செவ்வாய், 1 நவம்பர், 2011

நடிகை வைஷ்ணவி தற்கொலை: நடிகருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை


சென்னை அண்ணாநகர் 11வது பிரதான சாலையில் வசித்தவர் வைஷ்ணவி. இவரது தந்தை நெல்காட் நிறுவனத்தின் துணை மேலாளராக இருக்கிறார். வைஷ்ணவி,  பாபா', தீனா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சில டி.வி. தொடர்களிலும் நடித்திருக்கிறார்.<
வைஷ்ணவிக்கும், தேவ் ஆனந்த் (வயது 34) என்ற டிவி. நடிகருக்கும் நட்பு உண்டு. தேவ் ஆனந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவர்,  செல்லமே',  மனைவி' ஆகிய டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். 2006 ம் ஆண்டு தாயாருடன் வைஷ்ணவி மலேசியாவுக்கு சென்றிருந்தார். வைஷ்ணவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவ் ஆனந்தும், சிலருடன் மலேசியாவுக்கு சென்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு 10 நாட்களுக்குப் பிறகு, வைஷ்ணவியை 15.4.06 அன்று தேவ் ஆனந்த் சென்னை இ.சி.ஆர். சாலைக்கு காரில் அழைத்து சென்றார். இரவு வீட்டுக்கு திரும்பி வரும்போது, வைஷ்ணவியின் முகத்தில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

இதுபற்றி பெற்றோரிடம் வைஷ்ணவி கூறினார். 2 வது மனைவியாக ஆக வேண்டுமென்று தேவ் ஆனந்த் வற்புறுத்தியதாகவும், நண்பர்களாகவே தொடரலாம் என்று கூறி திருமணத்துக்கு மறுத்ததால் தன்னை தேவ் ஆனந்த் அடித்ததாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து மேத்தா நர்சிங் ஹோமில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நடிகை என்ற அளவில் பெயர் கெட்டுவிடும் என்பதால் தேவ் ஆனந்த் மீது போலீசில் புகார் கொடுக்க வைஷ்ணவி மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் 17.4.06 அன்று வீட்டில் இருந்து வைஷ்ணவியின் தாயார், தங்கை வெளியே சென்றுவிட்டனர். வைஷ்ணவி மட்டும் தனியாக இருந்தார். பிற்பகலில் தங்கை வந்து பார்த்தபோது வைஷ்ணவி தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.
உடனே அவரை சுந்தரம் பவுண்டேஷன் ஆஸ்பத்திரிக்கு வைஷ்ணவியை கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தேவ் ஆனந்த் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வைஷ்ணவியை 2 வது திருமணத்துக்கு வற்புறுத்தியதாலும், தாங்க முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாலும், திருமணத்துக்கு மறுத்ததால் வைஷ்ணவியை அடித்து காயப்படுத்தி மோசமாக நடந்துகொண்டதாலும், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தேவ் ஆனந்த் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது தொடரப்பட்ட வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சேதுமாதவன் தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பு வருமாறு:
இந்த வழக்கில் தேவ் ஆனந்தின் மனைவி எதிர்த்தரப்பில் சாட்சி அளித்தார். தனக்கு குழந்தை இல்லை என்பதால், வைஷ்ணவியை 2 வது திருமணம் செய்வதற்கு தேவ் ஆனந்துக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வைஷ்ணவியின் பெற்றோரை 3 முறை தேவ் ஆனந்தின் மனைவி சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம் வைஷ்ணவியின் 2 வது திருமணம் பற்றி அவரது பெற்றோரிடம் பேசியிருக்கலாமே. ஆனால் அப்படி பேசியதாகத் தெரியவில்லை. எனவே அந்த சாட்சியை ஏற்க முடியாது.
2 வது திருமணத்துக்கு வைஷ்ணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தேவ் ஆனந்த் தரப்பு வக்கீல் கூறுகிறார். ஆனால் அவர்களுக்கு இந்த விவகாரம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தேவ் ஆனந்தின் மனைவி கூறுகிறார். தெரியாத விஷயத்தை எப்படி எதிர்ப்பார்கள்?
தேவ் ஆனந்தும், வைஷ்ணவியும் காதலித்ததாக எதிர்த்தரப்பில் 2 நடிகர்கள் சாட்சி அளித்தனர். ஆனால் அவர்கள் காதலித்ததை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறவில்லை. மேலும் தேவ் ஆனந்தால் ஏற்பட்ட காயத்தை வைத்து பார்க்கும்போது, 2 வது திருமணத்தை வைஷ்ணவி விரும்பவில்லை என்பது தெரிகிறது.
எனவே தேவ் ஆனந்தை, வைஷ்ணவி காதலிக்கவில்லை. காதலித்து இருந்தால் திருமணத்துக்கு தேவ் ஆனந்த் வற்புறுத்தும் நிலை வந்திருக்காது. மேலும் வைஷ்ணவி தற்கொலை செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு செல்போன் மூலம் வைஷ்ணவியை, தேவ் ஆனந்த் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
இவற்றின் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வைஷ்ணவிக்கு காயங்களை ஏற்படுத்திய குற்றத்துக்காக ஒருமாத கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது.
தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டதும், தேவ் ஆனந்த் தேம்பித்தேம்பி அழுதார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக