ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கமல்ஹாசனும், கிரேஸி மோகனும்!நண்பர்களும் 40 திருடர்களும்

மீண்டும் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மைக்கேல் மதன காமராஜன் முதல் ஏகப்பட்ட படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர்கள் கமல்ஹாசனும், கிரேஸி மோகனும். நாடக நடிகராக மட்டுமே இருந்து வந்த கிரேஸி மோகனுக்கு மைக்கேல் மதன காமராஜன் மூலம் திரையுலகில் பெரிய மேடை அமைத்துக் கொடுத்தவர் கமல் - அதற்கு முன்பே சில படங்களில் கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தபோதும் மைக்கேல் மதன காமராஜன்தான் அவருக்குப் பெரிய பிரேக்கைக் கொடுத்த படமாகும்.

அதன் பின்னர் இருவரும் இணைந்த படங்கள் எல்லாம் அதிரி புதிரி அதிரடி காமெடிக் கலாட்டாக்களாக அமைந்தன. இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.
பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், தெனாலி, அவ்வை சண்முகி, இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, மகளிர் மட்டும் அபூர்வ சகோதரர்கள் என இந்த வரிசை சற்றே நீளமானது. கடைசியாக இவர்கள் கொடுத்த அதிரடி காமெடிப் படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். தசாவதாரத்திலும் கிரேஸியின் பங்கு இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு அதிரடியான காமெடிப் படத்தில் நடிக்க கமல்ஹாசன் விருப்பமாக உள்ளாராம். இதையடுத்து அவருடன் கிரேஸி மோகன் கை கோர்க்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்தப் படத்தை நடிகர் பிரபு தனது சிவாஜி புரடக்ஷன்ஸ் மூலம் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல், பிரபு, கிரேஸி மோகன் இணைந்திருந்தனர்.

தற்போது நண்பர்களும் 40 திருடர்களும் என்ற தலைப்பில் ஒரு கதையை தயாராக வைத்துள்ளார் கிரேஸி. இந்தப் படத்தை பிரபு தயாரிக்கவுள்ளார். இதில் நாயகனாக நடிக்கப் போவது கமல் என்கிறார்கள்.

இது உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் உறுதியான பதில் ஏதும் வரவில்லை. கமல் தரப்பிலோ அப்படியெல்லாம் ஐடியா இல்லை என்கிறார்கள். ஆனால் மூவரும் இணைவது உறுதி என்று இன்னொரு தகவல் கூறுகிறது.

தற்போது கமல்ஹாசன் தனது நடிப்பு மற்றும் இயக்கத்தில் விஸ்வரூபம் படத்தில் படு பிசியாக இருக்கிறார். இந்த பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும் சமீபத்தில் கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தின் 400வது ஷோவுக்கு வந்திருந்தார். இதை வைத்து கமல்ஹாசனும், கிரேஸியும் இணைவது என்று தகவல்கள் பரவுகின்றன.

எப்படி இருந்தால் என்ன, ரசித்துப் படம் கொடுக்க கிரேஸி மோகனும், கமல்ஹாசனும் தயார் என்றால் வெடித்துச் சிரிக்க ரசிகர்களும் தயார்தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக