புதன், 28 டிசம்பர், 2011

ரஜினி கருப்பு பணத்தில் கட்டிய ராகவேந்திர மண்டபத்தில் அன்ன ஹசாரே.EVKS இளங்கோவன் கிண்டல் கேலி

கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரா மண்டபத்தில், ஊழலை ஒழிக்க ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருக்கிறார்கள், என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 127வது ஆண்டு தொடக்க விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்பட பல நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கோஷங்களை முழங்கினார்கள்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த இளங்கோவன், "ஹஸாரேவுடன் இயங்குபவர்கள் யார்... பெரும்பாலும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், ஒழுங்காக கணக்கு காட்டாதவர்கள்.
கறுப்புப் பணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) அவருக்கு ஆதரவாக போராட்டமே நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று பாருங்கள்... சென்னையில் 100 பேரைக் கூட திரட்ட முடியாத ஒரு போராட்டம். இன்று வேடிக்கை பார்க்க வந்தவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் 10 பேர்தான் தேறியிருப்பார்கள்.
மக்கள் தெளிவானவர்கள். அவர்களை எப்பேர்ப்பட்டவர்களாலும் ஏமாற்றவே முடியாது. மண்டபம் கொடுத்தவர்களுக்கும் இது புரிந்திருக்கும்.
ஹசாரேவை இந்த வருட தொடக்கத்தில் ஊடகங்கள் பெரிதாக உருவகப்படுத்தின. அவரது நிஜ உருவம் இப்போது தெரிந்து விட்டது.
ஹசாரே இப்போது காற்று போன பலூன் அவர் புஸ்வாணம் ஆகி விட்டார் என்பதுதான் புத்தாண்டின் இனிப்பான செய்தி. காங்கிரஸ் 50 ஆண்டுகள் விடுதலைக்காக போராடிய மாபெரும் மக்கள் இயக்கம். 60 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் கட்சி இது. ஏழை மக்களின் பாதுகாவலன் காங்கிரஸ் மட்டுமே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ்தான். இதை திரித்துக் கூறி பொய்யைப் பரப்பிய பிஜேபி, ஆர்எஸ்எஸ், அவர்களின் முகமூடி ஹஸாரேயின் சாயம் இன்று ஒரே நாளில் வெளுத்துவிட்டது," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக