செவ்வாய், 13 டிசம்பர், 2011

தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம்

முல்லைப் பெரியாறு பிரச்னை எதைச் சாதிக்கிறதோ இல்லையோ, மாநிலக் கட்சிகளுக்கு இணையான குறுகிய கண்ணோட்டத்துக்கு, தேசியக் கட்சிகளும் விதிவிலக்கில்லை என்பதைக் காட்டிவிட்டது.
கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவலி என்ற கட்சியைத் தெரிந்திருக்காவிட்டாலும், அக்கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜை அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரி பிரச்னை தலையெடுக்கும் போதெல்லாம், இரு மாநில அரசுகளுக்கும் பெரும் தலைவலி தரும் வேலைகளைச் செய்வதில் வித்தகர். மாநிலக் கட்சிகள், தங்கள் மாநில நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும், இத்தகைய செயல்களில் இறங்குவது, தவறான விஷயம் என்றாலும், புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், தேசியம் பேசியே வளர்ந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, அதே குறுகிய வட்டத்துக்குள் இயங்கி வருவது, அதிர்ச்சி தரும் விஷயம். முல்லைப் பெரியாறு பிரச்னையில், மூன்று கட்சிகளுமே ஓட்டு வங்கியைக் குறிவைத்து செயல்படுகின்றன.கையேந்தி உள்ள காங்கிரஸ் : கேரளாவில், தற்போதைய ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் தான், அதன் சட்டசபை பலம். மொத்தம், 141 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட, கேரளா சட்டசபையில், வெறும் 39 எம்.எல்.ஏ.,க்களைத் தான் பெற்றிருக்கிறது அக்கட்சி. எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட், 45 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் வண்டி.
எனவே, அற்ப அரசியல் செய்து பிழைக்க வேண்டிய நிலை. போதாக் குறைக்கு, பிரவம் இடைத்தேர்தல் வேறு, பிடறியைப் பிடித்து நெருக்குகிறது. இப்போதைய, முதல்வர் உம்மன் சாண்டியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தான், 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேலி செய்யும் விதமான சட்டம், கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டை ஒன்றிணைக்கும் முக்கிய உயிர் நாடியான, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே மதிக்கவில்லையா என, அவர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது ராஜ தந்திரத்தைப் பார்த்து மெச்சிக் கொண்டிருக்கிறது. "நம்மால் தான் முடியவில்லை; சாண்டியாவது வெளுத்துக் கட்டுகிறாரே' என, அக்கட்சியின் மேலிடம் ஆறுதல் கொள்கிறது போலும்.

அச்சு படுத்தும் பாடு... : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டிருந்தபோது, அவரை மனிதாபிமான அடிப்படையில் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என, கேரளாவில் இருந்து கிளம்பி, சென்னை வந்து, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நேரில் வேண்டுகோள் விடுத்தவர், அம்மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். மயிரிழையில் ஆட்சியைப் பறிகொடுத்த கோபத்தில், என்ன செய்கிறோம் என அவருக்கே தெரியாத அளவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். புதிய அணையை மார்க்சிஸ்ட் கட்சி, தங்கள் சொந்தச் செலவிலேயே கட்டும் என, வீரமுழக்கம் இடுகிறார். 375 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, தங்கள் கட்சியின் பினாரயி விஜயனிடம் நன்கொடையாக வாங்கித் தருவார் போல. மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதால், அக்கட்சியின் அகில இந்தியத் தலைமையும், ஏதோ, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. திரிபுராவைத் தவிர வேறு எங்குமே ஆட்சியில் இல்லாததால், கேரளாவில் இருக்கும் ஆதரவைத் தக்கவைக்க, எவ்வளவு கீழிறங்கவும் அவர்களின் தலைமை தயாராகிவிட்டது.

பா.ஜ., இப்படி : இவர்களின் இரட்டை வேடம் போதாது என, இரு மாநிலங்களிலுமே வலுவாக இல்லாத, பா.ஜ.,வும் தன் பங்குக்கு, மாநில வெறியைத் தூண்டிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. கேரளாவில் உள்ள அக்கட்சியினர், மற்ற கட்சியினரை விட முன்னணியில் நிற்கும் நோக்கில், ஆளாளுக்கு கடப்பாறை, மண்வெட்டியை எடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு கால்வாய் வெட்ட கிளம்பிவிட்டனர். எதிர்பார்த்தபடியே, அனைத்து பத்திரிகைகளிலும், அது தான் தலைப்புச் செய்தி. இக்கட்சிகளின் சுயலாபச் செயல்பாட்டால், தமிழகத்தில் உள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தான் பாவம், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தனர். குறுகிய நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம், குறுகிய கால லாபங்களை மட்டுமே அடைய முடியும். நீண்டகாலப் பலன் கிடைக்காது என்பதை, அவர்கள் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால் தான் இம்மூன்று கட்சிகளும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது பற்றி சிந்திக்கக் கூட முடியவில்லை என்பதை, அவர்களின் அகில இந்தியத் தலைமை புரிந்துகொண்டால் சரி!

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக