புதன், 28 டிசம்பர், 2011

முடியல...' - உண்ணாவிரதத்தை இன்றே முடிப்பதாக அறிவித்தார் ஹஸாரே!


Anna Hazare
மும்பை: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதா குறித்த தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள அன்னா ஹஸாரே, மக்கள் ஆதரவு குறைந்ததாலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலும் இன்றே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
வலிமையான லோக்பால் மசோதா கோரி நேற்று பிற்பகல் மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் அன்னா ஹஸாரே.
கடந்த இரு முறையும் அவரது போராட்டத்துக்கும் உண்ணாவிரதத்துக்கும் கிடைத்ததைப் போன்ற மக்கள் ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. காரணம், அவருடன் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்கள், மோசடி குற்றச்சாட்டுகள். இவற்றைப் பற்றி ஹஸாரே இது வரை வாயே திறக்கவில்லை. எல்லாம் பொய்க் குற்றச்சாட்டு என்று பொத்தாம் பொதுவாகக் கூறிவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

வருகிற 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழல் என காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசு லோக்பால் சட்ட மசோதாவை நேற்று நள்ளிரவு மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால் லோக்பால் சட்டத்தை பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் எதிர்த்ததோடு வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. இன்னொரு பக்கம் இந்த லோக்பாலுக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் மசோதாவை தோற்கடித்துவிட்டனர்.

இதன் மூலம் எந்தக் கட்சியுமே லோக்பாலுக்கு ஆதரவாக இல்லை. அது வலுவாக இருந்தாலும் சரி, பலவீனமாக இருந்தாலும் சரி, லோக்பால் மசோதாவே வேண்டாம் என்பதே காங்கிரஸ் தவிர்த்த அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது நேற்று வெட்ட வெளிச்சமானது.

இந்த நிலையில், வலுவான லோக்பாலுக்காக உண்ணாவிரதமிருந்த அன்னா ஹஸாரே, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் அர்த்தமற்றது என வர்ணித்துள்ளார். "எந்த பலனும் தராத இந்த லோக்பால் சட்டத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன?" என அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

உடல்நிலை மோசம்...

இன்னொரு பக்கம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாலும், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் உண்ணாவிரதத்தை இன்றுடன் கைவிட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் நேற்றுதான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன் என்று நினைக்காதீர்கள். நான்கு தினங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன். இப்போதைய சூழல் சரியில்லை. எனவே இன்று முடித்துக் கொள்கிறேன். இப்போது எனக்கு எதிரில் உள்ள ஒரே வாய்ப்பு, காங்கிரஸை தோற்கடிப்பதே.

உண்ணாவிரதம் பாதியில் நின்றுவிட்டாலும், ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும். வரும் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸை தோற்கடிக்க பிரச்சாரம் செய்வேன். மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்," ஹஸாரே தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக