்திரன், பன்னீர்செல்வம் போன்றோர், கட்சியில் தாங்கள் வளரவும், தங்களுக்கு பின்னால் முக்குலத்தோர் உள்ளனர் என்பதை காண்பித்து பதவிகளை பெற்றனர்.

முக்குலத்தோர் விழாக்களில் இவர்கள் பங்கேற்று இருக்கலாம். குலத்துக்காக, குலத்தின் ஒதுக்கீடு, படிப்பு, முன்னேற்றம், கல்வி நிறுவனங்கள், பண ரீதியான உதவி என ஏதும் செய்யவில்லை. ஜாதிய மோதலில், வழக்குகளில் நாங்கள் சிக்கியபோது எங்களை பார்த்தது கூட இல்லை.கொடியங்குளம் சம்பவத்தின்போது, எங்களுக்கு பலமாக இருந்தது, அ.தி.மு.க.,வும், ஜெயலலிதாவும்தான். சசிகலா, நடராஜன் போன்றோர் வந்து கூட பார்க்கவில்லை. அச்சம்பவத்துக்குமுன், யார் என்றே தெரியாத நிலையில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த ஒரே சம்பவத்தால், ஒட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ.,வானார். தென்காசி எம்.பி., தொகுதியில் அதிகளவில் ஓட்டு பெற்றார். அதற்குக்காரணம், அச்சம்பவத்தின்போது அவர் அம்மக்களுடன் இருந்தார்.அதுபோல, முக்குலத்தோருடன் தென் மாவட்டம், சோழ மண்டலத்தில் யாரும் இருக்கவில்லை. எனவே, எங்கள் சமுதாயமும், ஓட்டுகளும் ஜெயலலிதா பின்னால்தான் செல்லும்.தற்போதைய சூழலில் இதுபோன்ற ஜாதிய பிரச்னையை, தி.மு.க.,வினர் எழுப்பி வருகின்றனர். அ.தி.மு.க.,வுக்கு எதிராக அது திரும்பும் என எண்ணுகின்றனர். சசிகலா, நடராஜன், தி.மு.க., என அனைவரையும் நாங்கள் அறிந்ததால், நாங்கள் ஜெயலலிதா பக்கம் உள்ளோம். எப்போது தேர்தல் வைத்தாலும், அது வெளிப்படும்.எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தென் மாவட்டம், சோழ மண்டலம், மதுரை, தேனிப்பகுதியில் உள்ளவர்கள். அவர்களிடம் பேசியபோது, இதே கருத்தைத்தான் அவர்களும் தெரிவித்தனர்.சசிகலா, நடராஜன் போன்ற பல பெயரைக்கூறி, பலர் பதவி பெற்றனர். உண்மையான அ.தி.மு.க., விசுவாசிகள் இன்றும் தொண்டனாகவே இருக்கின்றனர். அவர்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக