வெள்ளி, 18 நவம்பர், 2011

பஸ் கட்டண உயர்வு: ஆண்டுக்கு ஒரு முறை தான் சொந்த ஊரைப் பார்க்க முடியும்- பொது மக்கள்

அதி நவீன சொகுசு பேருந்துகளுக்கு இணையாக தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் டப்பா பேருந்துகளும் கட்டணம் வசூலிப்பதால் பொது மக்கள் உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக செங்கோட்டை கிளையின் மூலம் சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் தொலை தூர பகுதிகளுக்கும், இராணகுளம், புதுவை, திருப்பதி, பெங்களூரு போன்ற பிற மாநில பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய பகுதி என்பதால் இங்குள்ள பலர் புதுவை, கோவை போன்ற பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளின் கட்டணத்தை கடு்மையாக உயர்த்தியுள்ளது.
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 445 ரூபாயாகவும், கோவைக்கு 225 ரூபாயாகவும் இருந்த கட்டணம் தற்போது 275 ரூபாயாகவும் இரா,ணகுளத்திற்கு 345 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 425 ரூபாயாகவும், பெங்களூருக்கு 420 ரூபாயாக இருந்த கட்டணம் 520 ரூபாயாகவும், திருப்பதிக்கு 390 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 505 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பல பகுதிகளில் பணிபுரியும் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் இனி தங்களது சொந்த ஊரை மறந்து விட வேண்டியது தான் என்றும், ஆண்டிற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்பவர்கள் இனி பல ஆண்டுக்கு ஒரு முறைதான் குடும்பத்துடன் வந்து செல்ல முடியும் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக