புதன், 28 டிசம்பர், 2011

சென்னையிலிருந்து 600 கி.மீ தொலைவில் 'தானே' புயல்- ஆயத்த நிலையில் கலெக்டர்கள்

சென்னை: தானே புயல் தற்போது சென்னையிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.30ம்தேதி அதிகாலையில் இது கரையைக் கடக்கும் என்பதாலும், இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் ஆயத்த நிலையில் இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தானே புயல் வரும் வெள்ளிக்கிழமை காலை கடலூர் - நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை ஒட்டி அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வுநிலையானது திங்கட்கிழமையன்று தாழ்வு மண்டலமாக மாறியது. இது செவ்வாய்கிழமை முதல் புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ‘தானே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மெதுவாக சென்னையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

தானே புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் ரமணன் கூறியதாவது:

சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், இலங்கை திரிகோண மலையில் இருந்து வடகிழக்கே 650 கி.மீ. தெலைவிலும், அந்தமானில் இருந்து வட மேற்கே 700 கி.மீ. தொலைவிலும் "தானே' புயல் மையம் கொண்டுள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். இதனால் வட தமிழகம், தென் ஆந்திர கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். தானே புயல் கடலூர் - நெல்லூருக்கு இடையே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும். இதனையொட்டி வட தமிழகம், புதுவை மற்றும் தென் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும். தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை மணிக்கு 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடலோரப் பகுதிகளில் நீர் புகுந்தது

கடல் சீற்றத்தால் எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள், வலைகள் உள்ளிட்டவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.

கடலூரில் அலைகள் 20 அடி உயரம் வரை எழுந்தன. கடலோரப் பகுதிகளில் உள்ள தேவனாம்பட்டினம், சில்வர் பீச், தாழங்குடா ஆகிய பகுதிகளில் 200 மீட்டர் வரை கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் சில்வர் பீச் சிறுவர் விளையாட்டுப் பூங்கா நீரில் மூழ்கியது. அப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து கடலூர், தூத்துக்குடி, நாகை, பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், மண்டபம் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கலெக்டர்களுக்கு உத்தரவு

இதற்கிடையே, புயலைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்கமாறு மாநில வருவாய் நிர்வாக ஆணையர் ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

தானே புயல் 30-ந் தேதி கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் பேசி உள்ளேன். மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் தயாராக இருக்கும்படி கூறியிருக்கிறேன்.

புயல் வந்தாலும், வராவிட்டாலும் நேற்று முதல் உஷார் ஆக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

மழை, வெள்ளம் வந்தால் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையிலும், முன் எச்சரிக்கையாகவும் எடுக்கும்படியும், இப்போதே தயார் நிலையில் இருக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாடு முழுவதும் கடற்கரை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் புயல் வந்தால் அதை எதிர்கொள்ள தயார் ஆக இருக்கிறார்கள் என்றார்.

புதுவையில் அமைச்சர் ஆறுதல்

புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வைத்திக்குப்பம், குருசுகுப்பம், நரம்பை, பனித்திட்டு, வீராம்பட்டினம், காலாப்பட்டு உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை ராட்சத அலைகள் எழும்பி, மக்களை அச்சுறுத்தின. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்த புதுவை சமூக நலத்துறை அமைச்சர் பெ. ராஜவேலு புயல் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக