ஞாயிறு, 18 டிசம்பர், 2011

வெளிநாட்டுப் பணம்: கூடங்குளம் போராட்டக்குழுவிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

சென்னை: கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடிவரும் அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததற்கான ஆதாரம் சிக்கி இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் மத்திய அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்துசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்குவது தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்குழுவினருடன் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய பாதுகாப்பு நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சமரசம் ஏற்படவில்லை.
அணுமின் நிலையத்தால் பொது மக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக்குழுவினர் கேட்கவில்லை, அதற்கு மாறாக அணுமின் நிலைய வரை படம், ரஷியாவுடனான ஒப்பந்த சரத்துகள், அணுமின் நிலைய செலவு கணக்குகள் போன்ற தேவையில்லாத கேள்விகளை கேட்டனர்.

ரகசியமான விசயங்கள்

அரசாங்கத்தால் ரகசியமாக பாதுகாக்க வேண்டிய விஷயங்களை போராட்டக்காரர்களிடம் தெரிவிக்க இயலாது. தேவையில்லாத கேள்விகளை கேட்டு காலதாமதம் செய்வதையே விரும்புகின்றனர். இதனால்தான் உடன்பாடு ஏற்படவில்லை.

அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்குழுவினர் மீது தமிழக போலீசார் வழக்கு மட்டும் பதிவு செய்கின்றனர். மேல் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 6 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உற்பத்தி தொடங்கும்

பிரதமர் அறிவித்தபடி அடுத்த சில வாரங்களில் முதல் அணு உலை செயல்பட தொடங்கும். 2-வது அணு உலையில் மின் உற்பத்தி 6 மாதங்களில் தொடங்கப்படும். 2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இந்த கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி அசாம், ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் புதிய அணுமின் நிலையங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. மேலும் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளதையடுத்து விரைவில் கூடுதல் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக