செவ்வாய், 1 நவம்பர், 2011

சீல் வைக்கப்பட்ட தி.நகர் கடைகளின் மின்சார, குடிநீர், கழிவுநீர் இணைப்பு 'கட்'!


T Nagar Shops
சென்னை: சென்னை தி.நகரில் நேற்று சீல் வைக்கப்பட்ட கடைகளின் மின்சார, குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகளை இன்று அதிகாரிகள் துண்டித்ததால் அந்த நிறுவனங்களைச் சேர்ந்தோர் மேலும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிககையில் இறங்கி விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 25 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சீல் வைத்தனர்.இதனால் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையைக் கண்டு அதிர்ந்து போயுள்ள இந்த கடைக்காரர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதால் இதில் எப்படி அணுகுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அதேசமயம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரும் என தமிழக அரசு அறிவித்து விட்டது. இதனால் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது. மக்கள் நடமாட்டம் சுத்தமாக இல்லாமல் போய் விட்டது.

இந்தநிலையில் இன்று காலையில் மூடப்பட்ட கடைகளுக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் மூடப்பட்ட கடைகளை யாரேனும் திறந்துள்ளனரா என்று சோநனை நடத்தினர். பின்னர் அந்தக் கடைகளுக்குரிய மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு ஆகியவற்றை துண்டித்து விட்டுச் சென்று விட்டனர்.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அதிகாரிகள் அதை பொருட்படுத்தவில்லை. சட்டப்படிதான் செய்கிறோம் தடுக்க முயற்சிக்காதீர்கள் என்று அவர்களை எச்சரித்து விட்டுச் சென்றனர். இதனால் வியாபாரிகளும், நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களும் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக