புதன், 25 ஜனவரி, 2012

போலீஸ் உடையில் வந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தனர்

மாங்காடு:மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதிகாலையில் போலீஸ் உடையில் வந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தனர். கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரவி. பிரபல ஓட்டல் மேலாளர். இவரது மனைவி அம்பிகா, 35. போரூர் ஜான்சிராணி மகளிர் சுய உதவிக்குழுவில் துணை தலைவி. இவர்களுக்கு பாக்கியன், 17, அரவிந்தன், 14 ஆகிய மகன்கள் உள்ளனர்.மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு போரூரில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் அம்பிகா கடன் பெற்று தந்துள்ளார்.

இந்த வங்கியில் கடன் மோசடிகள் நடந்தது தொடர்பாக, வங்கியில் பணியாளர்கள் ஐந்து பேரை, சமீபத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அம்பிகா தனது கணவர், மகன்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு, 35 வயதுள்ள வாலிபர்கள் இருவர் போலீஸ் உடையில் வந்தனர். கதவை தட்டினர். கதவைத் திறந்த கணவரிடம் இருவரும், "ஐகோர்ட் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறோம். போரூர் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக உங்கள் மனைவியிடம் விசாரணை நடத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.
ரவி அம்பிகாவை எழுப்பினார். அம்பிகா,"போரூர் வங்கி மோசடி தொடர்பாக எந்த நேரத்திலும், எந்த விசாரணைக்கும் நான் தயார். என்ன வேண்டுமோ கேளுங்கள்,' என்று அவர்களிடம் கூறினார்.

இதற்கு, "தெருமுனையில் இன்ஸ்பெக்டர் நிற்கிறார். அவரிடம் வந்து பேசுங்கள்' என்று கூறி, வாலிபர்களில் ஒருவர், அழைத்துச் சென்றார். மற்றொரு வாலிபர், ரவியிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, பாக்கியன் எழுந்து வந்தார். அவரிடம், "தம்பி பனி அதிகமாக இருப்பதால் குளிர் அதிகமாக உள்ளது. டீ போட்டு தர முடியுமா?' என்று வாலிபர் கேட்க, பாக்கியன் சமையலறைக்கு சென்று டீ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அம்பிகா சென்ற அடுத்த சில நிமிடங்களில், ரவி மனைவியை தேடி சென்றார். அந்த வாலிபரும் அவருடன் சென்றார். ரவியுடன் சென்ற வாலிபர் திடீரென தலைமறைவானார். அந்த தெருவே தெருவிளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கியிருந்தது. பதட்டமடைந்த ரவி, மனைவியை தேடி ஓடினார். வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சுக்கு பின்புறம் அம்பிகா தலை, கை, கால், கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டுப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த ரவி மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸ் அதிகாரிகள் அம்பிகாவின் உடலை கைப்பற்றி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது தெரு முனை வரை ஓடி நின்றது. போலீஸ் உடையில் வந்ததாக கூறப்படும் நபர்களின் அடையாளங்களை போலீசார் சேகரித்தனர். கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.

பின்னணியில் வங்கி மோசடி? போரூர் குன்றத்தூர் சாலையில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த வட்டிக்கு நகை கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவை வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இங்கு வங்கியின் உயர்மட்ட குழு அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில், நகை கடனுக்காக பெறப்பட்ட பெரும்பாலான நகைகள் போலியானவை என்று தெரியவந்தது.

இது குறித்து, போரூர் போலீசார் வழக்கு பதிந்து நகை மதிப்பீட்டாளரை கைது செய்தனர். தொடர் விசாரணையில், இந்த போலி நகை மூலம் 29 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த வங்கியில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி அதிகாலை மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மோசடி தொடர்பாகவும், வங்கியில் கடன் பெற்றவர்கள் தொடர்பாகவும் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.

தீ விபத்திற்கும், மோசடிக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. மோசடி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஞானசேகரன் புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் வங்கியின் போரூர் கிளையில் மேலாளராக பணிபுரிந்த ஜான்பாஷா, 58, சண்முகவேல், 57, காசாளர்களாக பணிபுரிந்த கண்ணப்பன், 40, பாபு, 37, ஆறுமுகம், 43 ஆகியோரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று, அம்பிகா கொலை செய்யப்பட்டிருப்பதால், உண்மையில் இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடன் பெற்றவர்கள் குறித்து விசாரணை: போரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் அம்பிகா பலருக்கு கடன் பெற்று தந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட பிறகு கடன் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் வங்கியில் எரிந்து சாம்பலானது. இதனால் கடன் பெற்று தந்த அம்பிகாவிடம் அந்த தகவல்களை அளிக்குமாறு, வங்கி அதிகாரிகள் கேட்டு வந்துள்ளனர். ஆனால், கடன் வாங்கியவர்கள் தங்களை பற்றிய விவரங்களை வங்கிக்கு தெரிவிக்க வேண்டாம் என்று அம்பிகாவிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த விவரங்களை அம்பிகா தன் கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கடன் பெற்றவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இதற்காக, கூட்டுறவு வங்கியில் அம்பிகா மூலம் கடன் பெற்றவர்கள் யார் என்ற கணக்கெடுப்பில் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

திட்டமிட்ட கொலை:கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரில் அம்பிகாவின் வீடு உள்ள தெருவில் மொத்தம் ஐந்து சோடியம் விளக்குகள் உள்ளன. அவை அனைத்திற்கும் சேர்த்து, தெருமுனையில் உள்ள முதல் விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பத்தில் கன்ட்ரோல் சுவிட்ச் உள்ளது. அம்பிகாவை போலீஸ் உடையில் வந்து மர்ம நபர்கள் எழுப்பிய போது, தெருவிளக்குகள் அனைத்தும் எரிந்துள்ளன. அம்பிகாவை, அங்கு அழைத்துச் சென்ற பிறகு தெருவிளக்குகளை ஒட்டுமொத்தமாக அணைத்துவிட்டு, இருட்டில் கொலை செய்துள்ளனர். அதனால் ஏற்கனவே கொலையாளிகள் அம்பிகாவின் வீட்டை நோட்டமிட்டு, திட்டமிட்ட பிறகே இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக