வியாழன், 6 அக்டோபர், 2011

இந்தியாவால் மட்டும் எப்படி அதிக விமானங்களை வாங்க முடிகிறது?

இந்தியர்களிடம் ஏது இவ்வளவு பணம்? இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவைகளின் வெற்றி, பாரிஸ் ஏர் ஷோவில் மிக அருமையாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.  காரணம் என்ன? ஐரோப்பிய, வட அமெரிக்க  விமான நிறுவனங்கள் எல்லாம் பாக்கெட்டுக்குள் கையை வைத்தபடி யோசித்துக் கொண்டிருக்க, இந்திய விமான நிறுவனங்கள் பாய்ந்து பாய்ந்து விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றன இன்டர்நேஷனல் ஏவியேஷன் நியூஸ் சஞ்சிகை, “இந்திய குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் வர்த்தகம், ஐரோப்பிய விமான நிறுவனங்களை மலைக்க வைத்திருக்கின்றது” என எழுதியுள்ளது.
உலக விமான வர்த்தகம், இந்த வருடத் தொடக்கத்திலிருந்தே தனது காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பெரிய விமான நிறுவனங்களுமே, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நஷ்டக் கணக்கே காட்டியுள்ளன.
உலகளவில் வர்த்தகம் அப்படியிருக்க, இந்திய நிறுவனங்களால் எப்படி இவ்வளவு எண்ணிக்கையில் விமானங்களை வாங்க முடிகின்றது என்பதே, பாரிஸ் ஏர் ஷோ புள்ளிவிபரங்களைப் பார்த்த பலரது கேள்வியாக இருந்தது.
ஏர்பஸ் தயாரிப்பாளரிடம், இந்திய விமான நிறுவனம் கோ-ஏர் மிகப்பெரிய ஆர்டர் ஒன்றைக் கொடுத்துள்ளது. சாதாரணமாக எந்தவொரு மிட்-சைஸ் விமான நிறுவனத்தாலும் கொடுக்க முடியாத அளவில், 72 விமானங்களுக்கான (ஏர்பஸ் A320) ஆர்டர் அது. அதன் மொத்த மதிப்பு, 7.2 பில்லியன் டாலர்.
கடந்த நவம்பரில்தான் இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட், 30 விமானங்களுக்கு(737-800s) ஆர்டர் கொடுத்திருந்தது. அதிலிருந்து 2 மாதங்களில் இந்தியாவிலிருந்து அடுத்த பெரிய ஆர்டர் வந்தது. ஜனவரியில் இன்டிகோ ஏர்லைன்ஸ் ஆர்டர் கொடுத்த விமானங்களின் (ஏர்பஸ் A320 Neos) எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 180!
குறைந்த கட்டண சேவைகளில், இன்-ஃபிளைட் சர்விஸ் அப்படி ஒன்றும் அற்புதமாக இருக்காது! ஆனால் லாபம் வருகிறது!
இவர்களைவிட பெரிய நிறுவனங்களான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரண்டும் தமது புதிய ஆர்டர்களுக்குத் தயாராகின்றன என ஏஞ்சல் புக்கிங் தகவல்கள் கூறுகின்றன.
இந்திய நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பாரிஸ் ஏர் ஷோவில், பெரிய ஆர்டர் கொடுத்ததாக அறிவிக்கப்படவுள்ள விமான நிறுவனங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, பிலிப்பீன்ஸின் சிபு பசிபிக் ஏர்வேஸ். மற்றையது மலேசியாவின், ஏர் ஏசியா. இவை இரண்டும் முறையே 45, 28 விமானங்களுக்கான ஆர்டர்களுடன் இருக்கின்றன.
மற்றொரு விஷயம், ஆசிய விமான நிறுவனங்கள்,  இப்படியான ஏர் ஷோக்களில் போயிங்கின் ஸ்டால் பக்கமாக தலையைக் காட்டுவதேயில்லை. எல்லோருமே ஐரோப்பிய தயாரிப்பாளரான ஏர்பஸ் ஸ்டால்களைச் சுற்றிச் சுற்றியே வருகின்றார்கள்.
புரியாத ஒரு விஷயம், என்ன தெரியுமா? இந்தியா போன்ற நாட்டுக்கு (நாட்டில் பாதிக்கு மேல், நீளம் குறைந்த ரன்வேகள்) அற்புதமான 800 சீரீஸ் விமானங்களை, போயிங் தமது 737 மாடலில் வைத்திருக்கிறது. உண்மையில், சிங்கிள்-ஐல் (narrow-body aircrafts) விமானங்களில், இந்தியாவுக்கு பொருத்தமான தேர்வு, போயிங்கின் B737-800 விமானங்கள்தான்.
ஆனால், யாருக்குமே (ஸ்பைஸ்ஜெட் நீங்கலாக) அதில் நாட்டமில்லை. அநேகமாக ஏர்பஸ்ஸின் பல்க்-பிரைஸிங் (மொத்த விலை?) காரணமாக இருக்கலாம்.
எப்படியோ, ஐரோப்பாவில் நடைபெறும் விற்பனையில், அதிக விமானங்களை வாங்குவது ஆசிய நிறுவனங்களே. எந்தவொரு ஐரோப்பிய விமான நிறுவனமும், பாரிஸ் ஏர் ஷோவில் 5 விமானங்களுக்கு மேல் ஆர்டர் கொடுக்க தயாராக இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக