சனி, 31 டிசம்பர், 2011

பக்கா வியாபாரிகளுக்கு பாரத ரத்னா பட்டமா?சினிமா நடிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும்

இவங்களுக்கு பாரத ரத்னாவா? மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "பணம் சம்பாதிப்பதையே, நோக்கமாகக் கொண்டு செயல்படும், சினிமா நடிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும், பாரதரத்னா விருதை வழங்கி, அவ்விருதை கேவலப்படுத்திவிடாதீர். இதனால், நம் கலாசாரத்திற்கும், நாகரிகத்திற்கும் பெருத்த தலைக்குனிவு தான் ஏற்படும்' என, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கடுமையாகக் குறை கூறியிருக்கிறார்.

பாரத ரத்னா விருது, இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு, தன்னைத் தியாகம்செய்தவர்களுக்குக் கவுரவம் அளிப்பதற்காக தரும் விருது. இதை, விருது பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தாலே, பளிச்செனத் தெரியும்... அம்பேத்கர், சர்.சி.வி.ராமன், நேரு, இந்திரா, ராஜிவ், இசைக்குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமி, அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, கட்டடக்கலை நிபுணர் விஸ்வேஸ்வரய்யா என, எத்தனையோ திறமைசாலிகள், பாரத ரத்னா விருது பெற்றனர். இவர்கள், கோடியாக சம்பாதித்து, குபேர வாழ்க்கை நடத்தியவர்கள் அல்ல; "டிவி' விளம்பரப் படங்களில் தோன்றி, தம்மை பிரபலமாக்கிக் கொண்டதும் இல்லை. ஸ்ரீமான் சச்சின் டெண்டுல்கர், பிறப்பாலேயே கோடீஸ்வரர் அல்ல; கிரிக்கெட் விளையாட்டில் சம்பாதித்து, கோடி கோடியாய் பணம் சேர்த்தவர். "பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி' என, விளம்பரம் செய்து கொண்டவர். இந்நாட்டுக்காக பெரிய தியாகம் ஏதும் செய்யவில்லை. உலக அழகி ஐஸ்வர்யாராயும், சினிமாவில் நடித்து, கோடி கோடியாய் சம்பாதித்தவர்; நாட்டுக்காக பெரிய தியாகம் ஏதும் செய்யவில்லை. தமிழக அரசு, தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும், தாராளமாக கலைமாமணி விருது வழங்குகிறது. அனுஷ்கா, தமன்னா போன்ற கவர்ச்சி நடிகைகளின் திறமைக்குத் தரப்பட்ட உன்னத விருது இது. பாரத ரத்னா, கலைமாமணி போல மிகச் சாதாரண விருது அல்ல. அதை அடைய முயற்சிப்பவர்களும், பெருமைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வது நியாயம் தானே?
இது நாடா அல்லது காடா? டாக்டர்.ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "மத்திய அரசின் தொலைபேசி நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை, கடந்த மார்ச் மாத நிலவரப்படி, நுகர்வோரிடமிருந்து, 6,444 கோடி ரூபாய் வசூலிக்காமல் உள்ளன' என்று, "தினமலர்' சுட்டிக்காட்டியுள்ள செய்தி வேதனையளிக்கிறது. கடுகு போன இடம் ஆராய்வர்; பூசணிக்காய் போகிற இடம் தெரியாது! நுகர்வோர்கள் பாக்கி மட்டுமல்லாமல், 2004ல் இருந்தே மத்தியில் தி.மு.க., அமைச்சர்களால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, பல்லாயிரங்கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவது, உண்மையான இந்தியர்களுக்கு வேதனையளிக்கிறது. இந்த இழிநிலைக்கு காரணம் யார்...? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, ஒரு உதாரணம் இதோ... தன் போட்கிளப் அரண்மனையிலிருந்து, 323 உயர்தர இணைப்புகளுடன் கூடிய, மதிப்பு மிக்க ஐ.எஸ்.டி., எண்கள் கொண்ட, ரகசிய டெலிபோன் எக்ஸ்சேஞ்சை நடத்தி, தன் குடும்ப, குழும ஊடகங்களுக்கு இணைப்பைக் கொடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, 440 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி, அதே நேரம் தன் குடும்ப, குழுமத்திற்கு மட்டும், பல்லாயிரங்கோடி ரூபாய் லாபம் பெற்று தந்தார் தயாநிதி என்ற, சி.பி.ஐ.,யின் கடுங்குற்றச்சாட்டு, கடந்த 60 மாதங்களாக பிரதமர், "மண்' மோகன் சிங் அலுவலகத்தில் தூங்குகிறது. இந்த மெகா ஊழல் குறித்து, ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினார், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெ., அதே போல், பா.ஜ.,வும் கலாநிதி, தயாநிதி மேல் உள்ள குற்றச்சாட்டை ஆணித்தரமாகக் கூறி, நாடு தழுவிய போராட்டம் நடத்தியது. பி.எஸ்.என்.எல்., நிறுவன ஊழியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இன்று வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று, வெறும் 500 ரூபாய் மட்டுமே லஞ்சம் பெற்ற, திருக்கோவிலூர் தாலுகா அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டு, விழுப்புரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், பி.எஸ்.என்.எல்.,க்கு பல்லாயிரங்கோடி நஷ்டம் ஏற்படுத்தி, பல்லாயிரங்கோடி வளம் பெற்றவர்கள், உல்லாசமாக உலகம் சுற்றுகின்றனர். இது என்ன நாடா அல்லது காடா? அவர்களிடமிருந்து கோடிகளை வசூலித்து, பி.எஸ்.என்.எல்., கணக்கில் வரவு வைத்து, அந்நிறுவனத்தை லாபகரமாக இயக்க, ராகுல் கடுமையான நடவடிக்கை எடுத்து, 125 கோடி இந்தியர்கள் வயிற்றில் பால் வார்ப்பாரா? "கையில் வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைவானேன்!'

உருப்படுமா உருப்படாதா? வைகைவளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "அன்னா ஹசாரே நடத்தும் எந்தப் போராட்டத்தையும் சந்திக்கத் தயார்' என அன்னை சோனியாவும், "மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய லோக்பால் மசோதா, மிகவும் வலுவானது என்றால், அது பற்றி என்னுடன் நேருக்கு நேர் நின்று, விவாதிக்க சோனியா தயாரா?' என, புதிய மகாத்மாவாக அவதாரம் எடுத்திருக்கும் அன்னா ஹசாரேவும் சவால் விட்டிருக்கின்றனர்! "வஞ்சிக்கோட்டை வாலிபன்' படம் பார்ப்பது போல இருக்கிறது. அதில் தான் வில்லன் வீரப்பா, பத்மினி, வைஜெயந்தி மாலா ஆடும் போட்டி நடனத்தைப் பார்த்து, "சபாஷ்... சரியான போட்டி' என்று, "டயலாக்' பேசுவார். அதுபோல், அன்னா ஹசாரேவும், சோனியாவும் இப்போது எதிரெதிர் சவால்கள் விட்டு, இந்திய மக்களை குஷிப்படுத்துகின்றனர். "இந்நாட்டை உருப்படாமல் செய்தவர்கள் காங்கிரசார்' என, பா.ஜ., தலைவர்களும், "பார்லிமென்ட் நடக்காமல் செய்த பாதகர்கள் பா.ஜ., தலைவர்கள்' என, காங்கிரஸ் தலைவர்களும், லாவணி பாடுகின்றனர். தமிழகத்தில் நடக்கும் கூத்து பற்றி, சொல்லவே வேண்டாம். "கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானது; அதை உடனே மூட வேண்டும்' என, உதயகுமார் அபாயச்சங்கு ஊதுகிறார். "அதெல்லாம் சுத்தப் பொய்' என, ஞானதேசிகன் கொக்கரிக்கிறார். "முல்லைப் பெரியாறு அணைக்கு வயதாகி விட்டதால், பாதுகாப்பு இல்லை. அதனால், கேரள மக்களுக்கு அபாயம்' என, கேரள முதல்வரும், "அணை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அப்படியேயிருக்கும்' என, தமிழக முதல்வரும் கூறுகின்றனர். சும்மா சொல்லக் கூடாது, "சரஸ்வதி சபதம்' படத்தில், "கல்வி பெரிதா, செல்வம் பெரிதா, வீரம் பெரிதா?' என, அந்த கடவுள்களே முட்டி, மோதிக் கொண்டது நமக்குத் தெரியும். அடடா... எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்று ஆகிவிட்டது. இந்த நாடு உருப்படுமா, உருப்படாதா என்று சிவனும், விஷ்ணுவும் விவாதம் செய்து கொண்டிருப்பரோ என்னவோ; யாம் அறியோம் பராபரமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக