திங்கள், 14 நவம்பர், 2011

2ஜி நஷ்டம் தொடர்பான அறிக்கையில் கட்டாயப்படுத்தி என்னிடம் கையெழுத்து வாங்கினர்-ஆர்.பி.சிங்

RP Singh
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நஷ்டம் தொடர்பான அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கினர். அந்த விவகாரத்தில் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப் போல 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கெல்லாம் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ரூ. 2645 கோடி நஷ்டம்தான் ஏற்பட்டது என்று கூறியுள்ளார் மத்திய தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங்.
கணக்குத் தணிக்கைக்கான இயக்குநராக இருந்தவர் ஆர்.பி.சிங். அவர் அப்பதவியில் இருந்தபோதுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பு குறித்த அறிக்கை வெளியாகி நாட்டையே உலுக்கியது.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியது. இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.

ஆனால், ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கூட்டு நாடாளுமன்றக் குழு அவரை நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க அழைப்பு விடுத்தது. இதையடுத்து இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் சிங். அவரிடம் கூட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது சிங் கூறியதாவது:

ஆரம்பத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் வருவாய் குறித்த கணக்கெடுப்புக்கெல்லாம் திட்டமிடப்படவில்லை. பின்னர்தான் அதை சேர்த்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக டிராய் எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கவில்லை. மத்திய அமைச்சரவையும் அதே முடிவில்தான் இருந்தது. எனவே ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கெல்லாம் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாக கணக்கிடவும் முடியாது.

என்னைப் பொறுத்தவரை ரூ. 2645 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என திடமாக கருதுகிறேன். இந்த நிலையிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லை. மேலும் சிஏஜியின் முந்தைய அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கினர் என்று சிங் கூறியதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக