வியாழன், 29 டிசம்பர், 2011

பெரியாறு அணை விவகாரம் மற்றொரு வாலிபர் தற்கொலை


சின்னமனூர் : முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரியாறு அணை பிரச்னை காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. நேற்று கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூரில் 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், சின்னமனூர்&கஸ்பாரோட்டை சேர்ந்த சின்னராஜ் மகன் ராமமூர்த்தி(36) கலந்து கொண்டார். இவர் விஷ விதைகளை சாப்பிட்ட பிறகே ஊர்வலத்தில் நடந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தலைசுற்றல் எடுக்கவே உடனடியாக ராமமூர்த்தி வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் சகோதரி தமிழ்செல்வி விசாரித்தபோது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை தீர்வு கிடைக்காததால் விஷம் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்சில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந் தார். அவரது சட்டை பாக்கெட்டில் கலெக்டரு க்கு ஒரு கடிதம் இருந்தது. அதில் ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. இப்பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என எழுதியுள்ளார். இதனை போலீ சார் கைப்பற்றினர்.

அங்கு வந்த உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருடன் கடிதத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக தற்கொலை செய்து கொண்டதாக எப்ஐஆர் பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தனர். அவரது உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.  தற்கொலை செய்து கொண்ட ராமமூர்த்திக்கு திருமணமாகவில்லை. இவருக்கு சகோதரி தமிழ்செல்வி, சகோதரர்கள் வேலுச்சாமி, முருகன், செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அண்ணன் வீட்டில் தங்கி பித்தளை பாத்திரங்கள் செய்யும் தொழில் செய்து வந்தார்.

உயிர் தியாகம் செய்த 2 பேர்:  சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்த சேகர் என்ற தேமுதிக பேச்சாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் இதே பிரச்னைக் காக விஷம் குடித்து இறந்தார். நேற்று ராமமூர்த்தி இறந்துள்ளார். கடந்த வாரம் தேனி அருகே இதே பிரச்னைக்காக 2 பேர் தீக்குளித்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

புத்தாண்டில் புதிய அணைக்கு பூமிபூஜை?

உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து கூறி வருகிறார். புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஏற்கனவே தேர்வு செய்து, நிதியும் ஒதுக்கி விட்டனர். இந்நிலையில் பூமிபூஜையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 2012 ஜனவரி 1ல் பூமிபூஜை நடத்த கேரளா திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.
   இந்நிலையில், கேரள அரசு புதிய அணைக்கு பூமிபூஜை நடத்தினால், 2012 ஜனவரி 1ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து, புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட தேனி மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக