சனி, 3 டிசம்பர், 2011

பெரியாறு அணை நீர்மட்டம்: கேரள முதல்வர்-அட்வகேட் ஜெனரல் இடையே கருத்து வேறுபாடு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து இருப்பதால், நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூற, "நீர்மட்டத்தை உயர்த்துவதால், பாதிப்பில்லை,' என, கேரள ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அறிக்கை அளித்தது, அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

தமிழக தென்மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை, பலவீனமாக இருப்பதாக கூறி, மாற்று இடத்தில் அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டுகிறது. அதற்கு ஆதரவாக, அம்மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலோடு, பிரசாரம் செய்து வருகின்றன. இந்த பிரச்னையில் கேரளாவின் பல்வேறு அமைப்புகள், அங்குள்ள ஐகோர்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் அடங்கிய டிவிஷன் பெஞ்சு, விளக்கம் கேட்டு கேரளா அரசுக்கு உத்தரவிட்டது. கேரளா அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அறிக்கை அளித்தார். அதில், "முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும், அணையின் பாதுகாப்பிற்கும் சம்மந்தம் இல்லை.
அணை உடைந்தாலும், அருகில் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகள் அதை தாங்கும் பலம் பெற்றுள்ளன. 136.5 அடி நீர் இருப்பதால் பெரியாறு அணைக்கு ஆபத்து இல்லை. அணைபகுதியில் ஏற்படும் நிலநடுக்கமும், பழைய அணை என்பது மட்டுமே பிரச்னை. அணை உடையும் ஆபத்து ஏற்பட்டால், செறுதோணி அணைக்கு நீரை திறந்தால், அரபிக்கடலுக்கு சென்றுவிடும்,' என கூறியிருந்தார்.

"நீர்மட்டம் பிரச்னையில்லை என்றால், மக்களின் அச்சத்திற்கு காரணம் என்ன?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "ஊடகங்களின் பூதாகார பிரசாரத்தால், மக்கள் பீதி அடைந்துள்ளதாக,' தண்டபாணி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விசாரணையை டிச., 6 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அணையின் உண்மை நிலையை கோர்ட்டில் எடுத்துக்கூறிய தண்டபாணிக்கு எதிராக, அனைத்து கட்சிகளும் போர் கொடி தூக்கியுள்ளன. அணையின் தண்ணீரை 120 அடியாக குறைக்க வேண்டும் என்பது அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டியின் புதிய கோரிக்கை. ஆனால், நீர்மட்டத்திற்கும், அணை பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை என, அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். இதனால், அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று கேரள அரசியல் கட்சிகள், மாநில அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக