வெள்ளி, 18 நவம்பர், 2011

கூடங்குளம் அணு உலை குறித்த மேப் கேட்கிறார்கள் போராட்டக் குழுவினர்- மத்திய குழு பரபரப்பு புகார்!


Dr Muthunayagam
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த வரைபடங்களையெல்லாம் போராட்டக் குழுவினர் கேட்கின்றனர். இதெல்லாம் எதற்குக் கேட்கிறார்கள். இதனால் அவர்களின் நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய குழுவின் தலைவர் டாக்டர் முத்துநாயகம் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. முன்னதாக மத்திய குழு கடந்த 3 நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய குழுவின் முத்துநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,கூடங்குளத்தில் நவீன மயமான அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அணு உலைகளைச் சுற்றி 2 அடுக்கில் கோபுரக் கட்டுமானம் உள்ளது. பழுது ஏற்பட்டால் குளிரூட்ட 4 வகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தில் 4 டீசல் என்ஜின் ஜெனரேட்டர்கள் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைக் காற்றைப் பயன்படுத்தி குளிரூட்டும் சாதனம் உள்ளது. மையக்கரு பொருள் எரிந்தாலும் கதி்ர்வீச்சைத் தடுக்கும் கோர்கேச்சர் சாதனம் உள்ளது.

அரசின் சட்டரீதியான விஷயங்களில் மத்திய குழு கேள்வி எழுப்ப முடியாது. எங்களது வரையறைக்கு உட்பட்டுத்தான் நாங்கள் பேச முடியும். நாங்கள் மீண்டும் மாநிலக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை.

கடந்த 8ம் தேதி நடந்த கூட்டத்தின்போது போராட்டக்காரர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவைப் படித்தோம். அதன்பிறகு நாங்கள் கடந்த 3 நாட்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தோம். மேலும் கூடங்குளம் மக்களையும் சந்தித்து பேசினோம்.

போராட்டக்காரர்கள் தரப்பில் 50 கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நாங்கள் 38 பக்கங்களில் விளக்கம் தந்துள்ளோம். மேலும் விவரங்களை அவர்கள் அணு சக்தி இணையதளத்தில் காணலாம் என்றோம். ஆனால் அதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.

மேலும் அணு உலையின் டிசைன் மேப்பைக் கொண்டுவா, அது தொடர்பான அரசு ஒப்பந்தத்தைக் கொண்டு வா என்கிறார்கள். இதெல்லாம் எதற்கு. அவர்களது நோக்கம் புரியவில்லை.அவர்களுக்கு வேறு அஜென்டா இருக்கலாம். அது எங்களுக்குப் புரியவில்லை.

நாங்கள் அணு உலையையும், மின்சார நிலையத்தையும் முழுமையாகப் பார்த்து விட்டோம். இதற்கு முன்பு நடந்த 3 அணு உலை விபத்துக்களையும் ஆராய்ந்து விட்டோம். எங்களுக்கு முழுமையாக திருப்தி. எல்லாம் பாதுகாப்பாக உள்ளது. உள்ளே சின்னச் சின்ன சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் அது வெளியே ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. மக்கள் பாதுகாப்பில் ஒரு பிரச்சினையும் இல்லை.

போராட்டக்குழு சார்பில் 8 கேள்விகளை எழுப்பினர். அதில் ஒரு கேள்வியில் 50 சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். அதில் பல தேவையில்லாத சந்தேகங்கள். இதற்கும் மத்திய குழு சார்பில் ஒரு பதில் அறிக்கை வழங்கப்பட்டது.

உங்களது லெக்சரை கேட்க நாங்கள் வரவில்லை. நீங்களாகவே உங்களை அறிவாளிகளாக கருதிக் கொள்ள முடியாது என்றனர். மிகவும் சந்தோஷம். நாங்கள் அறிவாளிகளாக இல்லையா என்பதை சொல்ல வேண்டியது மற்றவர்கள்தான்.

உலகம் முழுவதும் 433 அணுமின் நிலையங்கள் உள்ளன. மேலும் 65 அணுமின் நிலையங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மக்கள் தேவையின்றி பயப்பட வேண்டாம்.

மக்களுக்கு உண்மையை மட்டுமே சொல்ல விரும்புகிறோம். பொய் சொல்லி மக்களைக் குழப்ப விரும்பவில்லை, நினைக்கவில்லை. அதைச் செய்யவும் விரும்பவி்ல்லை.

பேச்சுவார்த்தை தொடரும். சுமூக தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்றார்.

இதற்கிடையே மத்திய குழுவில் இடம் பெற்றிருந்த சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா கூறுகையில்,

கூடங்குளம் அணுமி்ன் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. அங்கு கதிர்வீச்சு அபாயமே இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக