வெள்ளி, 18 நவம்பர், 2011

கடனை திருப்பி செலுத்தாத 100 'டாப்' தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிடுமா ரிசர்வ் வங்கி?


டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்றுவிட்டு திரும்பச் செலுத்தாத பெரும் தொழிலதிபர்களின் பெயர்களை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
பெரிய நிறுவனங்களின் தொழிலதிபர்கள் பலர் பொதுத்துறை வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனை பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்துவதாகவும், இதனால் வாராக்கடன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்

ஹரியானாவைச் சேர்ந்த கபூர் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்தார். பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மத்திய தகவல் ஆணையம் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி ஆட்சேபம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையில் இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்துள்ளது.

100 பேரின் பட்டியல் வெளியிட வேண்டும்

மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஷைலேஸ் காந்தி இதனை ஏற்றுக் கொண்டபோதிலும், அதிக அளவு கடன் வாங்கியுள்ள பெரும் தொழிலதிபர்களில் முதல் 100 பேர் அடங்கிய பட்டியலை கண்டிப்பாக ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டுமென்று கூறியுள்ளார். அவர்கள் வாங்கியுள்ள கடன் அளவு, அதற்கான வட்டி, அவர்கள் செய்யும் தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆண்டுதோறும் இந்த விவரங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக