வியாழன், 29 டிசம்பர், 2011

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள், உதவியாளர்கள் மூலமே, பிரேத பரிசோதனை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள், உதவியாளர்கள் மூலமே, பிரேத பரிசோதனை நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை தருவதிலும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய குற்றவியல் மற்றும் மருத்துவச் சட்டப்படி, பிரேத பரிசோதனை அறிக்கைப்படி தான், கேள்விக்கு உள்ளான ஒரு இறப்பு, இயற்கையானதா, விபத்தா, கொலையா, சதியா என்பது தெரிய வரும். அதன்படி தான், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சாதாரண ஊழியர்களே... : சில அரசு மருத்துவமனைகளில், சட்டம் சார்ந்த மருத்துவத் துறை டாக்டர்கள் இல்லாமல், உதவியாளர்கள் மற்றும் பிணவறை தொழிலாளர்கள் மூலம், பிரேத பரிசோதனை நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, கடந்த 16ம் தேதி புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிரேத பரிசோதனை செய்யும் சில டாக்டர்கள், பணிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் போலியாக கையொப்பம் இடுவதாகவும், தாங்கள் இல்லாத பிரேத பரிசோதனைகளுக்கு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் தருவதாகவும் கூறப்படுகிறது.போலி கையொப்பம் : சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் முருகேசன் என்பவர் தலைமையில், டாக்டர்கள் அன்புச்செல்வன், ஜோசப் ஹெலன் மற்றும் விக்ரம் ஆகியோர், பிரேத பரிசோதனை டாக்டர்களாக பணிபுரிகின்றனர்.
இவர்கள், பல நேரங்களில் பணிக்கு வருவதில்லை அல்லது பணி நேரத்தில், ஏதாவது காரணம் கூறி வெளியே சென்று விடுவதாகவும், முக்கிய வழக்குகள் தொடர்பான பிரேத பரிசோதனையில் மட்டும் பங்கு கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனை டீன் அலுவலகம் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பிரிவு அலுவலகம் ஆகியவற்றின் வருகைப் பதிவேடுகளில், டாக்டர்களின் கையெழுத்துகள், பல விதங்களில் உள்ளன. இதனால், எது உண்மையான கையெழுத்து என தெரியாமல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் அன்புச்செல்வனுக்கு மட்டும், டி.ஏ., ஏ.எஸ்., த.அ., என்ற மூன்று வகை கையெழுத்துகள் போடப்பட்டுள்ளன. இதேபோல், அங்குள்ள பல டாக்டர்கள் கையெழுத்து, வெறும் "இனிஷியல்' ஆகவே உள்ளது.

நடைமுறைக்கு வரவில்லை : கடந்த 2009ல், மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சுகுமார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், திடீரென ரெய்டு நடத்தினார். அப்போது வருகைப் பதிவில் கையெழுத்திட்டிருந்த சில டாக்டர்கள், மருத்துவமனை வளாகத்தில் இல்லை. டாக்டர்கள் அன்புச்செல்வன், டெக்கால் போன்றோர் வருகைப்பதிவில் கையெழுத்திட்டிருந்தும், அவர்கள் பணியில் இல்லாதது தெரிந்தது. சுப்பிரமணியன் என்ற மருத்துவர் கையெழுத்திட வந்தார். அப்போது, துணை இயக்குனர் வருகைப் பதிவை ஆய்வு செய்த போது, அவரது கையெழுத்து ஏற்கனவே போடப்பட்டிருந்தது.
இதை அறிக்கையிலேயே சுகுமார் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அனைத்து டாக்டர்களும், ஆர்.எம்.ஓ.,விடம் தனி வருகைப் பதிவேடு வைத்து, அவர் முன்பும் கையொப்பமிட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு தற்போது வரை பின்பற்றப்படவில்லை.
கடிதம் : தடயவியல் பேராசிரியர் பணியில் இருக்கும் டாக்டர் முருகேசன், சமீபத்தில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். அதில், முறைப்படி பிரேத பரிசோதனை செய்ய, குறைந்தது ஒரு மணி நேரமாகும். மாலை 6 மணிக்கு மேல், பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல காரணங்களால், 6 மணிக்கு பின்பும், பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகளால், சட்டப் பிரச்னை ஏற்பட்டால், பெரும் சிக்கலாகி விடும். அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என, கூறப்பட்டுள்ளது.

16 பக்க அறிக்கை : ஒரு பிரேத பரிசோதனையின் போது, 16 பக்க அறிக்கையில் குறிப்பு எடுக்க வேண்டும். இந்த குறிப்புகள் தயார் செய்ய மட்டுமே, குறைந்தது அரை மணி நேரம் ஆகும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தயார் செய்யப்பட்டால் மட்டுமே அந்த அறிக்கை கோர்ட்டில் அனுமதிக்கப்படும். இப்படியிருக்க, காலை 10 மணியிலிருந்து, மாலை 6 மணிக்குள், எந்தவித இடைவேளையின்றி, அதிகபட்சம், எட்டு பிரேத பரிசோதனைகள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், டாக்டர் அன்புச்செல்வன், ஒரு நாளில் மட்டும், அதிகபட்சம் 14 பிரேத பரிசோதனை செய்துள்ளதாக, பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால், பிரேத பரிசோதனைகள் முறைப்படி நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போலி அறிக்கை : பிரேத பரிசோதனையின் போது, கண்டுபிடிக்க வேண்டிய விவரங்கள் குறித்து, 16 பக்க அறிக்கைக்கான விண்ணப்பங்கள், மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், இவற்றை பயன்படுத்தாமல், வெறும் நான்கு பக்கங்களில், தாங்களாகவே விண்ணப்பங்களை அச்சிட்டு வைத்துள்ளனர். இவை, அங்குள்ள கூட்டுறவு அங்காடியில், ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடந்துள்ள, 5,000க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு, அரசின் உத்தரவுப்படியான அறிக்கைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. முக்கியமான வழக்குகளுக்கு மட்டும், ரெடிமேடாக அறிக்கை தயாரித்து, அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சான்று தருவதில் தாமதம் : பிரேத பரிசோதனை சான்றிதழை, பரிசோதனை முடிந்த 48 மணி நேரத்தில் தர வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், தாமதப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில், 200 சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. சான்றிதழ் கொடுப்பதற்கான பதிவேடு, சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. உயரதிகாரிகள் சோதனையிடும் போது, பதிவேடுகளையும், சான்றிதழ்களையும், பழைய தேதிகளில் தயார் செய்து, பாவ்லா காட்டி விடுகின்றனராம். இவ்வாறு தாமதம் செய்வதால், புதைக்கப்படும் பிணங்கள், அழுகி விடும் நிலையில், எந்த விதமான அறிக்கை தந்தாலும், பிணத்தை தோண்டி எடுத்து, மறுசோதனையில் உறுதிப்படுத்த முடியாது. style="font-weight: bold;">இனி தவறுகள் நடக்காது : இந்த பிரச்னை குறித்து, "தினமலர்' நாளிதழுக்கு வந்த புகார்கள் தொடர்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். அவர் கூறும்போது, ""இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துவோம். சம்பந்தப்பட்ட துறையினர், இனி எதிர்காலத்தில் எந்தவித குளறுபடிகளிலும் ஈடுபடாமல், விதிமுறைகளை சட்டப்படி பின்பற்ற, உறுதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.

தலைமை ஆசிரியரின் கதி : வேலூர் மாவட்டம், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பொன்னுரங்கம். இவரது மகன் சரவணன், சென்னை அம்பத்தூரிலுள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பி.இ., படித்து வந்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர், கல்லூரி வளாகத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்தார் என, போலீசில் புகார் பதிவாகி உள்ளது. ஆனால், இது ஒரு கொலையாக இருக்கலாம் என, பெற்றோர் தரப்பு வேதனைப்படுகிறது. இவரது உடல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் பொன்னுரங்கம் கூறும்போது, ""முதல்வரின் தனிப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர், தடயவியல் துறை என, அனைத்திற்கும் புகார் அளித்து விட்டேன்; பிரேத பரிசோதனை சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதன் பின்னணி என்னவென்பது, புரியாத புதிராக உள்ளது,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக