சனி, 10 செப்டம்பர், 2011

மனித கழிவுகளை மனிதனே அகற்ற தடை சட்டம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது




தமிழக சட்டசபையில் அமைச்சர் கே.பி.முனுசாமி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில்,’மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதையும், உலர் கழிவறைகள் கட்டுவதையும் தடை செய்யும் சட்டம் 1993-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும், அந்த சட்டம் பின்பற்றப்பட்டது.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை செய்ய பாராளுமன்ற சட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதனை செயல்படுத்தக்கோரி இந்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து அமைச்சர் முனுசாமி பேசியபோது,

’’1993-ம் ஆண்டே மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதை செயல்படுத்த வேண்டும் என்றால், 2 மாநிலங்களோ அதற்கு மேற்பட்ட மாநிலங்களோ அதனை ஆதரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  

மத்திய அரசும் அதில் அக்கறை காட்டவில்லை. இதற்கு முன்பு இருந்த மாநில அரசும் அதை செய்யவில்லை. ஆனால் புரட்சி தலைவி சமூக அக்கறையுடன் இந்த தீர்மானத்தை அவையில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சாக்கடையை சுத்தப்படுத்தவும், தூர்வாரவும் நவீன கருவிகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். தமிழக முதலமைச்சர் விளையாட்டு மற்றும் கல்வி துறையில் அனைத்து மாணவர்களும் பயன்பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.

அதேபோல் சாதாரண துப்புரவு தொழிலாளர்கள் கவுரவமாக வாழ முதல்- அமைச்சர் தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்’’ என்று பேசினார்.
இதையடுத்து இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக