வெள்ளி, 16 டிசம்பர், 2011

அண்ணா நூலக இடமாற்றத்தடையை நீக்க முடியாது-உயர்நீதி மன்றம் கண்டிப்பு

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவதற்கு விதிக்கப்பட இடைக்காலத் தடை நீடிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போதைய நிலையில், நூலகத்தை சீராகப் பராமரிக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும் நூலகமானது நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழ்ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவும் பெற்றனர்.
தமிழக அரசு பதில் மனு
இதனிடையே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, நுங்கம்பாக்கத்திலுள்ள டி.பி.ஐ. அலுவலகத்துக்கு மாற்ற தடை கோரும் 5 பேரின் பொது நல மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது, சென்னை அண்ணா நூலக இடமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நன்றாக பராமரிக்கவும்

இதனை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ அலுவலக வளாகத்தில் புதிய நூலகம் கட்டும் பணிகள் ஏதாவது நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அரசுத் தரப்பில் 'இல்லை' என்று பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் ஜன.19-க்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அத்துடன், தற்போதைய நிலையில், நூலகத்தை சீராகப் பராமரிக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக