ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கேரளாவுக்கு எந்த பொருளும் அனுப்பக் கூடாது- வியாபாரிகள் முடிவு

நெல்லை: தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவுக்கு எந்த பொருளும் அனுப்பக் கூடாது என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை ஒரு நாளும் விட்டுத் தரமாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கேரளத்தினர் தமிழர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கேரளாவில் உள்ள தமிழக் குடும்பங்கள் உயிருக்கு பயந்து தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 21ம் தேதி் மதிமுக சார்பில் கேரள சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. நெல்லையில் நேற்று பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் ரயில் சந்திப்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்த கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தினரும் போராட்ட களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.

போராட்டத்தின் உச்ச கட்டமாக நெல்லை, தூத்துக்குடி வியாபாரிகள் கேரளாவுக்கு பொருட்கள் கொண்டு செல்வதை 100 சதவீதம் நிறுத்தும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் தராத கேரளாவுக்கு எந்த பொருளையும் அனுப்பபக் கூடாது என்ற முடிவுக்கு வியாபாரிகள் வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக