சனி, 31 டிசம்பர், 2011

இந்தியாவில் தற்கொலைகள்: அதிர்ச்சியா, வளர்ச்சியா, சாபக்கேடா?

அக்டோபர் மாத கடைசி வாரம். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் விஜயகுமார் மதியம் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் தனது அறைக்கு வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த அவர், நான்கு மாணவர்கள் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் தங்கியிருந்தார். திரும்பி வந்தவர் யாருடனும் பேசாமல் சிறிது நேரம் அப்செட்டாக உட்கார்ந்திருக்கிறார்.
ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போவதாக உடன் தங்கியிருந்தவர்களிடம் சொல்லி விட்டு வெளியே போனவர், அருகில் இருந்த கடையில் கெரசின் வாங்கி, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெருவில் தன் மீதே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டிருக்கிறார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துப் போவதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது.
அவருக்கு வயது 19. எஞ்சினியரிங் 2-ம் ஆண்டு படிக்கிறார். அன்றைய கணக்கு தேர்வில் சரியாக எழுதவில்லை என்ற கவலையில் தனது உயிரை தானே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இது போன்று பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 2010-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நான்கு நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தற்கொலை நடக்கிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடித்திருக்கும் முன்பு இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒருவர் தனது உயிரை எடுத்துக் கொண்டிருப்பார்.
இந்தியாவில் தற்கொலை வீதம் கடந்த 20 ஆண்டுகளில் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. ஒரு லட்சம் மக்கள் தொகையில் இத்தனை பேர் என்ற வீதத்தில் தற்கொலைகளை அளவீடு செய்கிறார்கள். 1989-ல் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 8.47 என்று இருந்த இந்த வீதம் 2010-ல் 11.4 ஆக உயர்ந்திருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம்தான் இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை நிகழும் மாநிலங்களாக இருக்கின்றன. மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் என்ற இரண்டு மாநிலங்களையும் சேர்த்தால் நாட்டில் நிகழும் தற்கொலைகளில் 57.2% முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் இந்தப் பகுதிகளில் நடைபெற்றிருக்கின்றன.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும், கேரளாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி, இந்த புள்ளிவிபரம் பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிய வந்தது. பல தற்கொலைகள் தற்கொலைகளாக பதிவு செய்யப்படுவது இல்லை என்றும் உண்மையான தற்கொலை வீதம் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முத்துக்குமார், செங்கொடி போன்று போராட்ட நோக்கத்தோடு நிகழும் தற்கொலைகள் சமூகத்தை தட்டி எழுப்ப நேரடியான விமர்சனத்தை வைத்தாலும், ஒவ்வொரு தற்கொலையும் சமூகத்தின் மீது தனிநபர் வைக்கும் விமர்சனமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏதோ ஒரு வகையில் அல்லது பல வழிகளில் ஒருவர் சமூகத்தினால் நிராகரிக்கப்படுவதாக உணர்ந்து தம்மைத் தாமே மாய்த்துக் கொள்கிறார்.
2010-ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகளில் 21.1% உடல் நோய்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்றும், 23.7% குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்பவர்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற காரணங்கள் தேர்வில் தோல்வி, காதலில் ஏமாற்றம், வறுமை, தொழில் தோல்வி, கடன் நெருக்கடி என்று பதிவாகியுள்ளன.
இத்தகைய தற்கொலைகளுக்கு பின் இருக்கும் மன அழுத்தம் எத்தகையது என்று பார்ப்போம். மேலே சொன்ன ஆந்திர மாணவரை எடுத்துக் கொள்வோம். 19 வயதில் வீட்டிலிருந்து வேறு ஊருக்கு வந்து, சோழிங்கநல்லூரிலிருந்து திருப்போரூர் போகும் சாலையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஏரியை நிரப்பி உருவாக்கப்பட்ட குடியிருப்பில் வசிக்கிறார். பல லட்ச ரூபாய் நன்கொடை, கல்விக் கட்டணம் கட்டி சத்தியபாமா கல்லூரியில் எஞ்சினியரிங் படிக்கிறார். அதற்காக ‘சிரமப்பட்டு’ பணம் திரட்டிய பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளின் சுமை மனதில்.
தங்கியிருந்த வீட்டு உரிமையாளருக்கு மாதா மாதம் வாடகை கொடுப்பதோடு உறவு முடிந்து போய் விடும். வீட்டு உரிமையாளருக்கோ சுற்றி இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கோ இந்த மாணவர்கள் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது மட்டுமே அக்கறையாக இருக்கும். கல்லூரியை நடத்தும் ‘தர்ம பிரபுக்கள்’ அவரது திறமைகளை வளர்ப்பதிலோ, அறிவை பெருக்குவதிலோ இல்லை கற்றுக் கொடுப்பதிலோ அக்கறை கொண்டிருப்பதை விட பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
‘கொடுத்த காசுக்கு ஒரு டிகிரி வாங்கி, நல்ல ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட வேண்டும், சேர்ந்து வரும் சம்பளத்தில் பெற்றோர் பட்ட கடனை அடைத்து விட வேண்டும். உடன் பிறந்தவர்களை கை தூக்கி விட வேண்டும். எல்லோரையும் போல சமூகத்தில் மதிப்பாக வாழ வேண்டும்.’ இதுதான் அவரது வாழ்க்கையைச் செலுத்தும் எண்ணங்கள்.
இதில் எந்த இடத்திலும் இவர் மீது உண்மையான அக்கறை, அவரது வளர்ச்சியில் கவனம் கொண்டுள்ளவர்கள் யாருடனும் உறவாடும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம். ‘ஒரு தேர்வில் மோசமாக எழுதியதால், மதிப்பெண் குறையும், மதிப்பெண் குறைந்தால் கேம்பஸ் நேர்முகத்தில் வேலை கிடைக்காது, வேலை கிடைக்காவிட்டால் பொருளாதார நெருக்கடி, நண்பர்களுக்கிடையே மதிப்பு இழப்பு’ என்று அவரது மனதில் ஓடிய கணக்கை வெளிப்படையாக பேசி சரியான தீர்வு காண அவருக்கு யாரும் இருந்திருக்கவில்லை. முக்கியமாக ஒரு இளைஞன் தனது பிரச்சினைகளுக்கான சமூக அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல் தான்தான் அதற்கு காரணம் என்று யோசிப்பதும், அதன் படியே முயற்சி செய்வதும்தான் இறுதியில் தற்கொலையில் போய் முடிகின்றன.
எல்லா உறவுகளையும் பண பரிமாற்றங்களாகவும், தனிநபர் போட்டியாகவும் குறுக்கி விடுவது உலகமயமாக்கப்பட்ட, தனியார் மயப்படுத்தப்பட்ட, மறுகாலனியாக்க சமூகத்தின் இயல்பாக இருக்கிறது.
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…” என்பதுதான் வாழ்க்கையின் தத்துவ அடிப்படையாக போதிக்கப்படுகிறது. அதுதான் வெற்றியின் வழி, சமூக முன்னேற்றத்தின் அடிப்படை என்று முதலாளித்துவ சமூகம் திட்டமிடுகிறது. ஆனால், உழைத்து பணம் சம்பாதிப்பதும், ஈட்டிய பணத்தை செலவழிப்பதும் மற்றவர்களைச் சார்ந்த சமூக அடிப்படையிலேயே நடக்கிறது. இந்த முரண்பாடுகளின் கூர்மை தனி மனிதர்களை மேலும் மேலும் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்குகிறது.
முதலாளித்துவ அமைப்புகள் கூர்மையாக செதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஹாங்காங் நகரில் நீங்கள் ஒரு மின்னணு கருவிகள் விற்கும் கடைக்குப் போனால், புருவம் மழித்து மீள் வரையப்பட்ட, முகத்தில் அதீத ஒப்பனை போடப்பட்ட அழகான விற்பனையாளர் இளம்பெண் உங்களை வரவேற்பார். அவரது சிரிப்பும், உபசரிப்பும், அக்கறையும் மனதை நிறைத்து விடும். அவரது ஷிப்ட் மாறும் நேரத்தில் நீங்கள் போய் ஒரு காமராவை வாங்கிக் கொண்டு வெளியில் வந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு தெருவில் அவர் வரும் போது பார்த்தால், அவருக்கு உங்களை அடையாளமே தெரியாது, முகத்தில் புன்சிரிப்பு முழுவதுமாக மறைந்திருக்கும். அவரது உலகில் முழுவதுமாக மூழ்கியிருப்பார். ‘அடுத்த ரயிலைப் பிடித்து எப்போது வீடு போய் சேருவது, மாலை உணவுக்கு என்ன திட்டமிடுவது?’ என்ற சிந்தனைகள்தான் அவருக்கு மிஞ்சியிருக்கும்.
கடைக்குள் பார்த்த அந்த பெண் தான் பெறும் சம்பளத்துக்கு தன்னையே செதுக்கிக் கொண்ட ஒரு பிம்பம். அப்படி செதுக்கிக் கொண்ட பிம்பங்களோடு நாளுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை பார்த்து பணம் சம்பாதித்து, வேலைக்கு வெளியே தனக்குப் பிடித்த கொண்டாட்டங்களில் அந்த பணத்தை செலவிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் முதலாளித்துவ அமைப்பு நமக்குக் கொடுக்கும் சுதந்திரம். செய்யும் பணியில் முழு ஈடுபாட்டுடன், உண்மையான மகிழ்ச்சியுடன் செய்யும் வாய்ப்பும், சூழ்நிலையும், தத்துவ அடிப்படையும் யாருக்கும் கிடைப்பதில்லை.
பணியிடத்தில் எப்படி பணம் ஈட்டுவது என்ற நோக்கத்திலான சூழலிலும், பணி முடிந்த பிறகு நம்மிடமிருந்து எப்படி பணத்தை ஈட்டுவது என்ற நோக்கத்திலானவர்களையும் சந்திப்பதுதான் உச்சக்கட்ட முதலாளித்துவ அமைப்பின் விளைவாக இருக்க முடியும். குடும்பம், காதல், நட்பு என்று அனைத்து உறவுகளும் பண பரிமாற்றங்களாக சுருங்கி விடுவதுதான் நவீன முதலாளித்துவ சமூகத்தின் இறுதி லட்சியம்.
அந்த லட்சியத்தை நோக்கிய பாதையில் சாந்தகுமாரும் அவரைப் போன்ற லட்சக்கணக்கான மக்களும் திரும்பிய பக்கமெல்லாம் சுயநல முகங்களை மட்டும் பார்க்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் அல்லது எதிர்பாராத புதியவர் ஒருவர் என்று எங்காவது காணக்கிடைக்காத அன்பும் அக்கறையும் பார்க்க நேர்ந்தால் ஒரு கணம் உளம் உருகி நிற்கிறார்கள். அத்தோடு தன்னை உலுப்பிக் கொண்டு தனது ஓட்டத்தைத் தொடர்ந்தால்தான் அவர் தனது வாழ்க்கையை செழிப்பாக்கிக் கொள்ள முடியும். தனித்து ஓடும் அந்த லட்சிய ஓட்டத்தில்தான் ஒரு சிலர் தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.
அத்தகைய ஓட்டத்தில், தடுக்கி விழுபவர்களையும் ஓட முடியாதவர்களையும் மிதித்துக் கொண்டும், அவர்களை விட வேகமாக ஒடும் போது மட்டுமே ஒருவர் தனது இடத்தை அடைய முடியும். ஆக ஓடுவதே சமூக முரண்பாட்டை ஏற்றுக் கொண்டுதான் என்றான பிறகு ஒரு தனிநபரது மனது சிதறுண்டு போவது சர்வ சாதாரணம் என்பதை நாம் அறிவோமா?
கடந்த 20 ஆண்டுகளின் உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் மூலம் பெரும்பகுதி மக்கள் சிறப்பான வாழ்க்கையைப் பெற்று விட்டார்கள் என்று ஊளையிட்டுக் கொண்டு மேன்மேலும் அதே பாதையில் நாட்டைச் செலுத்த முயலும் மன்மோகன் சிங் முதலானவர்களின் முகத்தில் அறையும் புள்ளிவிபரங்களில் இது முக்கியமான ஒன்று. இதே திசையில் மேலும் உந்தித் தள்ள சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்று யாரோ குவித்து வைத்திருக்கும் மூலதனத்தை பாய்ச்சி விட்டால், நம் நாடு வல்லரசாகி விடும் என்று கனவு காணவும் இவர்கள் பிதற்றுகிறார்கள்.
உண்மையில் வால்மார்ட் வந்தபிறகு எத்தனை சில்லறை வணிகர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்? எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும்?
அதற்கு ஜோசியம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சமீபத்திய ஆண்டுகளில் நாம் அடிக்கடி படிக்கும் “பல இலட்சம் விவசாயிகள் தற்கொலை” எனும் புள்ளி விவரம் அதற்கு விடையளிக்கவில்லையா? அந்தப் புள்ளிவிவரம் எனும் கணக்கு எழுப்பும் பொருளோவியத்தை புரிந்து கொண்டால் இந்தியாவின் தற்கொலை குறித்த பொருளையும் நாம் அறியலாம்.
தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று ‘வீரம்’ பேசுவதை விடுத்து, சக மனிதனின் துன்பம் கொண்டு போரடும் போது மட்டுமே தனிப்பட்ட முறையில் தனது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமென்ற தனிநபர் சிந்தனையிலிருந்து நமது மக்களை விடுவித்து சமூக மனிதர்களாக, உறுதியான மனிதர்களாக மாற்ற முடியும். தற்கொலையால் மரித்தோருக்கு உயிர்த்திருப்போர் செய்யக்கூடிய அஞ்சலியாக இது மட்டுமே இருக்க முடியும்.
______________________________________________
- செழியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக