வெள்ளி, 4 நவம்பர், 2011

பைகளை தூக்கி வரவில்லை, இரு கைகளையும் தூக்கி வந்தவர்கள்!

Viruvirupu
கிளிநொச்சி, ஸ்ரீலங்கா: வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்துவந்த இந்த மக்கள், இப்போதும் நெருக்கடிக்குள்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது.
அவர்களின் தலைக்கு மேலால் சீறிக்கொண்டு செல்லும் மோட்டார் ஷெல்களின் சத்தமும், 100 மீட்டர் தொலைவில் விழுந்து வெடிக்கும் குண்டுகளின் வெளிச்சமும் இப்போது இல்லைதான். ஆனால், வேறு விதமான நெருக்கடிகளுக்கு அவர்கள் இப்போது முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
யுத்தத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு பூச்சியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நெருக்கடி இது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு என்ன தேவைகள் உள்ளன? இந்தக் கேள்விக்கு இரண்டு வெவ்வேறான பதில்கள் உள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் ஒரு பதில் உள்ளது. யுத்தம் நடந்த இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்காக கி.மீ. தொலைவில் வெளிநாடுகளில் ஒரு பதில் உண்டு.
வெளிநாடுகளில் போய், “யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால், “இவர்களுக்கு தேவை, அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னாட்சி அதிகாரமும், சுயநிர்ணய உரிமையும்” என்று படுசீரியசாகக் கூறுவார்கள்.
நேரடியாக இவர்களிடம் போய், “உங்களுக்கு என்ன தேவை?” என்று கேட்டால், “அன்றாட வாழ்க்கையை நடாத்த தேவையான பொருட்களும், குடும்பத்தைக் காப்பாற்ற வேலை வாய்ப்பும்” என்பார்கள்.

இதுதான் ரியாலிட்டி.
யுத்தம் நடைபெற்றபோது, மன்னார் மாவட்டத்தில் இருந்து ஓடத் தொடங்கி, அங்கிருந்து கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி, முள்ளிவாய்க்காலில் இரண்டாவது பிறவி பெற்றவர்கள் இவர்கள்.
யுத்தத்துக்கு முன், இவர்களிடமும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இருந்தன. அதற்கு மேலதிகமாகவும் இருந்தது. காரணம், வன்னி மக்கள் கடும் உழைப்பாளிகள்.
அன்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களில் ஒரு பகுதி
யுத்தம் தொடங்கி முதல் முதலாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டி வந்தபோது, ஒவ்வொரு குடும்பத்தின் பொருட்களையும் எடுத்துச் செல்ல ஒவ்வொரு ட்ராக்டர் தேவைப்பட்டது.
ஆனால், இரண்டாவது இடத்தைவிட்டு இடம்பெயரும்போது, ஒரு ஆட்டோ போதுமானதாக இருந்தது. மூன்றாவது இடத்திலிருந்து இடம்பெயரும் போது சைக்கிளில் ஏற்றிச் செல்லும் அளவில்தான் பொருட்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்தபின் வெளியே வந்தபோது, சரணடைய தூக்கிக்கொண்டு வர இரு கைகள்தான் இருந்தன. வெறும் கைகள்! Empty Hands!!
இப்படி வெறும் கையோடு இரண்டு வருடங்களுக்குமுன் வந்தவர்களில் பலர் இப்போது சொந்த முயற்சிகளில் ஓரளவுக்கு வாழக்கூடிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், குடும்பங்களில் குடும்பத் தலைவராலோ அல்லது தலைவியாலோ முன்புபோல இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது பாடுபட்டு உழைக்க முடிகிறது. ஒரு நேரமாவது உணவு உண்ண முடிகிறது.
அவர்களை விடுங்கள். யுத்தத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளைின் கதியை யோசித்துப் பாருங்கள். இவர்கள் நிலைமைதான் மோசமாக உள்ளது. வன்னிப் பகுதியில் இப்படியானவர்களுக்காக ஓரிரு இடங்களில் தனியார் உதவிகளில் இயங்கும் சில இல்லங்கள் உள்ளன.
மெல்பேர்னில் நடைபெற்ற கூட்டத்தில்..
யுத்தம் நடைபெற்ற வன்னியில் உள்ள முத்தையன்கட்டு (முல்லைத்தீவு மாவட்டம்) கிராமத்தில் இயங்கும் குழந்தைகள் காப்பகத்தின் பெயர் அன்பு இல்லம். சுமார் 45 குழந்தைகளுக்கு புகலிடம் அளித்திருக்கிறார்கள் இவர்கள். குழந்தைகளுக்கான தங்குமிடம், உணவு, உடைகள் என்று தொடங்கி, பள்ளிப் படிப்புக்காக அருகிலுள்ள பாடசாலைக்கு அனுப்புவதுவரை அன்பு இல்லத்தால் செய்யப்படுகின்றது.
அன்பு இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள், வன்னி யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தம் நடந்தபோது, யுத்தம் நடைபெற்ற இடங்களில் இருந்தவர்கள். வன்னி யுத்தத்தின்போது வந்து வீழ்ந்த எறிகணைகளுக்கு மத்தியில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள். ஆனால், அதற்காக இவர்களை ஒரேயடியாக அதிஷ்டசாலிகள் என்று சொல்ல முடியாது. காரணம், இவர்கள் உயிர் தப்பினாலும், கண்ணெதிரே பெற்றோர்களும், குடும்பத்தவரும் கொல்லப்பட்டு வீழ்ந்ததைப் பார்த்த துரதிஷ்டசாலிகளும் இவர்கள்தான்.
வன்னியில் நடைபெற்ற யுத்தத்தை நடாத்துவதற்கு தேவையான பணத்தின் பெரும்பகுதி வந்தது வெளிநாடுகளில் இருந்துதான். ஒருவிதத்தில் சொன்னால், வெளிநாட்டுப் பணத்தில், இலங்கைக்குள் நடாத்தப்பட்ட யுத்தம் என்று அதைச் சொல்லலாம். அங்கு வெடிக்கப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டிலும், ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு அழிவிலும், இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிரிலும் ஏதோ ஒரு வகையில் வெளிநாட்டில் இருந்து வந்த பணம் பெரிய சதவீதத்தில் இருந்தது.
கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதி
ஆனால், யுத்தத்தால் குடும்பத்தையே தொலைத்துவிட்ட இந்தக் குழந்தைகளை வாழவைப்பதற்கு இதுவரை வெளிநாட்டுப் பணம் ஏதும் பெரிதாக வந்ததில்லை.
யுத்தத்தில் உயிர்களை அழிப்பதற்கு கிடைத்த உற்சாக நிதியுதவிபோல, யுத்தத்தில் தப்பிய உயிர்களை வாழ வைப்பதற்கு நிதியுதவி அதுவரை பெரிதாகக் கிடைத்ததில்லை என்பதுதான் அதிர்ச்சியான சோகம்! யுத்தம் முடிவுக்கு வந்து 2 வருடங்களின்பின் தற்போதுதான் வெளிநாடுகளில் மனிதாபிமானம் மிக்கவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
கடந்தவாரம் (அக்டோபர் 27-ம் தேதி), ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில், இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது. வன்னி, முத்தையன் கட்டில் குழந்தைகளுக்காக இயங்கும் அன்பு இல்லத்துக்கு உதவி கோருவதற்காக நடாத்தப்பட்ட கூட்டம் அது.
கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.சுந்தரமூர்த்தி, “அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான உடைகள், கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு வைட்-ஸ்டிக்குகள், குண்டுவெடிப்புகளில் கால்களை இழந்த குழந்தைகளுக்கு வீல்சேர்கள், மற்றைய குழந்தைகள் பாடசாலை செல்ல சைக்கிள்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை அனுப்பி வைப்பதற்கான உதவிகளை கூட்டத்துக்கு வந்த பலரும் வழங்கியுள்ளனர்” என்றார்.
அன்பு இல்லத்தில் குழந்தைகள் தங்குமிடம்
“இங்கு (ஆஸ்திரேலியாவில்) வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மாத்திரமின்றி, மனிதாபிமானம் கொண்ட அனைத்து இனத்தவரும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலியர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என்று மனிதாபிமான உதவி செய்வதற்கு இங்கு யாருக்கும் இனம் ஒரு தடையாக இல்லை” என்றார், கூட்ட ஏற்பாடுகளைச் செய்த இளங்கோ நவரட்ணம்.
அதை அப்படியே ஒப்புக் கொள்கிறார் பீட்டர் ஹாரிஸ். “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று அறிந்த பின்னரும், உதவி செய்யாத அளவுக்கு மனிதாபிமானம் அற்றவர்கள் யாரும் இருக்க முடியாது” என்றார் அவர்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தற்போதுதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிஜமாக என்ன நடைபெறுகின்றது என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். வெளியே காண்பிக்கப்படும் அரசியல் விவகாரங்களையும் மீறி, உள்ளே லைவ்-வாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பிரச்சினை பற்றிய தகவல்கள் இப்போதுதான் அதிகம் இவர்களை வந்தடையத் தொடங்கியுள்ளன.
வன்னியில் நடைபெற்ற யுத்தத்தை வைத்து வெளிநாடுகளில் அரசியல் செய்பவர்கள், உலகச் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தேவை என்று பிரசங்கம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை இவர்கள் பெற்றுக் கொடுக்கப் போவதாக சூளுரைக்கின்றனர்.
அவர்கள் சொல்லுவதில் உள்ள ஒரேயொரு மெசேஜை எளிமையாகச் சொல்வதென்றால் இவ்வாறு சொல்லலாம் – “கேக் தயாராகும்வரை ரொட்டி சாப்பிட வேண்டாம்!” இவர்களது கேக் தயாரிப்பு, கடந்த 40 ஆண்டுகளாக ஆரம்பக் கட்டத்தையே தாண்டவில்லை. தயாரித்து முடிக்க இன்னமும் எத்தனை வருடங்கள் எடுக்கும் என்று சொல்வதற்கில்லை.
அதற்குமுன், வன்னிக்குள் உயிர்வாழ ரொட்டி கொடுக்கப்படாவிட்டால், கேக் சாப்பிட ஆளிருக்காது!
-மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவிலிருந்து வெங்கட்ராமன், கிளிநொச்சி, ஸ்ரீலங்காவிலிருந்து லக்ஷ்மன் ஆகியோரின் குறிப்புகளுடன், ரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக