திங்கள், 21 நவம்பர், 2011

கேட்டதை விடக் கூடுதலாக மத்திய அரசு பணத்தை அள்ளித் தந்தது உண்மையா?

முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் கேட்டதை விடக் கூடுதலாக மத்திய அரசு பணத்தை அள்ளித் தந்தது உண்மையா? அல்லது நிதியே தரவில்லை என்பது உண்மையா? ஜெயலலிதாவின் இரண்டு முகங்களில் எந்த முகத்தை நாம் நம்புவது? என்று கேட்டுள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்.
கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன் கூறுகையில்,
பேருந்துக் கட்டணம், ஆவின் பால் விலை எல்லாவற்றையும் மிகக் கடுமையாக உயர்த்தியுள்ள ஜெயலலிதா, அதற்கான பழியை மத்திய அரசின் மீதும், முந்தைய திமுக அரசின் மீதும் சுமத்தி இருக்கிறார். கடந்த 6 மாத காலமாக மத்திய அரசிடமும், திட்டக் குழுவிடமும், நிதி உதவி கோரி இருந்ததாகவும், அதற்கு இன்றுவரை எந்தப் பயனும் இல்லை என்றம் அவர் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு நிதி உதவி தராத காரணத்தினால் தான் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உண்மைக்கு மாறான மிகப்பெரிய பொய் ஒன்றை அவர் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

மத்திய அரசிடம், தான் கேட்டதைவிடக் கூடுதல் நிதி பெற்று வந்ததாக மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் தம்பட்டம் அடித்துக்கொண்டார்.
அந்த செய்தி 07.07.2011ஆம் நாளிட்ட நமது எம்.ஜி.ஆர். நாளேட்டிலேயே வெளிவந்துள்ளது. மத்திய அரசிடம் 23 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்டதாகவும், அவர்களோ 23,535 கோடி நிதி தந்துள்ளதாகவும் கூறிய அவர், தன் சாதுரியத்தால் கூடுதல் நிதி பெற்றுவிட்டதாகப் பெருமை பேசினார்.

அதுமட்டுமல்லாமல், இன்னொரு செய்தியையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். மத்திய ஆட்சியில் பங்கேற்றிருக்கும் திமுக அரசு பெற்று வந்த நிதியைவிடத் தான் 3,467 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.
நமக்குப் புரியவில்லை... இரண்டில் எது உண்மை? கேட்டதை விடக் கூடுதலாக மத்திய அரசு பணத்தை அள்ளித் தந்தது உண்மையா? அல்லது நிதியே தரவில்லை என்பது உண்மையா? ஜெயலலிதாவின் இரண்டு முகங்களில் எந்த முகத்தை நாம் நம்புவது? என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக