செவ்வாய், 13 டிசம்பர், 2011

பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரும் மனு-டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இது தவிர இந்த விவகாரம் தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு இப்போது என்ன அவசியம் என்று கேட்டனர். மேலும், அணையின் நீர்மட்டத்தை நிர்ணயிப்பது, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய ,முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஏஸ்.ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் 2 தொழில்நுட்ப நிபுணர்கள் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் அணையை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். எனவே இந்த நிலையில் கேரள அரசின் மனுவுக்கு என்ன அவசியம் என்று கேட்டனர்.

மேலும், ஏ.ஆஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையே இறுதியானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கேரள வக்கீல் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிஆர்பிஎப் பாதுகாப்பு-மத்திய அரசுக்கு உத்தரவு

இதேபோல முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் வீரர்களை நிறுத்த வேண்டும் என்ற தமிழகம் மற்றும் திமுக கோரிக்கை குறித்து வருகிற 15ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது என்றும்,இந்த விவகாரம் தொடர்பாக கேரளா சர்ச்சையைக் கிளப்பாமல் இருக்க உத்தரவிடுமாறும் கோரி கடந்த 1ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. கேரள அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவில்லை.மேலும் புதிய அணை கட்டுவதில் முனைப்பாக உள்ளது என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அணை உள்ள பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதைக் காரணம் காட்டி நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்றது. ஆனால் அணை உறுதியாகத் தான் உள்ளது என்றும், கேரள அரசு வேண்டும் என்றே இவ்வாறு கூறுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கக் கோரி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக