சனி, 3 டிசம்பர், 2011

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு – வினாக்களும் விடைகளும்


Disclaimer: அமெரிக்க முதலாளிகளின் அடிவருடி, MNC நாய், முதலாளித்துவ பூர்ஷ்வா சமூகப் பிரதிநிதி என ஆசையோடும் அன்போடும் திட்டும் இடதுசாரி நண்பர்கள், ப்ளட் பிரஷர் எகிறாமல் எஸ்’ஸாகவும்.என்ன நடந்தது?
இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை ஊக்குவிக்கும்பொருட்டு, இது நாள்வரை இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. நேரடி அந்நிய முதலீடு, பல்பொருள் வணிகத்தில் (Multi-brand retail) 51% வரையும், ஒரு பொருள் வணிகத்தில் (Single brand retail) 100% வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மக்கள் தொகை 10 லட்சத்துக்குமேல் இருக்கும் 53 நகரங்களில் இப்போதைக்கு இது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சரியாக நிர்வகிக்கப்படும் பட்சத்தில், பிற சிறிய ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இந்த 53 நகரங்களில் 28 நகரங்கள் அந்நிய முதலீட்டை உள்ளே விட மறுக்கும் 11 மாநிலங்களில் இருக்கின்றன. ஆக 53 – 28 = 25 நகரங்களில் நேரடியாக வால்மார்ட்டோ, கேர்ஃபோரோ வரச் சாத்தியங்கள் உள்ளன.
அந்நிய முதலீட்டினை உள்ளே விட மறுக்கும் மாநிலங்கள் எல்லாவற்றிலும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி நடந்துவருவது ஆச்சரியமல்ல. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத் ஆகியவை முக்கியமானவை. ஆக, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், போபால், பாட்னாவில் கால் வைக்க முடியாது.
இது சிறு வியாபாரிகளை அழித்துவிடும்?
இதை விட அபத்தமான குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்கமுடியாது. இந்தியாவில் இருக்கும் சிறு வியாபாரிகள் மாதிரியான ஸ்மார்ட்டான கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை. அவர்கள் தரும் சேவைகளை ஒரு நாளும் பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தர முடியாது. வெறும் 200 கிராம் உளுத்தம்பருப்பை ஒரு நாளும் வால்மார்ட்டால் தரமுடியாது. வீட்டுக்குக் கொண்டுவந்து தருதல், ‘வீட்டுல கொடுத்துடுங்க அண்ணாச்சி, சம்பளம் வந்தவுடனே தந்துடறேன்’ என்பது மாதிரியான கிரெடிட் வர்த்தகம், தெருவில் இஸ்லாமியர்கள் இருந்தால் பட்டையும் சோம்பும் பிரியாணிக்காக வாங்கி வைத்தல் போன்றதுமாதிரியான நுகர்வோர் சார்ந்த CRM-ல் இன்றைக்கும், என்றைக்கும் அண்ணாச்சி கடைகள்தான் நம்பர் ஒன்னாக இருக்கும். இந்த அளவுக்குக் கீழிறங்கிச் செய்யப்படும் சேவைகளை ஒரு நாளும் பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் செய்யுமா என்று தெரியாது.
இன்னொன்று, என்னுடைய சின்ன வயதில் சென்னையில் நான் அண்ணாச்சி கடைகளில் தேங்காய்ப் பத்தைகளை வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு அண்ணாச்சி கடைகளே தேங்காய்ப் பத்தைகள் விற்பதில்லை. முழுத் தேங்காய்தான். ஆக அவர்களும், காலத்துக்கேற்பத் தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்களால், சிறு வியாபாரிகள், தெருமுனை அண்ணாச்சிக் கடைகள் அழிந்துவிடும் என்பது தேவையற்ற பயம்.
இந்தியாவின் பரப்பளவுக்கும் நுகர்வோர்களின் தேவைகளுக்கும் ஒரு சில பெரு நிறுவனங்கள் மட்டுமே போதும் எனக் கொண்டால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. சத்யம், ஐநாக்ஸ் தியேட்டர்களில் கூட்டம் வருவதுபோலவே, உதயம், பைலட்டுக்கும் கூட்டம் போகிறது. இந்திய நுகர்வோரை ஒற்றை டெலிவரி தளத்தில் வைக்க முடியாது. வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு கடைகள். பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் வாங்குவதால், பொருளின் விலையைக் கீழே கொண்டுவரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதே சமயத்தில், தெருமுனைக் கடைகள் தேவையான பொருளை தேவையான அளவுக்குத் தருவதால் நாம் அங்கேயும் வாங்குவோம். இரண்டும் நீக்கமற நிறைந்திருக்கும்.
இது அந்நிய கருப்புப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவந்து வெள்ளையாக்கும் முயற்சி!
கருப்புப் பணம் என்று சொல்வது நகைப்புக்குரியது. அப்படியென்றால், இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் மொக்கை என்று நாமே ஒப்புக்கொள்ள வேண்டிவரும். இந்தியாவில் பெறப்படும் அந்நிய முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கியின் சான்றிதழ் தேவை. அதில் Source of Money முக்கியமானதாக இருக்கும். ஆனால், இந்தியாவுக்குள் “ஏழைப் பங்காளர்களாய்” வலம் வரும் வியாபார காந்தங்கள் சரியாக வரி கட்டுகிறார்களா? சுமோவும் ஸ்கார்பியோயும் பறக்கும் கோயம்பேடு வளாகத்தில் இருக்கும் வியாபாரிகளிடம் கருப்புப் பணமே இல்லையா?
ஒரு வேளை விவாதத்துக்கு, கருப்புப் பணத்தைத்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள் என்றே கொள்வோம். இந்தியாவுக்குள் விற்கும்/வாங்கும் பொருட்களுக்கு வரி கட்டித்தானே ஆகவேண்டும். ஆனால் கோயம்பேடு கோயபல்ஸுகள் இதை இதுவரை செய்திருக்கிறார்களா? இதுநாள்வரை வணிகம் கோயம்பேட்டில் “கேஷாக”த்தானே நடக்கிறது. இந்த “கேஷில்”தானே திண்டிவனம் தாண்டி வளைத்துப்போட்ட விவசாய நிலங்களை, சென்னைக்கு அருகே என்று வரிந்து கட்டிக்கொண்டு மார்க்கெட் செய்து கல்லா கட்டுகிறார்கள். துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுக்கும் துரைகளால் கருப்புப் பணம் பெருகுகிறதா, இல்லை இந்தியாவில் துண்டு விரித்துவிட்டு 10 வருடங்களுக்குப்பின் வரப்போகும் லாபத்துக்காக இன்றைக்குக் காசுபோடும் அந்நிய முதலாளிகளால் பெருகுகிறதா?
முதலில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட வரி நேரடியாக வசூலிக்கப்படும். இதன்மூலம், நீங்கள் ரூ. 10-க்கு பில் போட்டாலும், ரூ. 10,000-க்கு பில் போட்டாலும் வரி வசூலிக்கப்படும். அந்த வரி அரசாங்கத்துக்குக் கட்டப்படுகிறதா என்று பார்ப்பதுதான் அரசுப் பணியாளர்களின் வேலை. இதே வரி, ஒருங்கிணைக்கப்படாத வர்த்தகத்தில் நடக்காது. இப்போதைக்கு பெரிய “அண்ணாச்சி கடைகள்” மட்டும்தான் பில் கொடுக்கின்றனர். ஆக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதால் அரசுக்கு வருவாய் பெருகுமே ஒழியக் குறையாது.
இது வேலையில்லாத திண்டாட்டத்தினை உருவாக்கும்.
முதலில் தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகள் தங்களின் அடுத்த தலைமுறையும் விவசாயம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லுங்கள். எல்லா விவசாயிக்கும் தன் மகன்/மகள் பி.ஈ படித்து இன்போஸிஸில் வேலைக்குச் சேர்ந்து கை நிறையச் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இதே நிலைதான் இன்றைக்கு சிறு கடைகள் வைத்திருக்கும் பலருக்கும். இதைத் தவறான எதிர்பார்ப்பு என்று சொல்ல முடியாது. நீங்களும் நானும் இணையத்தில் விவாதித்து டாலர்களில் சம்பாதிக்கும்போது, இந்திய இளிச்சவாய்க் கடைக்காரன் மட்டும் அங்கேயே இருக்கவேண்டும் என்று நினைப்பது வேறுவிதமான தீண்டாமை.
வால்மார்ட்டால் சிறு முதலாளிகளின் வாய்ப்பு பறிபோகும் என்று நினைப்பது மடமை. பிக் பஜார், ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ஸ்டார் பஜாரை எதிர்த்து ஒரு கடைக்காரரால் மேற்சொன்ன சேவைகளைச் செய்து நிற்கமுடியும் என்றால், அவரால் வால்மார்ட்டையும் எதிர்த்து நிற்கமுடியும் என்பது மிகவும் அடிப்படையான தர்க்கம். எதுவுமே செய்யாமல், நுகர்வோருக்கும் சேவை செய்யாமல் ஒரு சிறு வியாபாரி நிற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் இருக்கும் தர்க்கம் புரியவில்லை. மாறிவரக்கூடிய கன்ஸுமரிசச் சூழலில் (நீங்கள் எதிர்த்தாலும் இதுதான் யதார்த்தம்) மதிப்பினைக் கூட்டாமல் யாருமே நிற்கமுடியாது என்பதுதான் நிதர்சனம்.
இது தாண்டி, பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஆட்களின் தேவை அதிகம். அவர்களால் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள முடியாது. சமூகப் படிநிலையில் படிப்பினால் கீழே இருக்கும் பெருவாரியான ஆட்களுக்கு வேலை வாய்ப்பினை உண்டாக்கும் சாத்தியங்கள் பெரும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் அதிகம். கடை தாண்டி, கொள்முதல், போக்குவரத்து, பேக்கிங் என நீளும் இடங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மத்திய அமைச்சர், ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார். இது எதன் அடிப்படையில் என்று தெரியாது. ஆனாலும், எனக்குத் தெரிந்தவரையில் மேற்சொன்ன துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இது நுகர்வோருக்கு எதிரானது. விலை குறைந்த சீனப் பொருட்களால் கடைகள் நிரப்பப்படும். இந்திய சிறு பொருட்களுக்குச் சந்தை இருக்காது. அந்நியப் பொருட்களால் கடைகள் நிரப்பப்படும்; சிறு தொழில்கள் பாதிக்கப்படும்; விவசாயிகள் அழிக்கப்படுவார்கள்.
முதலில் முதலாளித்துவச் சிந்தனையின் அடிப்படையினை புரிந்து கொள்வோம். எது விற்கிறதோ, அதுவே போகும். எது லாபம் தருகிறதோ, எதை நுகர்வோர்கள் வாங்குகிறார்களோ அதுவே நிலைக்கும். தமிழ் சினிமாவுக்கும் முதலாளித்துவத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. நல்ல படம், கலைப்படம் என்றெல்லாம் இல்லை. வெண்ணிலா கபடிக்குழு ஜெயிக்கிற இதே ஊரில்தான் ‘பாபா’வும், ‘மன்மதன் அம்பு’ம் படுக்கின்றன. அந்நிய முதலீட்டில் இயங்கும் சில்லறை வர்த்தகத்துக்கும் இது பொருந்தும்.
மயோனீஸும் கிவி பழமும் இருந்தாலும் எல்லாரும் அதை வாங்கப் போவதில்லை. தமிழக தாம்பூலங்களில் வாழைப்பழத்துக்கு பதில் கிவியோ, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னிக்கு பதில் சாஸோ மாறப் போவதில்லை. எத்தனை அந்நியப் பொருட்கள் வந்தாலும், நுகர்வோரின் பழக்க வழக்கத்தை மாற்றுவது மிக்க் கடினம். மேலாண்மை அறிவியலில் இதை habit change & behavior altering என்று சொல்வார்கள். இது கஷ்டம். இதற்கு சுலபமான ஓர் உதாரணம் தருகிறேன். இந்தியாவில் பிட்சா கடைகள் வந்து கிட்டத்திட்ட 10 வருடங்கள் ஆகப் போகின்றன. இன்றளவிலும், பிட்சா ஹட், பிட்சா கார்னர், டொமினோஸைவிட வசந்த பவன், சங்கீதா, சரவண பவன், உடுப்பி, கையேந்தி பவன்களில்தான் கூட்டம் அதிகம். வெளிநாட்டிலிருந்து ஒரு சமாசாரம் வந்தாலே இந்தியாவில் இருக்கும் அனைவரும் மாறிவிடுவார்கள் என்பது பேதமை. அது நடக்காது.
மாறாக, இந்த மாதிரியான கடைகளில் இந்தியப் பொருட்கள் அதிகமாக இருக்கும். ஏனெனில், இந்தியப் பொருட்கள் வைத்தாலேயொழிய கடையில் கல்லா கட்டாது என்பது இந்த முதலாளிகளுக்கும் தெரியும். ஆக வழக்கமாக அண்ணாச்சி கடை அயிட்டங்களில் ஆரம்பித்து, நாட்டு மருந்துக் கடை லேகியம் வரைக்கும், விற்கும் எனத் தெரிந்தால் கடை பரப்புவார்கள். ஆக சிறு/குறு தொழில்களுக்கு இது ஒரு சரியான distribution point.
இன்றைக்கே எத்தனையோ சிறு முதலாளிகள் விலை குறைந்த சீனத் தயாரிப்புகளை வாங்கி விற்கிறார்கள். இதனை வால்மார்ட் வந்துதான் செய்யவேண்டும் என்பதில்லை. இது தாண்டி, 30% பொருட்கள் உள்ளூர் தயாரிப்புகளாக இருக்கவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆக அந்நிய முதலாளிகள் ஒரேயடியாக இந்தியத் தயாரிப்புகளை உதாசீனப்படுத்தவும் முடியாது.
விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு. இதுநாள்வரை, இந்த வர்த்தகம் எப்படி நடந்தது என்று தெரிந்தால் ஏன் ஒருங்கிணைந்த வணிகம் முக்கியமானது என்று சொல்ல முடியும்.
உதாரணத்துக்கு ஒரு விவசாயி ஒரு கீரைக்கட்டை ரூ. 1-க்கு அந்த ஊரில் இருக்கும் ஒரு கொள்முதல் முதலாளிக்கு விற்கிறார். கொள்முதல் முதலாளி, எல்லா விவசாயிகளிடத்திலிருந்தும் வாங்கி இதை ரூ. 1.30-க்கு ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு பெரு முதலாளிக்கு விற்கிறார். பெரு முதலாளி, பல்வேறு சிற்றூர்களிடமிருந்து மொத்தமாய்த் தருவித்து. ரூ. 2-க்கு லாரியில் ஏற்றி, கோயம்பேட்டில் இருக்கிற ஒரு பெரு முதலாளிக்கு விற்கிறார். கோயம்பேடு முதலாளி, லாரி, டிரைவர் பேட்டா எல்லாம் சேர்த்து ரூ. 2-க்கு வாங்கி ரூ. 3-க்கு கோயம்பேடு பெரும் தரகர்களுக்கு விற்கிறார். தரகர்கள், ரூ. 3-க்கு வாங்கி ரூ. 3.25-க்கு சிறு வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். சிறு வியாபாரிகள் கடை போட்டோ, அல்லது தள்ளுவண்டிகளில் கொண்டுவந்தோ அதை ரூ. 4.00-5.00-க்கு நுகர்வோர்களுக்குத் தருகிறார்கள். ஆக ரூ. 1-க்கு வாங்கப்படும் ஒரு பொருள், கிட்டத்திட்ட 400% மடங்கு விலை ஏற்றப்பட்டு நுகர்வோரை வந்தடைகிறது. இடையில் கைமாற்றும் எல்லாரும், எவ்விதமான மதிப்பையும் அந்தப் பொருளுக்குக் கூட்டவதில்லை. விவசாயியும் பெரிதாகப் பொருள் ஈட்டுவதில்லை.
இன்றைக்கு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. பஞ்சாபில் பார்தி-வால் மார்ட், விவசாயிகளிடம் நேரடியாக ஒப்பந்தம் போட்டுக் கொள்முதல் செய்கிறார்கள். இதன்மூலம் விவசாயிகளுக்குத் தொடர்ச்சியான வருமானமும், அறிவியல் வழி ஆலோசனைகளும், என்ன பயிரிட வேண்டும் என்பதில் ஆரம்பித்து, வரும் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்பதுவரை கற்றுக்கொடுக்கிறார்கள். ஐடிசி இதை 10 வருடங்களாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். மதிப்புக் கூட்டாமல் இடையில் பணம் சம்பாதிக்கும் கூட்டம்தான் இன்றைக்குக் குரல் உயர்த்திக்கொண்டு அந்நிய முதலீடு தேவையில்லை என்று சொல்கிறது.
இதை வேறுவிதமாகவும் பார்க்கலாம். இணையத்தில் டிக்கெட் புக் செய்யலாம் என்கிற நிலை வந்தபிறகு, வெற்றுத் தரகர் கூட்டம் காணாமல் போனது. மாறிவரக்கூடிய பொருளாதாரச் சூழலில், எல்லா இடங்களிலும் மதிப்பைக் கூட்டியே ஆகவேண்டும். மதிப்புக் கூட்டாமல் வெறும் கை மாற்றும், கை காட்டும் கூட்டம் வழக்கொழிந்து போவதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது?
தமிழக நிலவரம் (இப்போதைக்கு)
முதல்வர் ஜெயலலிதா தன் அறிக்கையில், மத்திய அரசு, மாநில அரசுகளைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தது எதேச்சாதிகாரம் என்கிறரீதியில் அறிக்கை கொடுத்திருக்கிறார். உண்மை என்னவென்றால், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது பற்றிய கருத்துக் கோரல் ஏற்கெனவே அறிக்கையாக ஜூலை 9, 2010-ல் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், விவசாயிகள், வர்த்தக அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் என பல்வேறு தரப்பினர் இடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டன. அதையொட்டியே இப்போதைய சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகிறார்கள்.
முதல்வரின் அறிக்கையில் 4 கோடி பேர் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று ஒரு வரி உள்ளது. 53 நகரங்கள் என்று எடுத்துக்கொண்டாலே வெறும் 5.3 கோடி பேர் மட்டுமே இந்த அந்நிய சில்லறை வர்த்தகத்தை நேரடியாகப் பார்ப்பார்கள். 120 கோடி பேர் கொண்ட நாட்டில் வெறும் 4.41% மட்டுமே இதை நேரடியாக எதிர்கொள்வார்கள். இதில் எப்படி 4 கோடி பேருக்கு வேலை போகும் என்று தெரியவில்லை. இந்தப் பெரு நகரங்கள் தாண்டி, இந்தியாவின் “அண்ணாச்சி கடைகள்”, சுமார் 80 லட்சம் என்று சொல்கிறார்கள். இதில் 10 லட்சம் கடைகள் இந்த 53 நகரங்களில் இருந்தாலே அபூர்வம். மேற்சொன்ன கேள்வி – பதில்களில், தமிழக அரசு எடுக்கும் முடிவு எவ்வளவு குறுகிய பார்வையுடையது என்று புரியும்.
டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மாநிலங்கள் மற்றும் எல்லா பங்குதாரர்களும் கலந்துதான் இந்தச் சட்டம் வந்திருக்கிறது என்று சொல்கிறார். இதன் காரசாரமான விவாதங்கள் நாடாளுமன்றத்திலும் இணையத்திலும் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்ப்பலை அதிகமாக இருப்பதால் இதைக் கைவிடக்கூடிய சூழலும் உருவாகலாம். இப்போதைக்கு இதுதான் நிலைமை.
அந்நிய முதலாளிகள் இந்தியாவுக்கு வருவதால் உள்ளூர் வியாபாரிகள் காணாமல் போவார்கள் என்று யோசிப்பதைவிட, அந்நிய முதலாளிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் எப்படித் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வார்கள், நுகர்வோர்களுக்காகத் தங்களின் மதிப்புக் கூட்டுதலை எப்படி மாற்றி அமைக்கப்போகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. மேலே சொன்ன பதில்கள் இவற்றுக்கு விடை கூறும் என்று நம்புகிறேன்.
அந்நிய முதலீட்டால் ஆன சில்லறை வர்த்தகத்தில் ஆபத்தே இல்லையா என்றால் இதுவரை அரசியல் கட்சிகள் சொல்லும் ஆபத்துகள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. உலகமெங்கும் இது ஏற்கெனவே நிறைந்திருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. இவைபற்றி விரிவாக, தனியாக விவாதிக்கவேண்டும்.
-நாராயண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக