புதன், 28 டிசம்பர், 2011

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கும் 5,000 பேர் கூட வரவில்லை!

மும்பை& டெல்லி: மும்பையில் அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும், டெல்லியில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் இந்த முறை மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.
மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு 50,000 பேர் வருவர், ஒரு லட்சம் பேர் வருவர் என்று கூறியது அன்னா தரப்பு. ஆனால், 5,000 பேர் கூட வரவில்லை.
இத்தனைக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று பகல் 12.30 மணிக்குத் தான் ஹசாரே தொடங்கினார். காலையிலேயே கூட்டம் கூடாத நிலையில், மாலை ஆக ஆக இருந்தவர்களும் கூட கலைந்து போய்விட்டனர்.
முன்னதாக, பாந்திராவில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து காலை 10 மணி அளவில் உண்ணாவிரத பந்தலுக்கு அன்னா ஹசாரே புறப்பட்டார். அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப்பில் தேசிய கொடியை பிடித்தபடி அவர் சென்றார். ஜூகு கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை அவர் செலுத்த சென்றபோது, சுமார் 20 பேர் கறுப்புக் கொடிகளுடன் நின்றிருந்தனர்.
அவர்கள் அன்னா ஹசாரேவுக்கு எதிராக கோஷமிட்டபடி, அவரது வாகன அணிவகுப்பை தடுத்து நிறுத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

பின்னர் காந்தியின் வெண்கல சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அன்னா ஹசாரே, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். அதே போல சத்ரபதி சிவாஜி சிலைக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னா ஹசாரேயின் வாகன அணிவகுப்பு உண்ணாவிரத பந்தல் நோக்கி சென்றது.

சாண்டா குருஸ், துலிப் ஸ்டார் ஹோட்டல், மித்திபாய் கல்லூரி, எஸ்.வி.ரோட், வில்லே பார்லே, பாந்திரா நெடுஞ்சாலை வழியாக சென்ற ஊர்வலம், இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பிறகு எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தை அடைந்தது.

டெல்லியிலும் கூட்டம் இல்லை:

அதே போல டெல்லி ராம்லீலா மைதானத்திலும் உண்ணாவிரதம் நடைபெற்றது. அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கடும் குளிர் காரணமாக உண்ணாவிரதம், ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது.

ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வரவில்லை. 50,000 பேர் கூடுவர் என்று அன்னா ஹசாரே கூறியிருந்த நிலையில் இங்கும் 5,000 பேர் கூட உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.

டெல்லியில் கடும் குளிர் நிலவுவதாலும், அன்னா ஹசாரே கலந்து கொள்ளாததாலும், இந்த உண்ணாவிரதத்துக்கு கூட்டம் சேரவில்லை என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால், மும்பையில் ஹசாரேவே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நிலையிலும் கூட்டம் கூடவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக