ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கனிமொழி கையில் இளைஞர் அணி?மூத்த திமுக நிர்வாகிகளுக்கு விரைவில் 'விஆர்எஸ்


செங்கல்பட்டு: இளைஞர் அணியினருக்கு வயது நிர்ணயம் செய்யப்படுவதைப் போல மாநில அளவிலும் நிர்வாகிகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்படும். அப்போது நானே கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளராகவும் இருக்கும் 54 வயது மு.க.ஸ்டாலின் சமீபத்தில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு திமுக இளைஞர் அணியில் இடமில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது திமுக இளைஞர் அணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் மும்முரமாக இறங்கியுள்ளார்.இதுகுறித்து செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க.வில் அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை இளைஞர்கள் பங்குபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நான்கூட பதவிக்காக ஆசைப்பட்டு இந்த பொறுப்பில் இல்லை.

தி.மு.க. இளைஞர் அணியில் ஒன்றிய அளவில் 30 வயது, மாவட்ட அளவில் 40 வயது என நிர்வாகிகளுக்கு வயது நிர்ணயிப்பதுபோல் மாநில அளவிலும் நிர்வாகிகளுக்கு வயது நிர்ணயம் கொண்டு வரப்படும். அப்போது நான்கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்.

தி.மு.க.வுக்கு இளைஞர்கள் மூலம் புதுரத்தம் கொடுக்க முயற்சி எடுத்து வருகிறேன். ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்கிறார்கள் என்பதை நானே நேரடியாக பார்வையிடுவேன். நிர்வாகிகள் மாற்றம் 4,5 மாதங்களில் முடிந்து விடும் என கருதுகிறேன் என்றார்.

இதன் மூலம் மாநில நிர்வாகிகள் மட்டத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை திமுக சந்திக்கப் போவதாக கூறப்படுகிறது. திமுக இளைஞர் அணிப் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகி அவருக்குப் பதில் வேறு ஒருவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பொறுப்பி்ல கனிமொழி அமர்த்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, திஹார் சிறைக்குப் போய் தியாகியாக திரும்பி வந்துள்ள கனிமொழிக்கு முக்கியப் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. அதற்கேற்ப இளைஞர் அணிப் பொறுப்பை அவருக்கு அளிக்கும் வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

அதேபோல மாநில அளவிலான பல மூத்த திமுக நிர்வாகிகளுக்கும் விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்படும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக