வியாழன், 6 அக்டோபர், 2011

சிதம்பரத்தின் தூக்கத்தை கெடுத்த R.ராசா



சிதம்பரத்துக்கு, ஆ.ராசா அதிரடியாக கொடுத்துள்ள ‘தூங்காத இரவுகள்’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அடுத்த திருப்பம். நடந்துள்ளது. தற்போது திகார் சிறையில் இருக்கும் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளார். இதே ஆ.ராசா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரடியாக வாதம் செய்யத் தொடங்கியபோதுதான், உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சாதுர்யமாக இந்த வழக்குக்குள் புகுத்தினார்.
அதையடுத்தே அமைச்சர் சிதம்பரத்துக்கு தூக்கம் பறிபோனது!
உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விரும்புவதற்கான மனுவை ஆ.ராசா, நேற்று (புதன்கிழமை) சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விரும்பும் தேதியாக, அக்டோபர் 10ம் தேதியை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ராசா.
மனு, நிராகரிப்பதற்கு கடினமான காரணத்துடன் திறமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. “எனக்காக வாதாடும் வக்கீல்கள் சரியான விவரம் இன்றி தகவல்களை அளிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
அவற்றைத் தவிர்க்க விரும்புகிறேன். என்னுடைய நிலைப்பாட்டை நானே நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்பதே தனது மனுவில் அவர் கூறியுள்ள காரணம்.
இந்திய குற்றவியல் சட்டம், “குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தனது தரப்பை எடுத்துரைக்க சரியான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என்று கூறுகின்றது.
உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், நீதிமன்றத்தில் தாம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு தாமே நேரில் பதிலளிக்க விரும்புவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார் ராசா. அடுத்த திங்கட்கிழமைக்காக கோரப்பட்ட அனுமதி பற்றிய இந்த மனுவை, நாளை (வெள்ளிக்கிழமை) விசாரித்து முடிவெடுப்பதாகக் கூறியிருக்கிறார், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி.
இங்குள்ள மற்றொரு முக்கிய விஷயம், அதே அக்டோபர் 10ம் தேதி, அதே உச்ச நீதிமன்றத்தில்தான், இதே வழக்கு தொடர்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வருகின்றது. இந்த ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய விவகாரத்தில் ப.சிதம்பரமும் ஈடுபட்டிருப்பதால், அவரையும் விசாரிக்க வேண்டும் என்பது சுவாமி தரப்பு வாதம்.
இதற்குமுன் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசா நேரில் ஆஜராகி தனக்காக தானே வாதாடியபோது, “இந்த விவகாரத்தில் நான் எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் ப.சிதம்பரம் உறுதுணையாக இருந்துள்ளார். அவரை சாட்சியாக்க விசாரிப்பதன் மூலமே இந்த வழக்கில் எனது பங்கு பற்றி தெளிவாக விளக்க முடியும். மேலும், நீதிமன்றம் விரும்பினால், இந்த வழக்கில் பிரதமரையும் விசாரிக்கலாம்” என்று கூறியிருந்தார்.
மொத்தத்தில், இந்த விவகாரத்தில் பிணாப் முகர்ஜியுடன் ஏற்பட்ட இழுபறியில் இருந்து ஒருவழியாக வெளியேவந்து இப்போதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு, மறுபடியும் தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்துள்ளார் ஆ.ராசா!
-டில்லியிலிருந்து சம்பத் குமாரின் குறிப்புகளுடன், ரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக