சனி, 10 செப்டம்பர், 2011

சோ.அய்யருக்கு திமுக கேள்வி?உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த முடியுமா?

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் மிகவும் நீங்கள் அதிமுக நலனுக்காக மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். எனவே உள்ளாட்சித் தேர்தலை நியாயமான முறையில் நடத்தத் தயாராக இருப்பதாக உங்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை கோருகிறோம் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யரிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரம் ஆகியோர் மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யரை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான சசிகலாவுக்கு நீங்கள் நெருக்கமானவர் என்றும், அதிமுக நலனுக்காக மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் திமுக நன்கு அறிந்துள்ளது. நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின்னரும், அதிமுகவின் அரசியல் கட்டளைகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களது திறமையான ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அதிமுகவுக்கு சாதகமாக நாடகமாட முயற்சிக்கிறார்கள்.

எனவே நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்த அரசமைப்புச் சட்டத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக உங்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை திமுக கோருகிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய பின்வரும் ஏற்பாடுகள் தேவை. தேர்தல் அறிவிப்பு நாள் முதல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் இருக்க வேண்டும்.

தேவைப்பட்டால் அண்டை மாநிலங்களிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளின் சேவையைப் பெறலாம். வாக்குப்பதிவு தொடர்பான புகார்கள் மாவட்ட, வட்டக் கண்காணிப்புக்குழுவில் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாக்குப் பதிவு நாளன்று, மாநில காவல் துறையின் பங்கு குறைந்தபட்சமாக தேவைப்பட்டால் ஒழிய வாக்குச்சாவடிக்குள் நுழைவதை கட்டுப்படுத்தியும், காவல் நிலையங்கள் துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும்.

நியாயமான, சுதந்திரமான வாக்குப் பதிவு ஏற்பாடுகளை மேற்பார்வையிடமாநிலத் தேர்தல் ஆணையத்தில் குறைந்தபட்சம் மூன்று ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருக்க வேண்டும். புகார்களைப் பெற மாநிலத் தேர்தல் ஆணையர் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். அரசியல் கட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் அணுக முடியாமல் இருக்கக் கூடாது. வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோ படம் பதிவு செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட சிடிக்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அளிக்கப்பட வேண்டும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும். வாக்குப் பதிவுக்கு மின்னணு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு நாளுக்கு ஒருவாரம் முன்பிலிருந்து மாநில அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும். மாநில காவல் துறை, மாநில கண்காணிப்புக் குழுவினர் நேரடி மேற்பார்வையிலும், மாநிலத் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தேர்தல் முழுவதையும் கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த மேற்பார்வையிலும் இருக்க வேண்டும். நீங்கள் மட்டும் தேர்தல்களை நடத்த அனுமதிக்கப்படாமல், தலைமையகத்திலும், மாவட்ட மட்டங்களிலும் நியமிக்கப்பட்ட சுயேச்சையான பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். மேலும் நியாயமான, நேர்மையான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

இவற்றுக்காக உங்களிடமிருந்து உத்தரவாதம் வராத பட்சத்தில், சட்டபூர்வமாக எடுக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் உட்பட இப்பிரச்சனையில் பல மட்டங்களில் திமுக அணுகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக