திங்கள், 21 நவம்பர், 2011

இலவசங்களை அள்ளிக்கொடுக்கும்போது வாங்கிக்கொண்டாய் அல்லவா?

விலை உயர்வு : வருத்தப்பட்டு பாரம் சுமக்கப்போவது யார்?


ஆவின் பால் விலை உயர்வும், பேருந்து கட்டண உயர்வும், மின்கட்டண உயர்வு பற்றிய முன்னறிவிப்பும் ஏற்படுத்தாத பேரதிர்ச்சியை, இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில தேசாபிமானிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் அபிமானிகளாக மட்டும் இருந்திருந்தால் இவர்களுடைய நியாயவாதத்தைப் புறந்தள்ளியிருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களை கட்சி சார்பற்றவர்களாகவும், நடுநிலைமையாளர்களாகவும், தேச நலனில் ஆர்வம் உள்ளவர்களாகவும், பொருளாதாரம் அறிந்தவர்களாகவும், பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்களாகவும், படித்தவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதால், இவர்களுடைய வாதங்களை நாம் பொதுவில் வைத்து ஆராயவேண்டியிருக்கிறது.
கட்டண அதிகரிப்புக்கு இவர்கள் அனைவரும் முன்வைக்கும் காரணங்கள் என்ன? ‘ஆவின், அரசு போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் மூன்றும் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றன. முந்தைய ஆட்சியாளர்கள், கஜானாவைக் காலி செய்துவிட்டார்கள்.
மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதியுதவி அளிக்கவில்லை. இந்தச் சூழலில், கட்டணத்தை உயர்த்தாவிட்டால் இத்துறைகளை மீட்டெடுக்கமுடியாது. விலைவாசி ஏறிக்கொண்டிருக்கும் போது, மத்திய அரசும் கைவிரித்துவிட்ட நிலையில், மாநில அரசு என்னதான் செய்யும்?’
எனவே, கட்டண உயர்வு ‘தவிர்க்கவியலாததாகிவிட்டது’. ஆவின் பால், ஒரு லிட்டர் ரூபாய் 17.75 ல் இருந்து, ரூ. 24 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது லாபத்துக்கான கட்டண அதிகரிப்பு அல்ல, நஷ்டத்தைக் குறைப்பதற்கான கட்டண அறிவிப்புதான் என்று ஆவின் சொல்லியிருக்கிறது. பால் கொள்முதல் விலை ரூ.18ல் இருந்து ரூ.20ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 35 சதவீத உயர்வு.
அரசுப் போக்குவரத்து கழகம் 6,150 கோடி நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட, சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பேருந்துகளில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பேருந்துகளில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவாவும் உயர்த்தப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மொத்தக் கடன் தொகை ஒரு லட்சம் கோடியைக் கடந்துவிட்டதையும், கடன் சுமையைச் சமாளிக்க, ‘உங்களிடம் இல்லாமல் வேறு யாரிடம் செல்வேன்?’ என்று ஜெயலலிதா டிவியில் உருகியதையும் மேற்படி நண்பர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நஷ்டம் ஏற்பட்டுள்ளதை யாராவது மறுக்கமுடியுமா? அல்லது அந்த நஷ்டத்தை தமிழக மக்களாகிய நாம்தான் ஈடுசெய்யவேண்டும் என்பதையாவது யாராவது மறுக்கமுடியுமா?
எதற்காக அரசின் நஷ்டத்தை நாம் சுமக்கவேண்டும் என்று வெகுளித்தனமாகக் கேட்பவர்களிடம் இவர்கள் இப்படிச் சீறுவார்கள். இலவசங்களை அள்ளிக்கொடுக்கும்போது வாங்கிக்கொண்டாய் அல்லவா? மானியங்களை அள்ளிக் கொடுத்தபோது இருகரம் கூப்பினாய் அல்லவா? கொடுத்த அரசு கஷ்டம் வந்து தவிக்கும்போது, வாங்கிக்கொண்ட நீ மட்டும் சுகித்திருக்கலாமா?
நீங்கள் சொல்வது நியாயம்தான் என்று பேச்சுக்கு ஒப்புக்கொண்டு இவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். ‘இந்தக் கட்டண உயர்வுக்குப் பிறகும் மேற்படி அரசுத் துறைகள் நஷ்டத்தில்தான் இயங்கும் என்று சொல்கிறீர்களே. எதிர்காலத்தில் இந்த நஷ்டம் வராமல் இருக்க என்னதான் செய்வது? நஷ்டம் ஏற்பட ஏற்பட, கட்டணத்தை அதிகரித்துக்கொண்ட இருக்கவேண்டியதுதானா? என்னதான் தீர்வு?’ நெற்றிப்பொட்டில் அடித்தது போல் ஒரே வார்த்தையில் பதில் வந்து விழும். ‘தனியார்மயம்.’
கருணாநிதி எதிர்ப்பு, ஜெயலலிதா ஆதரவு இரண்டையும் கடந்து; கட்சி, அரசியல் பேதங்கள் கடந்து; சாதி, மத வேறுபாடுகள் கடந்து; படித்தவர்களையும், சிந்திப்பவர்களையும், பொருளாதாரம் பேசுபவர்களையும், மக்கள் ஆர்வலர்களையும், அறிவுஜீவிகளையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாக தனியார்மயம் திகழ்கிறது.
கட்டண உயர்வை முன்வைத்த ஜெயலலிதா அரசும் அதனை ஆதரிக்கும் கூட்டமும், தனியார்மயத்தையே தனது இறுதி கொள்கையாக வரித்துக்கொண்டுள்ளது. எனவேதான், ஜெயலலிதா ஆதரவாளர்களோடு சேர்த்து தனியார்மய ஆதரவாளர்களும் ஒன்று கலந்து, கட்டண அதிகரிப்புக்கு நியாயம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அரசுத் துறைகள் நஷ்டத்தில் இயங்கவேண்டும் என்பதுதான் இவர்களுடைய உண்மையான விருப்பம். கல்வி, மருத்துவம் உள்பட எந்தவொரு அரசுத் துறையும் சரிவர இயங்கவில்லை என்று பொதுமக்களோடு சேர்ந்து இவர்களும் அங்கலாய்ப்பார்கள். அரசுத் துறைகளின் நஷ்ட கணக்குகளை, புள்ளிவிவரங்களோடு அக்கறையுடன் முன்வைப்பார்கள். ஆனால், பொதுமக்களிடம் இருந்து இவர்கள் வேறுபடும் இடம், தனியார்மயம்.
கவனித்துப் பார்த்தால் தெரியும். சமச்சீர் கல்வி கூடாது என்று ஜெயலலிதா முன்பு உத்தரவிட்டபோது, அரசுப் பள்ளிகள் சீரழிந்த நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதாவின் வாதத்துக்கு இவர்கள் வலுவூட்டினார்கள். அரசுப் பள்ளிகளால் என்றென்றும் வெற்றிகரமாக இயங்கமுடியாது என்பதே இவர்கள் வாதம். அரசுப் பள்ளிகளால் தரமான கல்வியை வழங்கமுடியாது என்பதால் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று இவர்கள் வாதிட்டதை யாரும் மறந்திருக்கமுடியாது. தனியார் பள்ளிக் கட்டணம் அதிகமாக இருந்தபோதும், அவர்கள் வழங்கும் கல்வி தரமானது என்று இவர்களே முன்னர் புள்ளிவிவரங்களை அளித்தனர். கல்வி வழங்கும் பணியை அரசு எடுத்துக்கொண்டால் இப்படித்தான் ஆகும் என்று இடித்துக்காட்டியவர்களும் இவர்களே.
தனியார் கல்வி நிறுவனங்களை வரவேற்றது போலவே தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களையும், தனியார் போக்குவரத்து அமைப்புகளையும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இவர்களுடைய இன்னொரு முகத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை இவர்கள் எதிர்ப்பார்கள். இலவச மின்சாரத்தை எதிர்ப்பார்கள். இலவச அரிசியை எதிர்ப்பார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பார்கள். தொழில் முனைவோரை ஆதரிக்கவேண்டும் என்று வாதிடுவார்கள். அரசுத் துறைகளையும் தனியார் துறைகளையும் ஒப்பிட்டுக் காட்டி, அரசுத் துறைகள் அழிந்துபடவேண்டும் என்று இவர்கள் சாதுரியமாக தர்க்கம் செய்வார்கள். எதிர்கால இந்தியாவை அரசால் உருவாக்கமுடியாது, தனியார் நிறுவனங்களாலேயே உருவாக்கமுடியும் என்று ஆருடம் சொல்வார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க உள்பட உலகம் முழுவதிலும் இவர்கள் பரவியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் கரத்தை வலுவிழக்கச் செய்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் கரத்தை வலுப்படுத்துவதே இவர்கள் லட்சியம். இவர்களுடைய இலக்கு,‘வளர்ந்து வரும் மிடில் கிளாஸ்.’ அடித்தட்டு மக்களின் நலன்கள்மீது இவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களை அரசு பராமரிப்பது வீண் செலவு என்பது இவர்கள் வாதம். ஏழைகள் சோம்பேறிகள் என்றும், அவர்கள் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் அவர்கள்தாம் என்றும் இவர்கள் வாதிடுவார்கள். லாபமே இவர்களுக்கு இறுதி இலக்கு. லாபமளிக்காத எதுவொன்றும் செயல்படுவதற்கு அருகதையற்றது. அந்த வகையில், அடித்தட்டு மக்களின் துன்பங்களும் எதிர்பார்ப்புகளும் இவர்களைப் பொறுத்தவரை பொருட்படுத்தக்கூடியவை அல்ல.
அரசாங்கத்திடம் இருந்து இவர்கள் கோரும் உதவி ஒன்றுதான்.பெயில் அவுட்! டெக்கான் ஏர்வேஸும் கிங்பிஷர் ஏர்லைன்ஸும் இழப்பைச் சந்திக்கும்போது, கைதூக்கிவிடு. அமெரிக்காவில், நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, மக்களை அல்ல தனியார் நிதி நிறுவனங்களைத்தான் அமெரிக்க அரசு ஓடோடிவந்து கரை சேர்த்தது. இந்த மக்கள் விரோத கொள்கையை எதிர்த்துதான் வால்ஸ்ட்ரீட்டிலும் அமெரிக்காவுக்கு வெளியிலும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 99 சதவீத மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு 1 சதவீதம் பேரை அரசு பாதுகாப்பது சரியா என்னும் கேள்வியோடு அரசு எதிர்ப்பு முழக்கங்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
எனில், என்ன பொருள்? மக்கள் நலன் அல்ல, பெரும் முதலாளிகளின் நலனே ஓர் அரசுக்கு முக்கியம் என்பதுதானே? சேவை அல்ல, லாபமே ஓர் அரசுக்கு முக்கியம் என்பதுதானே? 99 சதவீதம் பேர் அல்ல, 1 சதவீதம் பேர்தான் முக்கியம் என்பதுதானே? 99 சதவீம் பேருக்குச் சேவை செய்யும் அரசுத் துறைகள் செயலிழந்தாலும் பரவாயில்லை, 1 சதவீதம் பேருக்கு நன்மை செய்யும் தனியார் நிறுவனங்கள் செழிக்கவேண்டும் என்பதுதானே?
ஆவின் பால் விலையேற்றத்தையும், பேருந்து கட்டண விலையேற்றத்தையும், மின்சார கட்டண விலையேற்றத்தையும் ஜெயலலிதா அரசு முன்வைத்ததற்குக் காரணம், அந்தத் துறைகள் லாபகரமாக இயங்கவேண்டும் என்பதல்ல. இலவசங்களை அள்ளிக்கொடுப்பதாகச் சொல்லி வாக்கு வேட்டை நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதும் பணமில்லை என்று சொல்லி அடிப்படை வாழ்வாதாரக் கட்டணங்களை உயர்த்தும் ஜெயலலிதாவா, அரசுத் துறைகளின் லாபத்துக்காக வருத்தப்படப்போகிறார்? உண்மை நோக்கம், மேற்படி அரசுத் துறைகளோடு நேரடியாகப் போட்டியிடும் தனியார் நிறுவனங்களை வளர்த்துவிடவேண்டும் என்பதுதான். தனது பொறுப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் சிறிது சிறிதாக விலகி, தனியார்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் திட்டம். இவருக்கு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள முதலாளித்துவ அரசுகளின் இலட்சியமும் கனவும் இதுதான்.
மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டுதான் அரசுத் துறைகளை உயிர்வாழ வைக்கமுடியுமா? அரசின் தவறான கொள்கைகளுக்கு மக்களைத்தான் பொறுப்பாளியாக்கவேண்டுமா? அரசுத் துறைகளில் மலிந்துள்ள ஊழல்களுக்கு மக்கள்தான் இழப்பீடு அளிக்கவேண்டுமா? நஷ்டத்துக்கான காரணங்களைக் கண்டறிந்த களைவதற்குப் பதிலாக, அந்த நஷ்டத்தை மக்கள் தலையில்தான் கட்டவேண்டுமா? இதைச் செய்வதற்கு ஓர் அரசு தேவையா?
சோவியத் யூனியனிலும் சீனாவிலும் இதைக் காட்டிலும் பலமடங்கு சோதனைகளை மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து நாட்டுக்காகப் போராடியிருக்கிறார்கள். தங்கள் சொந்தங்களையும் சுகங்களையும் இழந்திருக்கிறார்கள். பட்டினி கிடந்திருக்கிறார்கள். ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக, தங்கள் உடைமைகள் அனைத்தையும் துறந்திருக்கிறார்கள். அரசுத் துறைகளின் இழப்பைத் தங்கள் உழைப்பால் சரிகட்டியிருக்கிறார்கள். போரில் உருகுலைந்திருந்த தங்கள் தேசத்தை, பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி நிர்மாணித்திருக்கிறார்கள். நீண்ட, நெடிய போராட்டங்களை அவர்கள் அரசுக்காக நிகழ்த்தியிருக்கிறார்கள். ஏனென்றால், சோவியத் யூனியன் மக்களுக்கான அரசாக இருந்தது. மாவோவின் சீனா, மக்களுக்கான அரசாக இருந்தது. மட்டுமல்லாமல், அவை மக்களால் நடத்தப்படும் அரசாகவும் இருந்தது.
இதன் பொருள், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஓர் அரசுக்காக மட்டுமே தியாகங்கள் செய்யமுடியும் என்பதுதான். ஒரு பாசிஸ அரசுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமப்பது எந்தவகையிலும் பயனற்றது!
0
நந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக