வெள்ளி, 4 நவம்பர், 2011

பலமுறை அவமான படுத்தப்பட்டேன்: நீதிபதி கர்ணன் பரபரப்பு பேட்டி

சென்னை:"நீதிபதிகள் கூடும் இடங்களில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மீது சில நீதிபதிகளுக்கு குறுகிய மனப்பான்மை, ஆதிக்க மனப்பான்மை உள்ளது' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.ஐகோர்ட் நீதிபதிகள் சிலர் தன்னை அவமதிப்பு செய்வதாக, ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷனில், நீதிபதி கர்ணன் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு சிலர், நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன் என தெரிந்தும், வேண்டுமென்றே அவமானப்படுத்துகின்றனர். இதுகுறித்து ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷனில் புகார் கூறியிருந்தேன். எனது புகார், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணை நடத்த அவர் அனுமதித்திருப்பதாகவும், பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை. விசாரணை துவங்கினால் புகாரை நிரூபிப்பேன். விசாரணை முடியும் வரை, புகார் சம்பந்தமாக எந்தவித விமர்சனமும் தேவையில்லை.இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.


பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:எனக்கு 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த அவமரியாதை நடந்து கொண்டிருக்கிறது. நீதிமன்ற மாண்பை காப்பதற்காக இதுவரை பொறுத்துக் கொண்டிருந்தேன். நான் சுயமரியாதை உள்ளவன். அதனால் என்னை குறி வைக்கின்றனர்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார் பற்றி கூறவில்லை. அதற்கு அவசியம் இல்லை. ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷன், ஒரு கண்காணிப்பு அமைப்பு. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், அதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த கமிஷனுக்கு உள்ளது. ஜனாதிபதியின் கீழ் இந்த கமிஷன் இயங்குகிறது.

என்னை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார் என்பதை விசாரணையின் போது கூறுவேன்.
தொடர்ந்து நான் அவமானப்படுத்தப்பட்டேன். தேநீர் விருந்து, டின்னர், மதிய உணவு, நீதிபதிகள் குழு என நீதிபதிகள் ஒன்றாக கூடும் இடங்களில், நான் அவமரியாதை செய்யப்பட்டேன்.என்னை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. நான் அதிக அளவு வழக்குகளை பைசல் செய்துள்ளேன். தகுதியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் மாற்றம் செய்ததற்கும், இதற்கும் சம்பந்தமில்லை.

சில நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சேர்ந்து செயல்படுகின்றனர். எனது புகாருக்கு சந்தர்ப்ப சாட்சியம், ஆவண சாட்சியம் உள்ளது.என்னை ஷூ அணிந்த காலால் ஒரு நீதிபதி உதைத்தார். பின்னர் "சாரி' சொன்னார். எனது பெயர் பொறிக்கப்பட்ட அட்டையை கீழே போட்டு காலால் மிதித்தார். இதை இரண்டு நீதிபதிகள் பார்த்தனர். குடியரசு தின நிகழ்ச்சியின் போது இது நடந்தது.எனது சக நீதிபதிகள் சிலருக்கு குறுகிய மனப்பான்மை, ஆதிக்க மனப்பான்மை உள்ளது. குறிப்பாக ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மீது இது உள்ளது. ஆனால், என்னிடம் அது தோற்றுவிட்டது.

என் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால், வெளிப்படையாக விசாரணை நடத்தட்டும். அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நான் பிறப்பித்த உத்தரவை பற்றி நீங்கள் கேள்வி கேட்க முடியாது. அதில் தவறு இருந்தால், அதை எதிர்த்து அப்பீல் செய்து கொள்ளலாம். என் மீது பொய்யாக சில குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன .எனக்கு நேர்ந்த தொல்லைகள் பற்றி, மற்ற நீதிபதிகளிடம் நான் தெரிவிக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின், இது ஒரு கருப்பு முத்திரையாக அமைந்துவிட்டது. நீதிபதிகள் அனைவரும் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஜாதி ரீதியிலான பாகுபாடு மனவேதனை அளிக்கிறது.

எனது பணிகளை நான் வழக்கம் போல் செய்வேன். நீதிபதியின் பணிகளில் முடக்கம் கிடையாது. புகாரை நிரூபிக்கும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை? ஐகோர்ட்டின் மீது நம்பிக்கையில்லையா? ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மற்ற நீதிபதிகள் அவமரியாதை செய்யப்படுகின்றனரா? என்கிற கேள்விகளுக்கு, "பதில் இல்லை', "கருத்து இல்லை' என நீதிபதி கர்ணன் பதிலளித்தார்.


சுயமரியாதை காரணமா?"சுயமரியாதை இருப்பதால் தான் கஷ்டங்களை எதிர்கொள்கிறேன்' என நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.நீதிபதி கர்ணன் கூறும்போது, "ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சிலர், சுயமரியாதையை கடைபிடிக்க தவறுகின்றனர். ஆனால், நான் சுயமரியாதையை கடைபிடிப்பதால் தான், கஷ்டங்களை எதிர்கொள்கிறேன்.

சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றிய நீதிபதிகள் கனகராஜ், அசோக்குமார், பி.டி.தினகரன், ஒய்.வெங்கடாசலம், ஜெயபால் எல்லாம் சுயமரியாதை உள்ளவர்கள். என்னைப் போன்று அவர்களும் பிரச்னைகளை அனுபவித்தனர்' என்றார். ஆதிதிராவிட, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மீது கூட துன்புறுத்தல் இருக்கிறது என்றார்.

நீதிபதி அறையிலேயே பேட்டி: நீதிபதியின் அறையில் தான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்களை நீதிபதி சந்திக்க விரும்புவதாக பிற்பகலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதியின் அறைக்கு நிருபர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். நிருபர்களை கண்ட நீதிபதி கர்ணன், பேட்டியை அறைக்கு வெளியில் வைத்துக் கொள்ளலாம் என்றார்.

பின்னர், நீதிபதியின் அறையிலேயே நிருபர்கள் சந்திப்பு நடந்தது. ஐகோர்ட் தலைமை நீதிபதியை சந்திக்க நிருபர்கள் முயற்சித்தனர். அது சாத்தியப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக