திங்கள், 14 நவம்பர், 2011

குவைத்தில் இலங்கைப் பெண்ணின் உடல் உறுப்புக்கள் சில அகற்றப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணைகள்!

கொழும்பு: குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் உடல் உறுப்புக்கள் சில அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் குறிப்பிடுகின்றது.
இந்த விடயம் குறித்து குவைத் அதிகாரிகளைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் பிரேமரத்ன தெரிவித்தார்.
கொக்கிராவை விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 28 வயதான பணிப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே இந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் வாய்ப்பினைப் பெற்றுச் சென்றுள்ளார்.
இந்தப் பணிப்பெண் உயிரிழந்து 15 நாட்களின் பின்னரே அவரின் சடலம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அது குறித்த பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் குறித்த மரண விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைப் பணிப்பெண்ணின் உடல் உறுப்புகள் சில அகற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பணிப்பெண் உயிரிழந்தமை குறித்து எந்தவொரு தரப்பினராலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று அந்த பெண்ணின் சகோதரர் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

இலங்கைப் பெண் உயிரிழந்தமை தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் வினவியது.

அது குறித்து விசாரணைகளின் பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக