ஞாயிறு, 4 டிசம்பர், 2011

84 வயது பாட்டியின் டிரஸ், பேண்டீஸ் உள்ளிட்டவற்றை கழற்றி சோதனை செய்த அமெரிக்க அதிகாரிகள்!

Lenore Zimmerman
நியூயார்க்: நியூயார்க்கின் ஜான் எப் கென்னட விமான நிலையம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 84 வயதான ஒரு பாட்டியை முட்டி போட வைத்தும், உடைகளை கழற்றியும் சோதனையிட்டுள்ளனர் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள். இதுகுறித்து அந்தப் பாட்டி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி சோதனையிட்டு இதே விமான நிலைய அதிகாரிகள் அவமானப்படுத்தினர். இதற்கு இந்தியாவிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், 84 வயது பாட்டியை ஆடைகளை கழற்றச் சொல்லி சோதனையிட்டு அவமதித்துள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். இது தன்னை மிகவும் காயப்படுத்தியிருப்பதாகவும், அவமரியாதையாக உணர்வதாகவும் அந்த மூதாட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது பெயர் லெனோர் ஜிம்மர்மேன். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். நான் மிகவும் உடல் தளர்ந்த ஒரு பெண்மணி. வீல்சேரில்தான் நடமாட முடியும். எனது எடை 50 கிலோ. வருகிற பிப்ரவரி மாதம் எனக்கு 85 வயதாகப் போகிறது. என்னைப் பார்த்தால் தீவிரவாதி போலவா தெரிகிறது.?

என்னை வழக்கமான பாடி ஸ்கேனர் மூலம் சோதனையிடாமல் தனி அறைக்கு அழைத்துச் சென்று முட்டி போட வைத்து உட்காரச் சொன்னார்கள். எனது பேன்ட்டை கழற்றச் சொன்னார்கள். பிற உடைகளையும் கூட கழற்றச் சொன்னார்கள். ஏன்,எனது பேண்டீஸைக் கூட விடவில்லை அதையும் கழற்றச் சொல்லி அவமதித்தனர். இதனால் எனது விமானத்தை நான் தவற விட நேரிட்டது. இரண்டரை மணி நேரம் எனது பயணம் தாமதமானது.

எனது வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவத்தை நான் சந்தித்ததில்லை. இது மிகவும் மோசமான அனுபவமாகும் என்றார் அவர். ஜிம்மர்மேன் புளோரிடாவின் கோகனெட் கிரீக் பகுதியில் மூத்த குடிமக்கள் வசிக்கும் பகுதியில் வசித்து வருகிறார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அவர் கென்னடி விமான நிலையத்திற்குச் சென்றார். போர்ட் லாடர்டேல் என்ற நகருக்குப் போவதற்காக அவர் விமானம் ஏற வந்திருந்தார். அப்போதுதான் இந்த கூத்து நடந்துள்ளது.

இவரால் வீல் சேரில்லாமல் நடமாட முடியாது. மேலும் கைத்தடியை வைத்துதான் லேசாகக் கூட நடக்க முடியுமாம்.

சோதனையின்போது இவர் வைத்திருந்த உலோகத்திலான வாக்கிங் ஸ்டிக்கை அதிகாரிகள் பறித்தபோது அது இவரது உடலில் உரசி காயம் ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ரத்துக் கட்டு ஏற்பட்டு விட்டது. மிகவும் மோசமாக நடந்து கொண்டனர் என்கிறார் ஜிம்மர்மேன்.

நடக்கக் கூட முடியாத மூதாட்டியிடம் அமெரிக்க அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக