வெள்ளி, 16 டிசம்பர், 2011

தமிழர்களின் உயிரை காப்பாற்றுங்கள் : கருணாநிதி கடிதம்!

சென்னை: கேரளாவில் உள்ள தமிழர்களின் உயிரை காப்பாற்றுமாறு குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேக்ஸ் மூலம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவும், சுமுகமான தீர்வு காணவும் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கைகளும், உத்தரவாதங்களும் கொடுத்துள்ள போதிலும் நெடுங்கண்டம், கைலாசபாறை, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சில சமூக விரோதிகளால் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகின்றனர்.
கேரளா எல்லையில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கற்கள் வீசப்படுவது, தீயிடப்படுவது போன்ற செய்திகள் கேரளாவில் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. கேரளாவைத் தங்களது சொந்த நாடாக கருதி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர மறுத்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.
எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கலைஞர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக