சனி, 26 நவம்பர், 2011

Anna ஹஸாரே அடித்த பல்டிகளில் லேட்டஸ்ட் பல்டி

“இந்தியாவிலேயே ஊழலற்ற மாநிலம் குஜராத்தான். நரேந்திர மோதி அப்பழுக்கற்றவர், மிகச் சிறந்த நிர்வாகி”, என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். மோதியும், இப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்தால் உங்களைச் சிலர் களங்கப் படுத்த முயல்வர் என்று கடிதம் எழுதினார் ஹஸாரேவுக்கு. அதற்கெல்லாம் சளைத்தவன் நானல்ல என்று மார் தட்டினார் அன்னா. கடைசியில் என்னவாயிற்று? அன்னா ஹஸாரேயின் மதச்சார்பின்மை கேள்விக்குரியதாகிறது, அவர் பாஜக அனுதாபி, ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவக் போல் பேசுகிறார் என்று மதச்சார்பற்ற மாந்தர்கள் குரலெழுப்பவும், எதற்கு வம்பு என்று, “குஜராத்தைப் போல் ஊழல் மலிந்த மாநிலம் உலகிலேயே இல்லை” என்று ஒரே போடாகப் போட்டார். முன்பு அப்படிச் சொன்னீர்களே, பிறகு ஏன் இப்படி என்று மீடியாக்கள் இவரைக் கேட்கவில்லை, அதுவும் மதச்சார்பின்மைக்கு எதிராக முடியுமென்பதால். இவ்வாறாக காந்தியவாதி, சமூக சேவகர் என்ற பட்டங்களுடன் மீடியாக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த அன்னா தற்போது முக போல் முன்னுக்குப் பின் முரணாக தினமும் எதையாவது ஒன்றைப் பேசி வருகிறார். கூட்டம் கூட்டிக் காண்பித்தாயிற்று, மீடியாக்கள் மூலம் மக்கள் ஆதரவு இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியாயிற்று, இனி எது சொன்னாலும் எடுபடும் என்ற அளவில் அன்னாவின் பேச்சுக்கள் இருக்கின்றன.
மௌன விரதம் இருக்கிறேன் என்றால் உடனே ஒரு பேப்பர் பேனாவை கொடுத்து மீடியா பேட்டி எடுக்கும் நிலைக்கு வந்த பின்னர் என்ன செய்வது என்று அவருக்கும், மீடியாவிற்கு தெரியவில்லை.

காங்கிரஸை ஊழல் மலிந்த கட்சி என்றார். ஹிமாச்சலில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கனவே பாஜக கூட்டணி வசமிருந்த தொகுதியாதலால், பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது. அன்னா ஹஸாரேவால் காங்கிரஸ் தோல்வி என மதச்சார்பற்ற மீடியாக்கள் வரிந்து தள்ளின. சற்று நேரத்திற்கெல்லாம், ஜன் லோக்பாலை அரசு நிறைவேற்றினால் காங்கிரஸுக்காகப் பணியாற்றுவேன் என்று அந்தர் பல்டியடித்தார்.
இவ்வாறாக அடித்த பல்டிகளில் லேட்டஸ்ட் பல்டி, நேற்றைய பல்டிதான். இந்த பல்டியில்தான் சற்றே சறுக்கி விட்டார். மீடியாக்கள் கூட கேள்வி கேட்க ஆரம்பித்த்தால், அன்னாவே நிலை தடுமாறித்தான் விட்டார். நேற்றைய தினம், மத்திய அமைச்சர் ஷரத் பவாரை ஹர்விந்தர் சிங் என்பவர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிபலிப்பு என்று எல்லோரும் நினைக்க அன்னாவும் அதையே நினைத்துவிட்டார்.

நேற்றைய தினம் மராட்டிய மாநிலம் புனேவில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட அன்னாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அன்னா சற்றே நக்கலான தொனியில், ஒரே ஒரு அறைதானா? என்று கேட்டார். பின்பு இது பற்றி மீடியாக்கள் பெரிது படுத்தவும், காந்தியவாதி என்ற பட்டத்திற்கு பங்கம் வந்துவிடும் என்பதால் உடனேயே வன்மையாக்க் கண்டிக்கத்தக்கது என்ற ரீதியில் ஒரு அறிக்கை வெளியிட்டார். முன்பு பேசியது எங்கு தவறாக எடுத்துக் கொள்ளப்படுமோ என்ற பதட்டத்தில், ஒரே அறைதானா அல்லது கடுமையாகத் தாக்கப்பட்டாரா என்ற ரீதியில்தான் அவ்வாறு கேட்டேன் என்றார், பிறகு மன்னிப்பு வேண்டுமானாலும் கோருகிறேன் என்றிருக்கிறார் சமீபமாக. முக கூட மஞ்சள் துண்டிற்கு இவ்வளவு விளக்கங்கள் கொடுத்திருக்க மாட்டார்.


இன்னமும் இவர் ஊழலை ஒழித்து, காங்கிரஸிடமிருந்து மக்களையும், இந்தியாவையும் காப்பாற்றி விடுவார் என விடாமல் பகல் கனவு காண்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாவை காந்தியவாதி என்கிறார்கள். அது ஏனென்று புரிபடவே இல்லை. ஷரத் பவாரை ஒரே ஒரு அறைதான் அறைந்தார்களா என்று ஆவலுடன் கேட்கிறார்; எங்கள் ஊரில் குடிப்பவர்களை எல்லாம் மரத்தில் கட்டி வைத்து அடிப்போம் என்கிறார். இதெல்லாம் காந்தியவாதி செய்யும் செயல்களாகத் தெரியவில்லை. அமைப்பிற்கு நன்கொடை என்ற பெயரில் வந்த பணத்தில் பேர்பாதி கணக்கில் வராத பணமாம், அதையும் திருப்பிக் கொடுக்கிறார்களாம். வாங்கும்போது அது தெரியவில்லையா? அல்லது பேசியதை மாற்றி மாற்றி பிறழ்ந்து பேசுபவர்களெல்லாம் காந்தியவாதிகளா?


இது தெரியாது மீடியா ஒருவரை கொஞ்சம் நேரம் காண்பித்தால் தமிழ் இலக்கிய உலகம் உடனே இன்ஸ்டண்ட் தொடர், கேள்வி பதில், அதை தொடர்ந்து புத்தகம் என்று நல்ல காமெடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக