வெள்ளி, 20 ஜனவரி, 2012

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு நிதி உதவிக்கான ஆதாரங்கள் சிக்கின


அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டுநிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள் ரெய்டு நடத்தி முடித்து, நேற்று டில்லி திரும்பினர். தொண்டு நிறுவனத்திற்கு வந்த வெளிநாட்டுப் பணம் தொடர்பாக, கத்தை, கத்தையான ஆவணங்களை, அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவுக்கு பின்னணியில், வெளிநாட்டு சக்திகள் உள்ளதாக, அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் கூறியிருந்தார். தொண்டு நிறுவனம் மூலம், அணு எதிர்ப்பாளர்களுக்கு பணம் வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள், கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தினர்
 ஆவணங்கள் பிடிபட்டன: தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் மற்றும் அவரது அலுவலக நிர்வாகிகளிடமும், விசாரணை நடத்தினர். அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். மாப்பிள்ளையூரணி அகதிகள் முகாமுக்கு, கழிவறை கட்டிக் கொடுத்ததாக காட்டப்பட்ட கணக்கு, முத்துக்குவியல், ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவி செய்ததாக சொல்லப்பட்ட கணக்கு குறித்தும் ஆய்வு நடத்தினர்.
இதில், வெளிநாட்டுப் பணம் குறித்த முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் எழுதி வாங்கியுள்ளனர். நேற்று பிற்பகலுடன் ரெய்டு முடிந்ததையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து, அதிகாரிகள் நேற்று மாலை டில்லிக்கு புறப்பட்டனர். எனினும், மத்திய உள்துறையின் ஒரு குழுவினர், ரகசிய கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதிரடி ரெய்டு: இதுகுறித்து, உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களை விசாரிக்க, முதலில் ஒரு குழு வந்தது. அந்தக் குழுவை, அணு எதிர்ப்பாளர்கள் சிலர், ரகசியமாக மடக்கி பேரம் பேசியதாக, உள்துறைக்கு புகார் வந்தது. அதிகாரிகள் தங்குமிடம், அவர்கள் வரும் தேதி உள்ளிட்ட விவரங்களை, அணு எதிர்ப்பாளர்கள் சிலர் சேகரித்து, பின் தொடர்ந்தனர். இதை தெரிந்து கொண்ட மத்திய அரசு, அந்தக் குழுவை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு, இன்னொரு குழுவை ரகசியமாக அனுப்பியது. இந்தக்குழுவினர், தூத்துக்குடியில், தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, சர்க்யூட் ஹவுசில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கு, தமிழக அரசு அதிகாரிகளும் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் தங்கிய விவரம், ரகசியமாக வைக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக