வெள்ளி, 16 டிசம்பர், 2011

மம்முட்டி, மோகன்லால் படங்கள் நிறுத்தம்

முல்லைப் பெரியாறு பிரச்சினையால் மலையாள படங்களை திரையிட தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி நடித்த வெனிசில் வியாபாரி, மோகன்லால் நடித்த அரபியும் ஒட்டகமும் ஆகிய இரு படங்களும் இந்தியா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் மம்முட்டி, மோகன்லால் படங்கள் வசூல் ஈட்டுவதால் நிறைய தியேட்டர்களில் இப்படங்களை திரையிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் மலையாள படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதையடுத்து இவ்விரு படங்களும் சென்னை தியேட்டர்களில் இன்று திரையிடப்படவில்லை. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களும் இப்படங்களை திரையிடுவதை நிறுத்தி விட்டனர்.

இதுகுறித்து மலையாள விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் கூறும் போது, மம்முட்டி, மோகன்லாலின் புதுப்படங்களை தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் திரையிட மறுப்பதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் தாக்கப்படலாம் என அவர்கள் பயப்படுகிறார்கள் என்றனர்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, மலையாள படங்கள் தமிழ்நாட்டில் நன்றாக ஓடுகின்றன. அதுபோல் தமிழ் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு உள்ளது. மலையாள படங்கள் திரையிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

மோகன்லால் பட விநியோகஸ்தரான ஜி.பி. விஜயகுமார் கூறும்போது, சென்னையில் திட்டமிட்டப்படி இன்று படத்தை ரிலீஸ் செய்யவில்லை என்றார். தமிழ்நாடு விநியோகஸ்தர் சங்கத்தினர் கூறும் போது, மலையாள படங்களை திரையிட மறுப்பது தியேட்டர் உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக