திங்கள், 16 ஜனவரி, 2012

பாகிஸ்தான் அரசியலின் கதி என்ன? இன்று தெரியவரும்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் நடக்க உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்க உள்ள இரு வழக்கு விசாரணைகளில், அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி இருவரின் எதிர்காலம் என்ன என்று தெரிய வரும்.

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே, மெமோகேட் விவகாரம் என்ற வழக்கு நடந்து வருகிறது. இதற்காக சுப்ரீம் கோர்ட் தனியாக ஒரு குழுவை நியமித்து விசாரணையை நடத்தி வருகிறது. இக்குழுவின் முன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானி தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் இன்று ஆஜராகிறார். மெமோகேட் விவகாரத்தில், பாக்., ராணுவத்தை அடக்கி வைக்கும்படி சர்தாரி, அப்போதைய அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லனுக்கு கடிதம் அனுப்பியது குறித்து ஆதாரபூர்வமான தகவல்களை, மன்சூர் இஜாஸ் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், 2009ல் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட, தேசிய நல்லிணக்க அவசரச் சட்டத்தின் மீது அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இவ்வழக்கில், ஆறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதில் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்த ஆறு நடவடிக்கைகள் குறித்த அரசின் விளக்கம் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாக உள்ளது. இந்த இரு வழக்குகளோடு, பார்லிமென்ட்டில், அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான ஓட்டெடுப்பும் இன்று நடக்க உள்ளது. இந்த மூன்று சம்பவங்களும், அதிபர் மற்றும் பிரதமர் இருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இவ்வளவு சிக்கல்களுக்கிடையிலும், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக