டெல்லி: திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ்சும், சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சரண்யாவும் பெற்றனர்.
58-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது.
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி முன்னிலை வகித்தார்.
முதல் முறையாக இந்த ஆண்டுதான் தமிழ் மற்றும் மலையாள படங்கள் அதிக அளவில் விருதுகளை அள்ளின.
பாலச்சந்தருக்கு பால்கே விருது
திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே விருது' தமிழ்ப்பட உலகில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பிரதீபா பட்டீல் விருதை வழங்கினார்.
சினிமா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட மூத்த சினிமா கலைஞருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தங்கத் தாமரையும், ரூ.10 லட்சம் ரொக்கமும், விருதும், சால்வையும் அடங்கியது இந்த பரிசு.
சிறந்த நடிகர் தனுஷ்
இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது 2 பேருக்கு வழங்கப்பட்டது.
'ஆடுகளம்' தமிழ் படத்தில் நடித்த தனுஷ், 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாள படத்தில் நடித்த சலீம் குமார் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றனர்.
சிறந்த நடிகைக்கான விருது 'தென் மேற்கு பருவ காற்று' தமிழ் படத்தில் நடித்த சரண்யாவுக்கும், 'பாபு பாண்ட் பாஜா' என்ற மராத்தி படத்தில் நடித்த மிட்டாலே ஜக்தாப் வரத்கர் என்ற நடிகைக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். 'தென் மேற்கு பருவ காற்று' சினிமாவில், 'கள்ளிக்காட்டு தாயே' என்று அவர் எழுதிய பாட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
'தென் மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிய சீனு ராமசாமி சிறந்த தமிழ் பட தயாரிப்பாளருக்கான விருதையும், 'மைனா' படத்தில் நடித்த இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா சிறந்த துணை நடிகருக்கான விருதையும், நடிகை சுகுமாரி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றனர்.
ஆடுகளம் படத்துக்கு 6 விருதுகள்
'ஆடுகளம்' தமிழ்ப்படம் மொத்தம் 6 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் தனுஷ் தவிர, சிறந்த இயக்குனர் (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த திரைக்கதை (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த நடன இயக்குனர் (வி.தினேஷ்குமார்), சிறந்த படத்தொகுப்பு (டி.இ.கிஷோர்), சிறப்பு பரிசு (இலங்கை நடிகர் ஜெயபாலன்) ஆகிய விருதுகள் இந்த படத்துக்கு வழங்கப்பட்டன.
அதேபோல் 'ஆதாமிண்டே மகன் அபு' மலையாளப்படம் 4 விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருது (சலீம் குமார்) தவிர, சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர் (மது அம்பட்), சிறந்த இசையமைப்பாளர் (ஐசக் தாமஸ்) ஆகிய விருதுகளும் இந்த படத்துக்கு வழங்கப்பட்டது.
4 குழந்தை நட்சத்திரங்களுக்கு விருது
'ஐ ஆம் கலாம்' என்ற படத்தில் நடித்த ஹர்ஸ் மேயர், 'சாம்பியன்ஸ்' படத்தில் நடித்த சாந்தனு ரங்னேகர், மச்சிந்திரா கடேகர், ஆகியோரும், 'பாபு பாண்ட் பாஜா' படத்தில் நடித்த விவேக் சாபுக்ஷ்வர் ஆகிய 4 சிறுவர்கள் இந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளை பெற்றனர்.
எந்திரன் படத்துக்கு 2 விருதுகள்
சிறந்த உடையலங்காரம் (ஜெயன்), சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாசன் மோகன்) ஆகிய விருதுகள் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயனும், ஸ்ரீனிவாசனும் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்திரா காந்தி விருது
'பாபு பாண்ட் பாஜா' என்ற மராத்தி படம் இந்திரா காந்தி விருதை பெற்றது.
சல்மான்கான் நடித்த 'தபாங்' என்ற இந்திப் படம் சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான விருதை பெற்றது.
'தோ தோனி சார்' என்ற இந்திப் படம் சிறந்த இந்திப் படத்துக்கான விருதையும், 'இஷாகியா' என்ற படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 4 விருதுகளை பெற்றது.
வராத இந்தி நடிகர்-நடிகைகள்
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழக்கமாக இந்தி நடிகர்-நடிகைகளும், கலைஞர்களும் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு இந்தி திரைப்படங்கள் குறைந்த அளவில் விருதுகளை பெற்றதால் தபாங் படத் தயாரிப்பாளர் அர்பாஸ்கான், மலைச்சா அரோரா உள்ளிட்ட ஒரு சில இந்தி சினிமா உலகப் பிரமுகர்களே விழாவில் பங்கேற்றனர்